Pages

Subscribe:

Ads 468x60px

Tuesday, 11 March 2014

ரஜினி படங்களை டைரக்ட் செய்ய செல்வமணியை தேடிவந்த வாய்ப்புகள் கைநழுவின!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் படங்களை டைரக்ட் செய்யும் வாய்ப்புகள், ஆர்.கே.செல்வமணிக்கு தேடி வந்தன. ஆனால் அவை கைநழுவிப்போயின.

இதுபற்றிய அனுபவங்களை செல்வமணி கூறுகிறார்:-

'ரஜினி சாருக்கும் எனக்கும் எப்போது அறிமுகம் -பழக்கம் என்பதை, குறிப்பிட்டுச் சொல்ல முடியாத அளவுக்குப் பட்டும் படாமல்தான் இருந்தேன்.

என் முதல் படம் 'புலன் விசாரணை' தொடக்க விழாவுக்கு வந்து குத்துவிளக்கு ஏற்றினார். அப்போது அவர் எனக்காக வரவில்லை. அன்று நான் அறிமுக இயக்குனர். எனக்கென்று எந்தத் தகுதியும் வரவில்லை. எனவே, தள்ளி நின்று சூப்பர் ஸ்டார் என்கிற அந்த நட்சத்திரத்தை பிரமிப்புடன் பார்த்தேன். நெருங்கிப் பேசக்கூட இயலவில்லை.

அமிதாப்பச்சனின் நண்பர் எஸ்.ராமநாதன், ரஜினி படத்துக்காக என்னை அணுகி கேட்டார். ரஜினி சார் படத்துக்காக முதலில் என்னை அணுகியவர் அவர்தான்.

'எவ்வளவு சம்பளம்?' என்றார், ராமநாதன். நான் 'ரூ.5 லட்சம்' என்றேன். 'என்னய்யா பெரிய சம்பளம் கேட்கிறே!' என்று சொல்லிவிட்டுப் போனார்.

விஜயா வாகினி ஸ்டூடியோ நீண்ட இடைவெளிக்குப்பின் படம் எடுக்க வந்தார்கள். அப்போதும் ரஜினி சார் பட வாய்ப்பு வந்தது. விஜயா வாகினி நிறுவனத்தில் கேட்டார்கள்.

என் படம் 'அதிரடிப்படை'க்காக, நான் 'செட்' எல்லாம் போட்டு செலவு செய்திருந்தேன். அதனால் ரஜினி பட வாய்ப்பை ஏற்க முடியவில்லை. பிறகு அவர்கள் தயாரிப்பில் உருவாகியது ஒரு படம். அதுதான் 'உழைப்பாளி.'

'வீரா' பட வாய்ப்பும் எனக்கு வந்தது. பஞ்சு அருணாசலம் சார் கூப்பிட்டு ஒரு தெலுங்குப் படத்தை தமிழில் எடுக்க இருப்பதாகக் கூறினார். அந்த தெலுங்குப் படத்தை நான் பார்த்தேன். அது ஒரு நகைச்சுவை படம். எனக்கு நகைச்சுவை வராது. அதை ஒரு ரசிகனாக இருந்து ரசிக்கலாம். இயக்குனராக என்னால் செய்யமுடியாது. ஏனென்றால் கதையில் கொஞ்சம்கூட நம்பகம் இல்லை. காட்சிகளில் என் முத்திரையைப் பதிக்க முடியுமா என்று சந்தேகமாக இருந்தது.

அதுமட்டுமல்ல; ரஜினி மாதிரி பெரிய நட்சத்திர நடிகரை நம் வசதிக்கு ஏற்ப நடிக்க வைக்க முடியுமா என்கிற சந்தேகமும் இருந்தது. எனவே `இது நமக்கு சரிப்பட்டு வராது' என்று நினைத்தேன்.

இப்படி `வீரா' படத்தையும் நான் செய்ய முடியவில்லை.

'உழைப்பாளி', 'வீரா' இரண்டிலுமே ரஜினி சாருக்கு ஜோடியாக ரோஜா நடித்தார். படப்பிடிப்புக்கு போய் வந்து ரோஜா தினமும் ரஜினி புகழ் புராணம் பாடுவார்.

தினமும் ரஜினி பற்றியே பேசிக்கொண்டு இருப்பார். அந்த படங்களை நான் இயக்காமல் விட்டு விட்டதில் ரோஜாவுக்கு வருத்தம், கோபம் எல்லாம் இருந்தது. ரஜினியை வைத்து எப்படி இயக்குவது என்று எனக்கு தயக்கம் இருந்ததையும், என்னை யாரும் மேலாதிக்கம் செலுத்துவது எனக்குப் பிடிக்காது என்பதையும் சொன்னேன்.

