சூப்பர் ஸ்டாரின் முதல் ஆங்கிலப் படம் ப்ளட் ஸ்டோன்!
சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்த முதல் ஹாலிவுட் படம் ப்ளட் ஸ்டோன் கடந்த 1988-ம் ஆண்டு அக்டோபர் மாதம்தான் வெளியானது.
இந்தப் படம் ஒரு ஒரிஜினல் ஹாலிவுட் படம். ஹாலிவுட் நட்சத்திரங்களான பரெட்ஸ் டிம்லி, சார்லிபிரில், அன்னா நிகடெஸ் உள்ளிட்டோர் ரஜினியுடன் இணைந்து நடித்திருந்தனர்.
விஜய் அமிர்தராஜ் ஹாலிவுட்டில் ஓரளவு பெரிய தயாரிப்பாளராக உயர்ந்து வந்த நேரத்தில் அவரும் டாக்டர் முரளி மனோகரும் (இப்போது கோச்சடையான் தயாரிப்பாளர்) கூட்டாக இந்தப் படத்தைத் தயாரித்தனர்.
அதற்கு முன்பே ஒரு வாய்ப்பு வந்தும்கூட ரஜினி அதனை ஏற்கவில்லை. தனக்கு வசதியான சூழல் அமையும்போது பார்க்கலாம் என்றுவிட்டுவிட்டார். இங்கே வசதி என்றால் Comfortableness!
இந்தப் படத்தில் அவர் ஷ்யாம் சாபு என்ற பெயரில் ஒரு டாக்சி ட்ரைவராக தோன்றுவார். இசைஞானி இளையராஜா இசையமைத்திருந்தார். டி ராஜேந்தர், அபிராமி ராமநாதன் உள்ளிட்டோர்தான் படத்தை தமிழகத்தில் வெளியிட்டனர்.
டிவைட் லிட்டில் இயக்கிய இந்தப் படத்தில், ரஜினி சொந்தக் குரலில் ஆங்கில வசனங்களை பேசியிருப்பார்.
ப்ளட்ஸ்டோன் கதை
“பிளட் ஸ்டோன்” என்பது விலை உயர்ந்த வைரக் கல். 12-ம் நூற்றாண்டைச் சேர்ந்த இந்த அபூர்வ கல்லை இந்தியாவிலிருந்து திருடிக் கொள்கிறார்கள் பிரிட்டிஷ்காரர்கள்.
பின்னர் அதை வெளிநாட்டிலிருந்து இந்தியாவுக்குக் கொண்டு வருகிறார்கள். அது தவறி ரஜினியின் டாக்சிக்குள் விழுந்து, பின் ரஜினியின் கையிலேயே கிடைக்கிறது.
அந்த விலை உயர்ந்த கல், கதாநாயகி அன்னா நிகோலஸிடம் இருப்பதாக வில்லனின் ஆட்கள் தவறாக கருதி, அவளைக் கடத்திச் செல்கிறார்கள். கல்லைக் கொடுத்தால்தான் அவளை விடுவிக்க முடியும் என்று நிபந்தனை விதிக்கிறார்கள்.
அவளைத் தேடி இந்தியாவுக்கு வரும் பிரெட் ஸ்டிம்லியும், ரஜினியும் நண்பர்களாகி விடுகிறார்கள்.
“விலை உயர்ந்த கல்லை, ஏன் அவர்களிடம் கொடுக்க வேண்டும்? எனக்கு பக்கபலமாக பலர் இருக்கிறார்கள். வில்லனை அழித்து விடுவோம். அந்தப் பெண்ணை மீட்டு விடலாம். பிறகு பிளட் ஸ்டோனை நாமே பங்கு போட்டுக்கொள்ளலாம்,” என்று ஸ்டிம்லியிடம் ரஜினி கூறுகிறார்.
அவரும் ஒப்புக் கொள்ள, இருவரும் போராடி எப்படி வில்லனை ஒழித்து, கதாநாயகியை மீட்டு, ரத்தக்கல்லை அடைகிறார்கள் என்பது க்ளைமாக்ஸ்.
