Pages

Subscribe:

Ads 468x60px

Tuesday, 11 March 2014

ரஜினி படங்களை டைரக்ட் செய்ய செல்வமணியை தேடிவந்த வாய்ப்புகள் கைநழுவின!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் படங்களை டைரக்ட் செய்யும் வாய்ப்புகள், ஆர்.கே.செல்வமணிக்கு தேடி வந்தன. ஆனால் அவை கைநழுவிப்போயின.

இதுபற்றிய அனுபவங்களை செல்வமணி கூறுகிறார்:-

'ரஜினி சாருக்கும் எனக்கும் எப்போது அறிமுகம் -பழக்கம் என்பதை, குறிப்பிட்டுச் சொல்ல முடியாத அளவுக்குப் பட்டும் படாமல்தான் இருந்தேன்.

என் முதல் படம் 'புலன் விசாரணை' தொடக்க விழாவுக்கு வந்து குத்துவிளக்கு ஏற்றினார். அப்போது அவர் எனக்காக வரவில்லை. அன்று நான் அறிமுக இயக்குனர். எனக்கென்று எந்தத் தகுதியும் வரவில்லை. எனவே, தள்ளி நின்று சூப்பர் ஸ்டார் என்கிற அந்த நட்சத்திரத்தை பிரமிப்புடன் பார்த்தேன். நெருங்கிப் பேசக்கூட இயலவில்லை.

அமிதாப்பச்சனின் நண்பர் எஸ்.ராமநாதன், ரஜினி படத்துக்காக என்னை அணுகி கேட்டார். ரஜினி சார் படத்துக்காக முதலில் என்னை அணுகியவர் அவர்தான்.

'எவ்வளவு சம்பளம்?' என்றார், ராமநாதன். நான் 'ரூ.5 லட்சம்' என்றேன். 'என்னய்யா பெரிய சம்பளம் கேட்கிறே!' என்று சொல்லிவிட்டுப் போனார்.

விஜயா வாகினி ஸ்டூடியோ நீண்ட இடைவெளிக்குப்பின் படம் எடுக்க வந்தார்கள். அப்போதும் ரஜினி சார் பட வாய்ப்பு வந்தது. விஜயா வாகினி நிறுவனத்தில் கேட்டார்கள்.

என் படம் 'அதிரடிப்படை'க்காக, நான் 'செட்' எல்லாம் போட்டு செலவு செய்திருந்தேன். அதனால் ரஜினி பட வாய்ப்பை ஏற்க முடியவில்லை. பிறகு அவர்கள் தயாரிப்பில் உருவாகியது ஒரு படம். அதுதான் 'உழைப்பாளி.'

'வீரா' பட வாய்ப்பும் எனக்கு வந்தது. பஞ்சு அருணாசலம் சார் கூப்பிட்டு ஒரு தெலுங்குப் படத்தை தமிழில் எடுக்க இருப்பதாகக் கூறினார். அந்த தெலுங்குப் படத்தை நான் பார்த்தேன். அது ஒரு நகைச்சுவை படம். எனக்கு நகைச்சுவை வராது. அதை ஒரு ரசிகனாக இருந்து ரசிக்கலாம். இயக்குனராக என்னால் செய்யமுடியாது. ஏனென்றால் கதையில் கொஞ்சம்கூட நம்பகம் இல்லை. காட்சிகளில் என் முத்திரையைப் பதிக்க முடியுமா என்று சந்தேகமாக இருந்தது.

அதுமட்டுமல்ல; ரஜினி மாதிரி பெரிய நட்சத்திர நடிகரை நம் வசதிக்கு ஏற்ப நடிக்க வைக்க முடியுமா என்கிற சந்தேகமும் இருந்தது. எனவே `இது நமக்கு சரிப்பட்டு வராது' என்று நினைத்தேன்.

இப்படி `வீரா' படத்தையும் நான் செய்ய முடியவில்லை.

'உழைப்பாளி', 'வீரா' இரண்டிலுமே ரஜினி சாருக்கு ஜோடியாக ரோஜா நடித்தார். படப்பிடிப்புக்கு போய் வந்து ரோஜா தினமும் ரஜினி புகழ் புராணம் பாடுவார்.

தினமும் ரஜினி பற்றியே பேசிக்கொண்டு இருப்பார். அந்த படங்களை நான் இயக்காமல் விட்டு விட்டதில் ரோஜாவுக்கு வருத்தம், கோபம் எல்லாம் இருந்தது. ரஜினியை வைத்து எப்படி இயக்குவது என்று எனக்கு தயக்கம் இருந்ததையும், என்னை யாரும் மேலாதிக்கம் செலுத்துவது எனக்குப் பிடிக்காது என்பதையும் சொன்னேன்.

