புகழேணியில் வேகமாக முன்னேறிக் கொண்டிருந்தபோது, வாலி திருமணம் செய்து கொண்டார். இது காதல் திருமணம்; ரகசியத் திருமணமும் கூட!
ஒரு நாள் எம்.ஜி.ஆரை வாலி சந்தித்துப் பேசிக்கொண்டிருந்தபோது, "வாலி! காலா காலத்தில் ஒரு கல்யாணம் செய்து கொள்ளுங்க! நிறைய பணம் சம்பாதிக்கிறபோது, தனி மனிதனா இருந்தா தப்புத் தண்டாவுலே புத்திப்போகும். நீங்க உங்களுக்குப் பிடிச்ச பொண்ணைச் சொல்லுங்க. நான் முன்நின்று உங்க கல்யாணத்தை நடத்தி வைக்கிறேன்...'' என்று எம்.ஜி.ஆர். பாசத்துடன் சொன்னார்.
அப்படியிருந்தும், எம்.ஜி.ஆருக்கே தெரியாமல் வாலியின் ரகசிய திருமணம் நடந்தது.பிரபல திரைப்பட கவிஞராக உயர்ந்த பிறகும், வாலிக்கு நாடக ஆசை விடவில்லை. "லவ் லெட்டர்'' என்ற நாடகத்தை எழுதினார். ஏவி.எம்.ராஜன், ஜாவர் சீதாராமன், `காக்கா' ராதாகிருஷ்ணன் ஆகியோர் இதில் நடிக்க இருந்தனர்.
நாடக ஒத்திகை, அடிக்கடி வாலியின் வீட்டில் நடந்தது.இந்த நாடகத்தில் கதாநாயகியாக நடிக்க, திலகம் என்ற பெண்ணை வாலி ஒப்பந்தம் செய்திருந்தார். இவர், வழுவூர் ராமையா பிள்ளையிடம் பரதம் பயின்றவர். நடிகைகள் பத்மினி, ஈ.வி.சரோஜா ஆகியோருடன் சேர்ந்து நடனம் ஆடியவர். எஸ்.வி.சகஸ்ரநாமத்தின் "குயில்'' நாடகத்தில் கதாநாயகியாக நடித்தவர்.
திலகத்தை மணந்து கொள்ள வாலி விரும்பினார். ஆனால் காதல் ஏற்படவில்லை.
இதுபற்றி வாலி எழுதியிருப்பதாவது:-"நேசித்த பெண்ணை மணந்து கொள்ள வேண்டும் என்று, அல்லும் பகலும் அதே சிந்தனையில் இருந்தேன். அவள் பிடி கொடுத்துப் பேசவில்லை.
இருப்பினும், அவளது சித்திரத்தை அழித்துவிட்டு இன்னொரு சித்திரத்தை எழுதிப் பார்க்க என் மனம் தயாராயில்லை.
அப்படி ஒரு காதல் தவத்தில் நான் ஈடுபட்டிருந்த நாளில்தான், "எங்க வீட்டுப்பிள்ளை'' படத்திற்காக பாடல் எழுத உட்கார்ந்தேன்.
டைரக்டர் சாணக்யா, பாடல் காட்சியை விளக்கினார்.
"கதாநாயகன், தான் விரும்பும் பெண்ணின் உள்ளத்தில் இடம் பெற்று விடவேண்டும் என்று படாதபாடு படுகிறான்'' என்று கூறி, அதற்கேற்ப பாடல் எழுதச் சொன்னார்.
கதாநாயகனின் உள்ளுணர்விலேயே நானும் இருந்ததால், என் உள்ளக்கிடக்கையை அப்படியே பாடலாக்கினேன்.
"குமரிப்பெண்ணின் உள்ளத்திலே குடியிருக்க நான் வரவேண்டும்; குடியிருக்க நான் வருவதென்றால் வாடகை என்ன தரவேண்டும்?'' - இந்தப் பாட்டின் தாக்கத்தால், என் காதலி மனம் கசிந்தாள்; என் காதலுக்கு பச்சைக்கொடி காட்டினாள்.''
இவ்வாறு வாலி கூறியுள்ளார்.
திருமணத்தை எளிய முறையில் நடத்த வாலி விரும்பினார். அதனால், உடன் பிறந்த சகோதர -சகோதரிகளிடமோ, எம்.ஜி.ஆர்., எம்.எஸ்.விஸ்வநாதன் போன்ற மிக மிக நெருங்கிய நண்பர்களிடமோ கூட சொல்லாமல், திருமண பத்திரிகை கூட அச்சிடாமல், கீழத்திருப்பதியில் திருமணத்தை நடத்த முடிவு செய்தார்.