வெற்றிதான்…
ரஜினியின் 119-வது படமாக, 7-10-1988-ல் “பிளட் ஸ்டோன்” வெளிவந்தது. ஹாலிவுட்டில் பி – மூவி என கூறப்பட்டாலும், சர்வதேச அளவில் வெற்றிப்பட வரிசையில் சேர்ந்தது இந்தப் படம். சென்னையில் அலங்கார் உள்ளிட்ட அரங்குகளிலும், தமிழ்நாட்டின் முக்கிய நகரங்களிலும் திரையிடப்பட்டது.
ரஜினி நடித்த முதல் ஆங்கிலப் படம் என்பதால் மிகுந்த ஆர்வத்துடன் ரசிகர்கள் பார்த்தனர்.
ரஜினியின் புதுமாதிரியான நடிப்பு, ஹாலிவுட்காரர்களை வெகுவாகக் கவர்ந்தது. இந்தப் படம் ரஜினியின் வெற்றிப் பட வரிசையில் சேர்ந்தது. ஆனால் ரசிகர்கள் எதிர்ப்பார்த்த அளவுக்கு பிரமாதமான வெற்றி என்று சொல்லமுடியாது. (ரஜினி நடித்தார் என்பதற்காக சொல்லவில்லை. நன்கு விசாரித்துவிட்டே எழுதுகி்றோம். படத்தை வெளியிட்ட அனைவருக்கும் இந்தப் படம் லாபத்தைக் கொடுத்தது!).
இந்தப் படத்தில் நடித்த அனுபவம் குறித்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கூறியது:
“ஹாலிவுட்டில் ஒரு படத்தை எடுக்க வேண்டும் என்றால், அதற்கு ஒரு வருஷத்திற்கு முன்பே திட்டமிடுகிறார்கள்.
ஆறு மாத காலம் தேடி, ஷூட்டிங் லொகேஷனை தேர்ந்தெடுத்த பிறகு ஸ்கிரிப்ட் தயார் பண்ணுகிறார்கள்.
“ஸ்கிரிப்ட் எழுதி, `டிஸ்கஸ்’ பண்ணி பண்ணி, வசனம் முதல் கொண்டு… ஷாட் கூட இப்படித்தான் அமைக்க வேண்டும் என்று பக்கா `டேபிள் ஒர்க்’ பண்ணி விடுவார்கள்.
இருபதாயிரம் அடிகள் எடுத்து, பதினைந்தாயிரம் அடிகளாகக் குறைக்கலாம் என்கிறதெல்லாம் அங்கே கிடையாது.
லொகேஷனுக்கு போன உடன் கதையை இப்படி மாற்றிக் கொள்ளலாம். வசனத்தில் இதை சேர்த்துக் கொள்ளலாம்… அப்டி பண்ணலாம்; இப்டி பண்ணலாம் என்கிற வித்தை எல்லாம் இல்லை. ஸ்கிரிப்டில் என்ன இருக்கிறதோ, எந்த ஷாட் இருக்கிறதோ, என்ன டயலாக் இருக்கிறதோ அதைத்தான் எடுப்பார்கள்.
அங்கே எல்லாம் ஒரு ஷெட்யூல், இரண்டு ஷெட்யூல் என்பதெல்லாம் கிடையாது. படத்தை ஆரம்பித்து விட்டால், முடிகிறவரை தொடர்ந்து ஷூட்டிங்தான்.
நான்கைந்து மாதங்களுக்கு முன்பே ஒவ்வொரு நாளும் எடுக்கப்படவிருக்கும் காட்சி, அதில் இடம் பெறும் வசனம் போன்ற எல்லா விவரங்களும் சம்பந்தப்பட்ட நட்சத்திரங்கள், டெக்னீஷியன்களிடள் கொடுக்கப்பட்டு விடும்.
இதனால் நட்சத்திரங்கள், அவரவர் சம்பந்தப்பட்ட வசனத்தை மனப்பாடம் செய்து கொள்ளவும், கதாபாத்திரத்தில் அதிக கவனம் செலுத்தவும் போதிய அவகாசம் கிடைக்கிறது. ‘ஷூட்டிங்கில் நாம் என்ன செய்யப்போகிறோம’ என்பதை தீர்மானித்து விடுவதால், செட்டிற்கும் போனவுடன் டென்ஷன் இருக்காது.