அதற்கு ரோஜா, 'நீங்கள் நினைப்பது போல அவர் இருக்கமாட்டார். அவர் மிகவும் எளிமையானவர். எல்லாருக்கும் மரியாதை தருகிறவர். இயக்குனர் சொல்வதை அப்படியே நடித்து ஒத்துழைப்பு கொடுப்பார். தலையீடு என்பது எதுவும் செய்யமாட்டார்' என்றெல்லாம் கூறினார்.

ரஜினி பற்றி ரோஜா இப்படி நல்லவிதமாக கூறிக்கொண்டே இருந்தார். `சரி; அடுத்த வாய்ப்பு வந்தால் செய்யலாம்' என்று இருந்தேன்.

'அதிரடிப்படை'யும், 'உழைப்பாளி'யும் ஒரே நாளில் தொடக்க விழா நடந்த படங்கள்.

'உழைப்பாளி' முடிந்து அடுத்தது 'வீரா' படப்பிடிப்பு நடக்கும்போதும், என் படம் முடிந்தபாடில்லை.

ஒருநாள், என் படப்பிடிப்புக்கு போய்விட்டு ஐதராபாத் விமான நிலையத்திற்கு வந்தபோது அங்கு ரஜினி சாரைப் பார்த்தேன். அவர் 'வீரா' படப்பிடிப்பில் கலந்து கொண்டுவிட்டு வந்திருந்தார். அப்போது அவர் என்னிடம் பேசினார். தன்னைச் சந்திக்க, அடுத்த நாள் வரமுடியுமா என்று கேட்டார். நான், 'வருகிறேன்' என்றேன்.

மறுநாள் காலை அவர் வீட்டுக்குப் போனேன். அங்கே நான் நுழைந்ததுமே, 'நீங்கள் செல்வமணிதானே?' என்று வரவேற்று, அமர வைத்தார்கள். என் 15 வருட சினிமா அனுபவத்தில் அப்படி ஒரு நேர்த்தியான வரவேற்பையும், திட்டமிடுதலையும் நான் பார்த்ததில்லை. ரஜினி சார் எவ்வளவு தெளிவானவர், எதையும் சரியாகச் செய்பவர் என்பதற்கு அந்த வரவேற்பும், உபசரிப்புமே உதாரணம் எனலாம்.

'சார் கூப்பிடுகிறார்' என்று உள்ளே அழைத்துப் போனார்கள். உள்ளே போனேன். உற்சாகமாக வரவேற்றார்.

அந்த இடமே வித்தியாசமாக இருந்தது. அது ஒரு கண்ணாடி அறை. உள்ளே இருட்டு. நானும் ரஜினி சாரும் மட்டும் உட்காருவதற்கு இருக்கைகள் இருந்தன. மேஜையில் மட்டும் வெளிச்சம். ஒருவர் முகத்தை ஒருவர் பார்க்கும்படியான அளவில் மின்விளக்கு ஒளி. ஏதோ 'ஓம்' மாதிரி பக்தி ஒலி மெதுவாக ஒலித்துக் கொண்டிருந்தது. அந்த ஒலி அந்த இடத்தை தெய்வீகமாக மாற்றி இருந்தது.

மின்னல் மாதிரி வந்த ரஜினி சார், நீண்ட நாள் பழகியது போலப் பேசினார். என்ன பேசுவது, எப்படி பேசுவது என்று தயங்கிய என்னை, சகஜ நிலைக்கு அவரே கொண்டு வந்தார். எனக்குள் இருந்த கூச்சம், தயக்கம், சங்கோஜம் விலக்கி, இயல்பு நிலைக்கு கொண்டு வரும் விதத்தில் அவரே பேசினார்.

இருவரும் சகஜமாகி விட்டோம். என் படம் பற்றி விசாரித்தார். 'எப்போது வெளியிடப்போகிறீர்கள்?' என்றார். 'அடுத்த பொங்கல்!' என்றேன். 'பொங்கல் ஜனவரியில் வருகிறது. அப்படியென்றால் ஏப்ரல், மே, ஜுன், ஜுலையில் நீங்கள் நமக்குப் படம் பண்ண முடியுமா?' என்றார்.

அப்போது `வீரா' படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்தது. நடிக்கும் படம் முடியும் தருணத்தில், அடுத்த படம் பற்றி திட்டமிடுதலில் ரஜினி இறங்கியவிதம் என்னைக் கவர்ந்தது.

'வேறு படம் செய்யும் திட்டம் உள்ளதா?' என்றார். 'இல்லை' என்றேன்.

தன் படம் செய்யும்போது வேறு படம் செய்யக்கூடாது என்பது அவர் கொள்கை. ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் வேலை பார்த்தால், கவனம் சிதறும் என்பது அவரது எண்ணம். அது சரியானதுதான்.