அதற்கு ரோஜா, 'நீங்கள் நினைப்பது போல அவர் இருக்கமாட்டார். அவர் மிகவும் எளிமையானவர். எல்லாருக்கும் மரியாதை தருகிறவர். இயக்குனர் சொல்வதை அப்படியே நடித்து ஒத்துழைப்பு கொடுப்பார். தலையீடு என்பது எதுவும் செய்யமாட்டார்' என்றெல்லாம் கூறினார்.

ரஜினி பற்றி ரோஜா இப்படி நல்லவிதமாக கூறிக்கொண்டே இருந்தார். `சரி; அடுத்த வாய்ப்பு வந்தால் செய்யலாம்' என்று இருந்தேன்.

'அதிரடிப்படை'யும், 'உழைப்பாளி'யும் ஒரே நாளில் தொடக்க விழா நடந்த படங்கள்.

'உழைப்பாளி' முடிந்து அடுத்தது 'வீரா' படப்பிடிப்பு நடக்கும்போதும், என் படம் முடிந்தபாடில்லை.

ஒருநாள், என் படப்பிடிப்புக்கு போய்விட்டு ஐதராபாத் விமான நிலையத்திற்கு வந்தபோது அங்கு ரஜினி சாரைப் பார்த்தேன். அவர் 'வீரா' படப்பிடிப்பில் கலந்து கொண்டுவிட்டு வந்திருந்தார். அப்போது அவர் என்னிடம் பேசினார். தன்னைச் சந்திக்க, அடுத்த நாள் வரமுடியுமா என்று கேட்டார். நான், 'வருகிறேன்' என்றேன்.

மறுநாள் காலை அவர் வீட்டுக்குப் போனேன். அங்கே நான் நுழைந்ததுமே, 'நீங்கள் செல்வமணிதானே?' என்று வரவேற்று, அமர வைத்தார்கள். என் 15 வருட சினிமா அனுபவத்தில் அப்படி ஒரு நேர்த்தியான வரவேற்பையும், திட்டமிடுதலையும் நான் பார்த்ததில்லை. ரஜினி சார் எவ்வளவு தெளிவானவர், எதையும் சரியாகச் செய்பவர் என்பதற்கு அந்த வரவேற்பும், உபசரிப்புமே உதாரணம் எனலாம்.

'சார் கூப்பிடுகிறார்' என்று உள்ளே அழைத்துப் போனார்கள். உள்ளே போனேன். உற்சாகமாக வரவேற்றார்.

அந்த இடமே வித்தியாசமாக இருந்தது. அது ஒரு கண்ணாடி அறை. உள்ளே இருட்டு. நானும் ரஜினி சாரும் மட்டும் உட்காருவதற்கு இருக்கைகள் இருந்தன. மேஜையில் மட்டும் வெளிச்சம். ஒருவர் முகத்தை ஒருவர் பார்க்கும்படியான அளவில் மின்விளக்கு ஒளி. ஏதோ 'ஓம்' மாதிரி பக்தி ஒலி மெதுவாக ஒலித்துக் கொண்டிருந்தது. அந்த ஒலி அந்த இடத்தை தெய்வீகமாக மாற்றி இருந்தது.

மின்னல் மாதிரி வந்த ரஜினி சார், நீண்ட நாள் பழகியது போலப் பேசினார். என்ன பேசுவது, எப்படி பேசுவது என்று தயங்கிய என்னை, சகஜ நிலைக்கு அவரே கொண்டு வந்தார். எனக்குள் இருந்த கூச்சம், தயக்கம், சங்கோஜம் விலக்கி, இயல்பு நிலைக்கு கொண்டு வரும் விதத்தில் அவரே பேசினார்.

இருவரும் சகஜமாகி விட்டோம். என் படம் பற்றி விசாரித்தார். 'எப்போது வெளியிடப்போகிறீர்கள்?' என்றார். 'அடுத்த பொங்கல்!' என்றேன். 'பொங்கல் ஜனவரியில் வருகிறது. அப்படியென்றால் ஏப்ரல், மே, ஜுன், ஜுலையில் நீங்கள் நமக்குப் படம் பண்ண முடியுமா?' என்றார்.

அப்போது `வீரா' படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்தது. நடிக்கும் படம் முடியும் தருணத்தில், அடுத்த படம் பற்றி திட்டமிடுதலில் ரஜினி இறங்கியவிதம் என்னைக் கவர்ந்தது.