இங்கே முதலில் படப்பிடிப்பு நடத்திவிட்டு, பிறகு “டப்பிங்” பேசுகிறோம். அங்கு அப்படி இல்லை. படப்பிடிப்பின்போது என்ன பேசுகிறோமோ, அது நேரடியாக ஒலிப்பதிவு ஆகிவிடும். படத்தில் அந்த வசனம்தான் இடம் பெறும்.
என்னிடம் அவர்கள் “ஷூட்டிங்கின்போதே ஆங்கில வசனம் பேசவேண்டும்” என்று சொன்னபோது ஆரம்பத்தில் பயந்தேன். காரணம், நமக்குத்தான் ஆங்கிலம் இலக்கண சுத்தமாகப் பேச வராதே! படத்தில் பேசுகிற அளவுக்கு நாம் என்ன கான்வெண்ட்லயா படிச்சோம்!
“வசனத்தை ஷூட்டிங் ஸ்பாட்டில் மாற்ற வேண்டிய அவசியம் இருக்காது. உங்களிடம் மூணு மாசத்துக்கு முன்னாடியே டயலாக்கை கொடுத்து விடுவாங்க. நீங்க தயார் பண்ணிகிட்டு வரலாம்” என்று தயாரிப்பாளர் ஊக்கம் தந்து தைரியமூட்டினார். அப்படியிருந்தும் ஷூட்டிங்கில் அவர்கள் பேசியதை நான் புரிந்து கொள்ளவும், நான் பேசியதை அவர்கள் புரிந்து கொள்ளவும் ஒரு வாரம் பிடித்தது. உச்சரிப்பில் படிப்படியாக சகஜ நிலை ஏற்பட்டது.
ஹாலிவுட் போயிடுவீங்களா?
“இந்தப் படம் உலகம் முழுவதும் ஓடி, இன்னும் பல ஆங்கிலப் படங்களில் நடிக்க வாய்ப்பு வந்தால் ஹாலிவுட்டில் செட்டில் ஆகிவிடுவீர்களா?” என்று என்னிடம் பலர் கேட்கிறார்கள்.
அவர்களுக்கு என் பதில் இதுதான்:
“நல்ல கதையாக இருந்து, அதில் என் கேரக்டர் நல்லபடியாக இருந்து, அப்படத்தை பெரிய நிறுவனம் எடுத்தால், அத்துடன் கால்ஷீட் பிரச்சினை ஏற்படாமல் இருந்தால், ஆங்கிலப் படங்களில் நடிக்க நான் ஒப்புக்கொள்வேன். அப்போது கூட நான் ஹாலிவுட்டில் செட்டில் ஆகமாட்டேன். காரணம், நான் இந்திய மண்ணை – இந்திய பண்பாட்டை அதிகம் நேசிக்கிறேன்,” என்றார்.
ஆனால் பின்னர், அவரைத் தேடி வந்த பல ஹாலிவுட் வாய்ப்புகளை மறுத்துவிட்டதோடு, தமிழ் தவிர்த்த பிற மொழிப் படங்களையும் படிப்படியாகக் குறைக்க ஆரம்பித்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
அவர் நேரடியாக ஆங்கிலப் படங்களில் நடிக்காவிட்டாலும், ஹாலிவுட்டைத் திரும்பிப் பார்க்க வைக்கும் அளவுக்கு சர்வதேச நடிகராகிவிட்டார். சூப்பர் ஸ்டார் என்றால் உலகில் அது ரஜினி ஒருவர்தான். அவதார், டின் டின்னுக்குப் பிறகு அவரது கோச்சடையான்தான் மோஷன் கேப்சரிங் 3டி தொழில்நுட்பத்தில் வரும் மூன்றாவது என்ற சிறப்பை ஹாலிவுட்டும் ஒப்புக் கொண்டுள்ளதே.. அதுதானே நிஜமான சாதனை!