என்னிடம் ஒரு கதை சொன்னார். அதுதான் 'பாட்ஷா.' அது `ஹம்' படத்தின் கதை. எனக்குப் பிடித்தது. 'ஹம்' படத்தில் சலிப்பு ஏற்படுத்தும் சில அம்சங்கள் இருந்தன. அதை விலக்கிவிட்டு, சரியாக திருத்தி ரஜினி சார் கதை சொன்னார். அதில் `அக்னிபத்'தில் உள்ள சில அம்சங்களைச் சேர்த்து இருந்தார்.

நான் ரஜினி சாரை சந்தித்தது 1993 அக்டோபர் மாதம். அடுத்த ஆண்டு ஏப்ரலில் தொடங்கி தீபாவளிக்கு படத்தை வெளியிடுவதாகத் திட்டம். மகிழ்ச்சியுடன் திரும்பினேன்.

1994 பிப்ரவரியில் 'அதிரடிப்படை' வெளியானது. ரஜினி சார் படம் பார்க்க விரும்பினார். சுப்ரஜித் திரையரங்கில் படம் பார்த்தார்.

உச்சகட்டக்காட்சியில் ஒரு பகுதி 2000 அடி கொண்டது. அது நீளமாக இருக்கிறது என்றும் அதை நீக்கிவிட்டால் நன்றாக இருக்கும் என்றும் கூறினார். அது ஒரு கோடி ரூபாய் செலவு செய்து எடுக்கப்பட்ட காட்சி. படம் வெளியான பிறகு அதை எப்படி நீக்குவது? ஆனால் அவர் கூறிய கருத்து சரிதான் என்று புரிந்தது.

'அதிரடிப்படை' படம் பெரிய தோல்வியைச் சந்தித்தது. சினிமாவில் வெற்றி பெறுகிறவர்களுக்குத்தான் மரியாதை. இனி நாம் ரஜினி சார் படத்தை இயக்கும் சாத்தியமே இல்லை என்று முடிவு கட்டிவிட்டேன். மனதளவில் அந்த ஏமாற்றத்தை தாங்கிக்கொள்ளத் தயாராகி விட்டேன்.

'அதிரடிப்படை' வெளியாகி 15 நாட்கள் ஆகியிருந்தன. ரஜினி சார் கூப்பிடுவதாக ஜெயராமன் போன் செய்தார்.

முறைப்படி அழைத்து `குட்பை' சொல்லப்போகிறார் என்று போனேன். ஆனால் நான் எதிர்பார்த்ததற்கு மாறாக ரஜினி சார் சகஜமாகப் பேசினார்.

என் தயக்கத்தைப் புரிந்து கொண்டு அவரே பேசினார்: 'இந்த உலகத்தில் வெற்றியை மட்டுமே சந்தித்தவர்கள் யாருமே இல்லை. கடவுள்கூட வெற்றியை மட்டுமே சந்தித்ததில்லை. 'அதிரடிப்படை' திரைக்கதையில்தான் சில தவறுகள். உருவாக்கிய விதத்தில் தவறில்லை. அந்த படத்தையே நினைத்துக் கொண்டிருக்க வேண்டாம். அதைவிட்டு வெளியே வாங்க' என்றார். எனக்கு ஆச்சரியமாக இருந்தது. ஆறுதலாகவும் இருந்தது.

பிறகு, தன் படத்தைப் பற்றி பேசினார். 2 நிபந்தனைகள் விதித்தார். அவர் சினிமாவுக்கு வந்து 25 ஆண்டுகள் ஆனதை முன்னிட்டு -வெள்ளி விழா ஆண்டில் வரும் படம். எனவே மிகவும் பிரமாதமாக இருக்க வேண்டும். செலவு பற்றி கவலைப்படாமல் பிரமாண்டமான படமாக வரவேண்டும். தமிழ் சினிமாவில் இப்படி ஒரு படம் வந்திருக்கக்கூடாது. அந்த அளவுக்கு படம் வரவேண்டும்.

அடுத்தது, தயாரிப்பாளருக்கு பத்து பைசாவாவது லாபம் வரவேண்டும். நமக்கு புகழ் வந்துவிடும். தயாரிப்பாளர் லாபம் அடைய வேண்டியது முக்கியம் என்று கூறினார்.

மீண்டும் ரஜினி சாரை சந்தித்தபோது, யார் இசையமைப்பது என்கிற பேச்சு வந்தது. அவர் ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்க விரும்பினார். நான் என் படங்களுக்கு இளையராஜாவையே இசையமைக்க வைத்ததால் அவர் பெயரைச் சொன்னேன். அப்போது ரஜினி சார், 'உங்களை விட இளையராஜா எனக்கு நெருங்கிய நண்பர்.