'வேறு படம் செய்யும் திட்டம் உள்ளதா?' என்றார். 'இல்லை' என்றேன்.

தன் படம் செய்யும்போது வேறு படம் செய்யக்கூடாது என்பது அவர் கொள்கை. ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் வேலை பார்த்தால், கவனம் சிதறும் என்பது அவரது எண்ணம். அது சரியானதுதான்.

என்னிடம் ஒரு கதை சொன்னார். அதுதான் 'பாட்ஷா.' அது `ஹம்' படத்தின் கதை. எனக்குப் பிடித்தது. 'ஹம்' படத்தில் சலிப்பு ஏற்படுத்தும் சில அம்சங்கள் இருந்தன. அதை விலக்கிவிட்டு, சரியாக திருத்தி ரஜினி சார் கதை சொன்னார். அதில் `அக்னிபத்'தில் உள்ள சில அம்சங்களைச் சேர்த்து இருந்தார்.

நான் ரஜினி சாரை சந்தித்தது 1993 அக்டோபர் மாதம். அடுத்த ஆண்டு ஏப்ரலில் தொடங்கி தீபாவளிக்கு படத்தை வெளியிடுவதாகத் திட்டம். மகிழ்ச்சியுடன் திரும்பினேன்.

1994 பிப்ரவரியில் 'அதிரடிப்படை' வெளியானது. ரஜினி சார் படம் பார்க்க விரும்பினார். சுப்ரஜித் திரையரங்கில் படம் பார்த்தார்.

உச்சகட்டக்காட்சியில் ஒரு பகுதி 2000 அடி கொண்டது. அது நீளமாக இருக்கிறது என்றும் அதை நீக்கிவிட்டால் நன்றாக இருக்கும் என்றும் கூறினார். அது ஒரு கோடி ரூபாய் செலவு செய்து எடுக்கப்பட்ட காட்சி. படம் வெளியான பிறகு அதை எப்படி நீக்குவது? ஆனால் அவர் கூறிய கருத்து சரிதான் என்று புரிந்தது.

'அதிரடிப்படை' படம் பெரிய தோல்வியைச் சந்தித்தது. சினிமாவில் வெற்றி பெறுகிறவர்களுக்குத்தான் மரியாதை. இனி நாம் ரஜினி சார் படத்தை இயக்கும் சாத்தியமே இல்லை என்று முடிவு கட்டிவிட்டேன். மனதளவில் அந்த ஏமாற்றத்தை தாங்கிக்கொள்ளத் தயாராகி விட்டேன்.

'அதிரடிப்படை' வெளியாகி 15 நாட்கள் ஆகியிருந்தன. ரஜினி சார் கூப்பிடுவதாக ஜெயராமன் போன் செய்தார்.

முறைப்படி அழைத்து `குட்பை' சொல்லப்போகிறார் என்று போனேன். ஆனால் நான் எதிர்பார்த்ததற்கு மாறாக ரஜினி சார் சகஜமாகப் பேசினார்.

என் தயக்கத்தைப் புரிந்து கொண்டு அவரே பேசினார்: 'இந்த உலகத்தில் வெற்றியை மட்டுமே சந்தித்தவர்கள் யாருமே இல்லை. கடவுள்கூட வெற்றியை மட்டுமே சந்தித்ததில்லை. 'அதிரடிப்படை' திரைக்கதையில்தான் சில தவறுகள். உருவாக்கிய விதத்தில் தவறில்லை. அந்த படத்தையே நினைத்துக் கொண்டிருக்க வேண்டாம். அதைவிட்டு வெளியே வாங்க' என்றார். எனக்கு ஆச்சரியமாக இருந்தது. ஆறுதலாகவும் இருந்தது.

பிறகு, தன் படத்தைப் பற்றி பேசினார். 2 நிபந்தனைகள் விதித்தார். அவர் சினிமாவுக்கு வந்து 25 ஆண்டுகள் ஆனதை முன்னிட்டு -வெள்ளி விழா ஆண்டில் வரும் படம். எனவே மிகவும் பிரமாதமாக இருக்க வேண்டும். செலவு பற்றி கவலைப்படாமல் பிரமாண்டமான படமாக வரவேண்டும். தமிழ் சினிமாவில் இப்படி ஒரு படம் வந்திருக்கக்கூடாது. அந்த அளவுக்கு படம் வரவேண்டும்.

அடுத்தது, தயாரிப்பாளருக்கு பத்து பைசாவாவது லாபம் வரவேண்டும். நமக்கு புகழ் வந்துவிடும். தயாரிப்பாளர் லாபம் அடைய வேண்டியது முக்கியம் என்று கூறினார்.

