Pages

Subscribe:

Ads 468x60px

Saturday, 8 March 2014

பாலசந்தருக்கு சிவாஜிகணேசனுடன் ஏற்பட்ட அனுபவங்கள்!

சிவாஜிகணேசன் நடித்த "எதிரொலி'' என்ற ஒரே படத்தைத்தான் கே.பாலசந்தர் இயக்கினார், என்றாலும், அதற்கு முன்பே சிவாஜியுடன் பழக்கம் உண்டு.

இதுபற்றி பாலசந்தர் கூறியிருப்பதாவது:-

"சிவாஜியின் அலங்கார நிபுணரான ராமகிருஷ்ணன் என்று ஒருவர் இருந்தார். என் நாடகங்களைப் பார்த்தவர். என் கதையில் சிவாஜி நடிக்க வேண்டும், அதை மாதவன் இயக்க வேண்டும் என்று விரும்பினார்.

நானும் சரி என்று சொல்லிவிட்டேன். மாதவனுடன் உட்கார்ந்து ஒரு கதை தயார் செய்தோம்.

சிவாஜியிடம் கதை சொல்ல ஏற்பாடு நடந்தது.

"நான் நாலைந்து நாட்கள் சூரக்கோட்டைக்குப் போகிறேன். அங்கு ஓய்வு எடுக்கும் வேளையில், கதையும் கேட்கலாமே. அவர்கள் இரண்டு பேரையும் சூரக்கோட்டைக்கு அழைத்துக்கொண்டு வந்துடுங்க'' என்றார், சிவாஜி.

இதை, ராமகிருஷ்ணன் என்னிடம் தெரிவித்தார். அவருக்கு சிவாஜி ஏற்கனவே ஒரு படம் நடித்துக் கொடுத்திருக்கிறார். இது இரண்டாவது படம்.

கதை சொல்வதற்காக அதுவரை நான் எந்த வெளியூருக்கும் போனதில்லை. முதல் தடவையாக சூரக்கோட்டைக்கு சென்றேன்.

அங்கு, சிவாஜியின் வீடு பெரிதாக இருந்தது. நிறைய அறைகள் இருந்தன. மாதவன் அப்போது சிவாஜியை வைத்து படங்கள் இயக்கிக் கொண்டிருந்தார். நான் சூரக்கோட்டையில் மாதவனுடன் நான்கைந்து நாள் தங்கினேன்.

சிவாஜி அவ்வப்போது என்னை பார்ப்பார். "சாப்பிட்டீங்களா?'' என்று கேட்பார்.

நண்பர்களுடன் ஜாலியாக அரட்டை அடிப்பார். அவ்வப்போது வேட்டைக்குப் போவார். ஆனால், கதை கேட்க என்னை அழைக்கவில்லை.

சும்மா உட்கார்ந்து இருப்பது, எனக்கு போரடித்தது. இதுபற்றி ராமகிருஷ்ணனிடம் கூறினேன். `ஓய்வு எடுப்பதற்காக இங்கே வந்திருக்கிறார். அவரே உங்களைக் கூப்பிடுவார்' என்றார்.

அதேபோல, மூன்றாவது நாள் சிவாஜி என்னை அழைத்து கதை கேட்டார். நான் சொன்னேன். அவருக்குப் பிடித்து இருந்தது. "கதை நன்றாக இருக்கிறது. பண்ணலாம்'' என்று சொல்லிவிட்டார்.

ஆனால், பிறகு என்னுடன் பேசவில்லை. ஒருவேளை மாதவனிடம் பேசியிருக்கலாம். சிவாஜி பிசியாக இருந்ததால், படம் தள்ளிக்கொண்டே போயிற்று. இதற்கிடையே, ராமகிருஷ்ணன் இறந்து போனார். அதனால், அப்படம் தயாரிக்கப்படவில்லை.

இதன் பிறகு, சிவாஜியை வைத்து ஜி.என்.வேலுமணி தயாரித்த "எதிரொலி'' படத்தை இயக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது.

முதல் நாள் படப்பிடிப்பு. சிவாஜியை முதன் முதலாக நான் இயக்கிடும் நேரம். எனது கை-கால் நடுங்கின. "பராசக்தி'', "மனோகரா'' படங்களைப் பார்த்து பிரமித்துப்போன எனக்கு, அவரை எப்படி இயக்குவது என்ற தடுமாற்றம்.

அவர் நடிப்பைப் பார்த்து ராத்தூக்கம், பகல் தூக்கம் இல்லாமல் கஷ்டப்பட்டவன் நான். அவரை இயக்கும் நேரம் வந்ததும், கை-கால் வெடவெடத்தன.