ஆனால் நட்பு வேறு. தொழில் வேறு. ரகுமான்தான் இன்று சினிமாத்துறையில் பேசப்படுகிறார். நம் படத்துக்கு அப்படிப்பட்ட இன்னொரு பலத்தைச் சேர்ப்பது நல்லது' என்றவர், 'இதில் நம் விருப்பத்தைவிட மக்கள் எதை விரும்புகிறார்கள் என்பதுதான் முக்கியம்' என்றார்.

பிறகு புதிதாக ஒரு கதை சொன்னார். அதுதான் 'படையப்பா.' அது எனக்குப் பிடிக்கவில்லை. காரணம் ரஜினி சாரின் இமேஜை ஒரு பெண் எதிர்த்து நிற்பது போன்ற கதை. அப்போது ஜெயலலிதாவுக்கும் ரஜினிக்கும் பனிப்போர் நடந்து கொண்டிருந்தது. அந்த நேரத்தில் இப்படி ஒரு கதையைக் கேட்டதும் அதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

'உங்கள் இமேஜ் மலையையே உடைக்கும். ஒரு பெண் உங்களை எதிர்த்து மோதுவது போன்ற கதை ஏற்க முடியாத ஒன்று' என்றேன். 'சரி பரவாயில்லை' என்றவர், 'வேறு யாருக்காவது படம் பண்ணுகிறீர்களா?' என்று கேட்டார். நான் 'இல்லை' என்று கூறினேன்.

'நீங்கள் விஜயகாந்தை வைத்து படம் பண்ணுவதாக பேச்சு உள்ளதே!' என்றார். நான் 'இல்லை' என்றேன். 'சரி, அவர் உங்களைக் கூப்பிட்டால் என்ன செய்வீர்கள்? என்றார். 'அப்படிக் கூப்பிட்டால் என்னால் தவிர்க்க முடியாது. ஏனென்றால் அவர் இல்லையென்றால் நான் இல்லை' என்றேன்.

'அப்படியென்றால் நமக்கு சரிவராது. ரஜினிகாந்த் படம் பண்ணும்போது விஜயகாந்த் படமும் பண்ணினால் தேவையற்ற குழப்பங்கள் வரும். ஒரு நேரத்தில் ஒரு படம்தான் என் பாலிசி' என்றவர், 'விஜயகாந்த் மீது உங்களுக்குள்ள விசுவாசத்தை மதிக்கிறேன்' என்றார்.

பிறகு 'நாம் அப்புறம் சந்திக்கலாம்' என்றார்.

மறுநாள் காலை செய்தித்தாளில், சினிமா பகுதியில் ஆர்.கே.செல்வமணி இயக்கத்தில் விஜயகாந்த் நடிக்கும் 'மாஸ்டர் நேதாஜி' என்று செய்தி வந்திருந்தது. எனக்கு அதிர்ச்சி. `அப்படி நான் சொல்லவில்லையே! ஏன் இப்படிச் செய்தார்கள்?' என்று நினைத்தேன். இதை அறிந்து கொண்டுதான் ரஜினி சார் அப்படி கேட்டிருக்கிறார் என்பது புரிந்தது.

'ஏன் இப்படிச் செய்தீர்கள்?' என்று ராவுத்தரிடம் கேட்டேன்.

அதற்கு அவர், 'ஆமாம் தம்பி! நான்தான் அப்படி செய்தி கொடுத்தேன். ஆர்.சுந்தர்ராஜனை வைத்து 'வைதேகி காத்திருந்தாள்' ஆரம்பிக்கிறேன். ஒரு பக்கபலமாக இருக்கட்டும் என்றுதான் உன் படம் பற்றியும் அறிவித்தேன். எப்போது படப்பிடிப்பு என்பது பற்றி இப்போது கவலை இல்லை. உனக்கு எப்போது விருப்பமோ, அப்போது செய்து கொடு. இப்போது அவசரமில்லை' என்றார்.

இப்படி ராவுத்தர் என்னைக் கேட்காமல் புதுப்படம் பற்றி அறிவித்ததால், நான் ரஜினி படத்தை இயக்க முடியாமல் போய்விட்டது. இதில் யாரைக் குற்றம் சொல்வது?

முன்பு `பாட்ஷா' படத்துக்கு இசை அமைப்பது இளையராஜாவா, ரகுமானா என்று எங்களுக்குள் முரண்பாடு வந்தது. 'பாட்ஷா' படம் எனக்கு கைநழுவிப்போனது.

ஆனால், இதில் வேடிக்கை என்னவென்றால் 'பாட்ஷா' படத்துக்கு அந்த 2 பேருமே இசையமைக்கவில்லை! தேவாதான் இசை அமைத்தார்.

கடைசியாக ரஜினி படத்தை இழக்கக் காரணமாக இருந்தது, 'மாஸ்டர் நேதாஜி' படம் பற்றிய அறிவிப்பு.

அந்தப் படமும் எடுக்கப்படவில்லை! 

0 comments:

Post a Comment