மீண்டும் ரஜினி சாரை சந்தித்தபோது, யார் இசையமைப்பது என்கிற பேச்சு வந்தது. அவர் ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்க விரும்பினார். நான் என் படங்களுக்கு இளையராஜாவையே இசையமைக்க வைத்ததால் அவர் பெயரைச் சொன்னேன். அப்போது ரஜினி சார், 'உங்களை விட இளையராஜா எனக்கு நெருங்கிய நண்பர்.

ஆனால் நட்பு வேறு. தொழில் வேறு. ரகுமான்தான் இன்று சினிமாத்துறையில் பேசப்படுகிறார். நம் படத்துக்கு அப்படிப்பட்ட இன்னொரு பலத்தைச் சேர்ப்பது நல்லது' என்றவர், 'இதில் நம் விருப்பத்தைவிட மக்கள் எதை விரும்புகிறார்கள் என்பதுதான் முக்கியம்' என்றார்.

பிறகு புதிதாக ஒரு கதை சொன்னார். அதுதான் 'படையப்பா.' அது எனக்குப் பிடிக்கவில்லை. காரணம் ரஜினி சாரின் இமேஜை ஒரு பெண் எதிர்த்து நிற்பது போன்ற கதை. அப்போது ஜெயலலிதாவுக்கும் ரஜினிக்கும் பனிப்போர் நடந்து கொண்டிருந்தது. அந்த நேரத்தில் இப்படி ஒரு கதையைக் கேட்டதும் அதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

'உங்கள் இமேஜ் மலையையே உடைக்கும். ஒரு பெண் உங்களை எதிர்த்து மோதுவது போன்ற கதை ஏற்க முடியாத ஒன்று' என்றேன். 'சரி பரவாயில்லை' என்றவர், 'வேறு யாருக்காவது படம் பண்ணுகிறீர்களா?' என்று கேட்டார். நான் 'இல்லை' என்று கூறினேன்.

'நீங்கள் விஜயகாந்தை வைத்து படம் பண்ணுவதாக பேச்சு உள்ளதே!' என்றார். நான் 'இல்லை' என்றேன். 'சரி, அவர் உங்களைக் கூப்பிட்டால் என்ன செய்வீர்கள்? என்றார். 'அப்படிக் கூப்பிட்டால் என்னால் தவிர்க்க முடியாது. ஏனென்றால் அவர் இல்லையென்றால் நான் இல்லை' என்றேன்.

'அப்படியென்றால் நமக்கு சரிவராது. ரஜினிகாந்த் படம் பண்ணும்போது விஜயகாந்த் படமும் பண்ணினால் தேவையற்ற குழப்பங்கள் வரும். ஒரு நேரத்தில் ஒரு படம்தான் என் பாலிசி' என்றவர், 'விஜயகாந்த் மீது உங்களுக்குள்ள விசுவாசத்தை மதிக்கிறேன்' என்றார்.

பிறகு 'நாம் அப்புறம் சந்திக்கலாம்' என்றார்.

மறுநாள் காலை செய்தித்தாளில், சினிமா பகுதியில் ஆர்.கே.செல்வமணி இயக்கத்தில் விஜயகாந்த் நடிக்கும் 'மாஸ்டர் நேதாஜி' என்று செய்தி வந்திருந்தது. எனக்கு அதிர்ச்சி. `அப்படி நான் சொல்லவில்லையே! ஏன் இப்படிச் செய்தார்கள்?' என்று நினைத்தேன். இதை அறிந்து கொண்டுதான் ரஜினி சார் அப்படி கேட்டிருக்கிறார் என்பது புரிந்தது.

'ஏன் இப்படிச் செய்தீர்கள்?' என்று ராவுத்தரிடம் கேட்டேன்.

அதற்கு அவர், 'ஆமாம் தம்பி! நான்தான் அப்படி செய்தி கொடுத்தேன். ஆர்.சுந்தர்ராஜனை வைத்து 'வைதேகி காத்திருந்தாள்' ஆரம்பிக்கிறேன். ஒரு பக்கபலமாக இருக்கட்டும் என்றுதான் உன் படம் பற்றியும் அறிவித்தேன். எப்போது படப்பிடிப்பு என்பது பற்றி இப்போது கவலை இல்லை. உனக்கு எப்போது விருப்பமோ, அப்போது செய்து கொடு. இப்போது அவசரமில்லை' என்றார்.

இப்படி ராவுத்தர் என்னைக் கேட்காமல் புதுப்படம் பற்றி அறிவித்ததால், நான் ரஜினி படத்தை இயக்க முடியாமல் போய்விட்டது. இதில் யாரைக் குற்றம் சொல்வது?