திருமணத்துக்கு மண்டபம் ஏற்பாடு செய்ய, தன் நண்பர் வி.கோபாலகிருஷ்ணனுடன் காரில் புறப்பட்டார், வாலி. கோபாலகிருஷ்ணன்தான் காரை ஓட்டினார்.
அதன்பின் நடந்தது பற்றி வாலி கூறியதாவது:-
"ஒரு குக்கிராமத்தில் கார் நுழையும்போது எதிர்பாராதவிதமாக ஓர் ஐந்து வயதுப் பெண் குழந்தை குறுக்கே ஓடி வந்து, கார் ஹெட்லைட்டில் லேசாக அடிபட்டு, சிறிய காயத்தோடு தப்பியது.
குழந்தையின் தாய் பரபரப்போடு ஓடிவந்து, மகளை அள்ளி மார்போடு அணைத்துக்கொண்டாள். நானும், கோபியும் வண்டியை விட்டு இறங்கி, "குழந்தை எதிர்பாராமல் குறுக்கே ஓடிவந்ததால்தான், இப்படி ஆயிப்போச்சு... இதுல எங்க தவறு எதுவுமில்லை. இருந்தாலும், பெரிய மனசு பண்ணி நீங்க மன்னிக்கணும்'' என்று குழந்தையின் தாயிடம் சொன்னோம். அந்த அம்மையார் அதில் சமாதானமடைந்து, ஊரைக்கூட்டி விவகாரம் செய்யாமல் எங்களை மேற்கொண்டு பயணிக்க அனுமதித்தார்.
"வாலி! இப்படி ஒரு சின்ன ஆக்சிடெண்ட் ஆயிடுச்சே! மெட்ராசுக்கே திரும்பிடலாமா...?'' என்று கோபி என்னிடம் கேட்டார்.
"ஏன்? இதனால் என்ன?'' என்றேன் நான்.
"கல்யாணத்திற்கு இடம் பார்க்கப் போகிறோம், சகுனமே சரியில்லையே'' என்றார் கோபி."எனக்கு இதிலெல்லாம் நம்பிக்கையில்லை. இந்தக் கல்யாணத்துல கடவுளுக்கு இஷ்டமில்லைன்னாதான் நடக்காது. மத்தப்படி, இது மாதிரி விஷயங்களுக்கு நாம் முக்கியத்துவம் கொடுக்கத் தேவையில்லை'' என்றேன் நான்.
கோபி, மவுனமாகக் காரை ஓட்டிக்கொண்டு வந்தார். திடீரென்று வயல் வெளியில் மேய்ந்து கொண்டிருந்த மாடு ஒன்று, வாலை நிமிர்த்தி சிலிர்த்துக்கொண்டு பாதையின் குறுக்கே ஓடிவந்தது.
அதன் மீது கார் மோதாமலிருக்க கோபி பிரேக்கின் பெடலை அமுக்க, எதிர்பாராமல் வண்டி நிலை குலைந்து பாதையை விட்டு வயக்காட்டில் இறங்கி ஒரு குலுக்கலோடு நின்றது. எனக்கும் கோபிக்கும் உச்சந்தலையிலும், முன் நெற்றியிலும் லேசான சிராய்ப்புகள்.
"சகுனம் சரியில்லை... வாங்க, வாலி! ஒழுங்கா நாம் மெட்ராசுக்கே திரும்பிடலாம்'' என்றார், கோபி.வயக்காட்டில் வேலை செய்து கொண்டிருந்தவர்கள் துணையோடு, எங்கள் கார், பள்ளத்திலிருந்து பாதைக்குக் கொண்டு வரப்பட்டது.
"இப்போதைக்கு உங்க கல்யாணத்தைத் தள்ளிப்போட்டுடுங்க. ஒண்ணு ஒண்ணா தடங்கல் வந்துக்கிட்டேயிருக்கு'' என்றார் கோபி. நான் அதற்கு உடன்படவில்லை.
"கோபி! எண்ணித் துணிஞ்சாச்சு... துணிஞ்சப்புறம் எண்றதே இழுக்கு... கல்யாணம் ஏப்ரல் 7-ந்தேதி, திருச்சானூர் கோவில் சத்திரத்தில் நடந்தே தீரணும்... என் முடிவை நான் மாத்திக்கறதா இல்லை... நீங்க வராட்டி, நான் நடந்தே திருப்பதி போயிடுவேன்'' என்று சொன்னதும் கோபி சிரித்து விட்டுப் பேசினார்.