நிலைமையை சரி செய்து கொண்டு, முதல் காட்சியை அவருக்குச் சொன்னேன். பொதுவாக முதல் நாள் என்றால், ஒரு `சக்சஸ்' அல்லது `வெற்றி' என்று கூறும் வழக்கமான காட்சியாக இல்லாமல், ஒரு நீள வசனத்தை அவரைப் பேசச் சொன்னேன். அப்போது, கே.ஆர்.விஜயாவும் உடன் இருந்தார்.

"நான் உங்களுக்கு இப்படி ஒரு காட்சி வைத்துள்ளேன். சரியாக இருக்கும் என்று எண்ணுகிறேன். மாற்றம் எதுவும் செய்ய வேண்டுமானால் சொல்லுங்கள். மாற்றி அமைத்துக் கொள்ளலாம்'' என்று சிவாஜியிடம் சொன்னேன்.

அவர் உடனே, "அய்யய்யோ... நீங்கதான் டைரக்டர். நான் எதுவுமே சொல்லமாட்டேன். நினைக்கவும் மாட்டேன். எப்படி நடிக்க வேண்டும் என்று கூறுகிறீர்களோ அப்படியே நடிக்கிறேன்'' என்றவர், வசனத்தைப் படித்துக் காட்டும்படி கூறினர்.

நான் படித்துக்காட்டினேன். "நான் எப்படி பேசவேண்டும் என்பதையும், எப்படி நடிக்க வேண்டும் என்பதையும் சொல்லிக் கொடுங்க!'' என்றார், சிவாஜி.

"என்ன சார் இது... நீங்க போய் என்னிடம் கேட்கறீங்க... உங்களுக்கு நான் சொல்லிக் கொடுப்பது சரியா வராது!'' என்றேன்.

"இல்லை பாலு! நீங்க எத்தனையோ வெற்றி நாடகங்களை டைரக்ட் செய்திருக்கீங்க. எனக்கும் சொல்ல வேண்டியதுதானே... இந்த படம் என்கிற கப்பலுக்கு நீங்கதான் கேப்டன்'' என்று விடாப்பிடியாகச் சொன்னார், சிவாஜி.

இவ்வாறு சிவாஜி சொன்ன பிறகு எனக்கு தைரியம் வந்தது. படப்பிடிப்பு படுவேகமாக நடந்தது.

இப்படி நடந்து வந்த படப்பிடிப்பின் நடுவே, ஒரு நாள் சிவாஜி என்னைத் தனியாக அழைத்தார். பட்டென்று ஒரு கேள்வி கேட்டார்.

தனது மனசை நீண்ட நாள் உறுத்திக் கொண்டிருந்த அந்தக் கேள்வியை அவர் கேட்டதும், நான் பெரும் அதிர்ச்சி அடைந்தேன். அவர் கேட்ட கேள்வி:-

"ஏன் பாலு... எனது நடிப்புக்கு ஏற்றபடி ஒரு காட்சியை எனக்காக வைக்கக்கூடாதா....?''

- இதுதான் சிவாஜி கேட்ட கேள்வி.

நான் திடுக்கிட்டேன். "என்ன சார்... என்ன சொல்றீங்க?'' என்று கேட்டேன்.

"இல்லை. நான் நடிக்கும்படியான ஒரு காட்சி இருந்தால் நன்றாக இருக்குமே'' என்று மீண்டும் சொன்னார்.

எனக்குப் பெரும் அதிர்ச்சி. "அப்படியானால், நீங்கள் இதுவரை நடித்ததெல்லாம் நடிப்பு இல்லையா?'' என்று நான் கேட்க, "இல்லை... அப்படி சொல்லவில்லை. உங்களுக்கே தெரியும்... நான் நன்றாக நடிப்பதாகச் சொல்கிறார்கள். நவரச நடிப்பும் கலந்து தரும்படி ஒரு காட்சி வைக்கக்கூடாதா?'' என்று சிவாஜி கேட்டார்.

"இது அப்படி ஒரு கதை அல்ல. ஒரு வழக்கறிஞரின் வாழ்க்கை பற்றிய இயல்பான கதை. மிதமிஞ்சிய நடிப்பு இந்தக் கதையில் தேவைப்படாதே'' என்று நான் சொல்ல, "அப்படியென்றால் சரி. கதையும், காட்சியும் மிகச்சிறப்பாக அமைந்துவிட்டன. எனது ரசிகர்கள் இந்தப் படத்தை ஏற்றுக்கொள்ள வேண்டும். அவர்கள் ஏற்றுக் கொண்டுவிட்டால், படம் வெற்றிப்படம் என்பதில் சந்தேகம் இல்லை'' என்று சொல்லி முடித்துவிட்டார், சிவாஜி.

அவர் சந்தேகப்பட்டபடி சிவாஜி ரசிகர்கள் இந்தப்படத்தை ஏற்கவில்லை. அதனால் படம் வெற்றி அடையவில்லை.''

இவ்வாறு பாலசந்தர் குறிப்பிட்டுள்ளார்.

0 comments:

Post a Comment