"ஏப்ரல் 7-ந்தேதி சத்திரம் கிடைக்கல்லேன்னா...?''"அப்ப, இந்தக் கல்யாணத்தைத் தள்ளிப்போடக் கடவுள் விரும்புறார்னு நினைப்பேன்.''
என் உறுதியைப் பாராட்டி கோபி, திருப்பதியை நோக்கிக் காரைச் செலுத்தினார்.
கோபி, சொன்னது ஒரு விஷயத்தில் உண்மைதான். கீழத்திருப்பதி, திருச்சானூர் கோவில் கல்யாண மண்டபம் அவ்வளவு சுலபமாகக் கிடைக்கக்கூடிய இடமில்லை. ஏனெனில் ஏகப்பட்ட முகூர்த்தங்களுக்கான மாதம் அது. மூன்று மாதங்களுக்கு முன்னதாகவே பலர் ரிசர்வேஷன் செய்திருக்க நிறைய வாய்ப்பு உண்டு.
திருப்பதி தேவஸ்தான பேஷ்கார், கோபிக்கு மிக நெருங்கிய நண்பர். கீழத்திருப்பதியில் குடியிருந்த அவர் வீட்டுக்குப்போய்ச் சேர்ந்து விவரத்தைச் சொன்னோம்.
"ஏப்ரல் 7-க்கு இன்னும் ஒரு வாரமே இருக்கிறது... இப்போது கேட்டால் எப்படி? கண்டிப்பாகக் கல்யாண மண்டபம் ஏற்கனவே பதிவு செய்யப்பட்டதாக இருக்கும்...'' என்று சொன்னார் கோவில் பேஷ்கார்.
"டெலிபோன் செஞ்சு கேட்டுப் பாருங்களேன்'' என்று பேஷ்காரிடம் என்பொருட்டு வேண்டினார், கோபி.
திருச்சானூர் கோவில் நிர்வாக அதிகாரியோடு போனில் பேசிவிட்டு பேஷ்கார் சொன்னார்:"எல்லா முகூர்த்த நாட்களும் இன்னும் 3 மாதத்திற்கு `புக்' ஆகிவிட்டது. ஆனால் ஏப்ரல் 7-ந்தேதி காலியாயிருக்கு...''
உடனே நான் கோபியிடம், "இதுதான் கடவுள் திருவுள்ளம் என்பது!'' என்றேன்.
1965 ஏப்ரல் 7-ந்தேதி என் திருமணம் திருச்சானூரில் நடந்தது. மா.லட்சுமணன், "புலித்தேவன்'' பட இயக்குனர் ஏ.ராஜாராம், கோபி இவர்கள் முன்னிலையில் என் மனைவி திலகத்தின் நெற்றியில் நான் திலகம் இட்டேன்.
திருமண மண்டபத்தைத் தேர்வு செய்யப்போகும் போதே இவ்வளவு தடங்கல்கள் ஏற்படின் என்னைத்தவிர வேறு எவரேனும் இதுபோல் விடாப்பிடியாக நின்று, விவாகத்தை முடித்திருப்பார்களா என்பது சுலபமாக விடையிறுக்க முடியாத வினாவாகும்.
நான் ஆண்டவனிடத்தில் நம்பிக்கையுடையவன்.சகுனங்களிலும், ஜாதகங்களிலும் நம்பிக்கையுடையோரை நையாண்டி செய்வது நாகரிகமற்ற செய்கை என்பதில் உறுதியாக நிற்பவன். எந்த சகுனமும், எந்த ஜாதகமும் பார்க்காமல் திருமணம் செய்து கொண்ட என் குடும்ப வாழ்க்கை, எந்த சஞ்சலமும், சங்கடமுமில்லாமல் நல்லபடியாகத்தான் நாயகன் அருளால் நடந்து கொண்டிருக்கிறது.''
இவ்வாறு வாலி குறிப்பிட்டுள்ளார்.
தன் திருமணம் பற்றி யாருக்கும் வாலி தகவல் தெரிவிக்கவில்லை என்றாலும், மறுநாள் பத்திரிகைகளில் "வாலி ரகசிய திருமணம்'' என்று செய்தி வெளியாகிவிட்டது.
அதைப் பார்த்துதான், எம்.ஜி.ஆர்., எம்.எஸ்.வி. ஆகியோருக்கு வாலியின் திருமண தகவலே தெரிந்தது.
இதனால் அவர்கள் வாலியிடம் கோபித்துக்கொண்டாலும், வாலி பெரும்பாடுபட்டு அவர்களை சமாதானப்படுத்தி, வாழ்த்து பெற்றார்.