முன்பு `பாட்ஷா' படத்துக்கு இசை அமைப்பது இளையராஜாவா, ரகுமானா என்று எங்களுக்குள் முரண்பாடு வந்தது. 'பாட்ஷா' படம் எனக்கு கைநழுவிப்போனது.

ஆனால், இதில் வேடிக்கை என்னவென்றால் 'பாட்ஷா' படத்துக்கு அந்த 2 பேருமே இசையமைக்கவில்லை! தேவாதான் இசை அமைத்தார்.

கடைசியாக ரஜினி படத்தை இழக்கக் காரணமாக இருந்தது, 'மாஸ்டர் நேதாஜி' படம் பற்றிய அறிவிப்பு.

அந்தப் படமும் எடுக்கப்படவில்லை! 

கமலஹாசனுடன் நடிக்க நடிகைக்கு பயம்!

கமலஹாசனுடன் இணைந்து நடித்த ஊர்வசி, அவரை நெருங்கவே பயந்தார்! அதற்கான காரணம் ருசிகரமானது.

இதுபற்றி ஊர்வசி கூறியதாவது:-

'கமல் சார் மீது எனக்கு சிறு வயதில் இருந்தே ஒரு பிரமிப்பு இருந்தது. நான் முதல் படத்தில் நடித்துக் கொண்டிருந்தபோதே, அவரைச் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது.

'முந்தானை முடிச்சு' படப்பிடிப்பு ஏவி.எம். ஸ்டூடியோ 9-வது தளத்தில் நடந்து கொண்டிருந்தது. 'அந்தி வரும் நேரம்' பாடல் காட்சி படமானது.

அப்போது அதே ஸ்டூடியோவில் கமல் நடித்த 'தூங்காதே தம்பி தூங்காதே' படப்பிடிப்பும் நடந்தது.

நான் நின்று கொண்டிருந்தபோது, அந்த வழியே கமல் போனார். கூடவே ஜமுனாவும் இருந்தார்.

என்னை கமலிடம் அறிமுகம் செய்து வைத்தார்கள். கமல் சிரித்தார். 'அப்படியா!' என்று ஏதோ விசாரித்தார். நான் எதுவும் பேசத் தெரியாமல் ஒருவித படபடப்பில் நின்று கொண்டிருந்தேன். பயமாக இருந்தது.

அவர் போன பிறகு எல்லோரும் என்னிடம் வந்து 'கமல் சார் உன் அருகில் வந்து விசாரிக்கிறார். நீ பேசினால் என்ன? வணக்கம் சொல்லக்கூட உனக்குத் தெரியாதா? இதுதானா நீ கற்று வைத்திருக்கும் மரியாதை?' என்று கடிந்து கொண்டார்கள்.

அவர்கள் அப்படி கோபமாகக் கூறியது சரிதான். நான் செய்தது தவறுதான். பயம் தொண்டையை அடைத்துக் கொள்ளும்போது, நான் என்ன செய்யமுடியும்?

கமல் சாருடன் முதன் முதலாக நான் நடித்த படம் 'அந்த ஒரு நிமிடம்.' 1985-ல் மேஜர் சுந்தரராஜன் இயக்கிய படம். ஏற்கனவே மேஜர் அவர்களுடன் நான் 'ஊரும் உறவும்' படத்தில் நடித்திருந்தேன். அந்த வகையில் 'அந்த ஒரு நிமிடம்' மேஜருடன் எனக்கு 2-வது படம். தேங்காய் சீனிவாசன், ஒய்.ஜி.மகேந்திரன் ஆகியோரும் நடித்தார்கள்.

கமல் சார் படத்தில் நான் நடிக்கிறேன் என்றதுமே பல பேர் பலவிதமாக சொல்லிக் கொண்டிருந்தார்கள். எனக்கு வயிற்றில் புளியைக் கரைத்தது.

அருணாசலம் ஸ்டூடியோவில் அன்று நான் அவருடன் இணைந்து நடிக்க வேண்டும். எனக்கு பயமாக இருந்தது.

'கமல் கூட நடிக்கும்போது ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். சொல்லாமலேயே திடீரென கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்துவிடுவார். கேமரா ஓடிக்கொண்டிருக்கும். உன்னால் ஒன்றும் செய்யமுடியாது. நெருக்கமாக அவர் வந்துவிட்டாலே முத்தக்காட்சி உண்டு. எச்சரிக்கையாக இரு' என்று பலரும் என்னிடம் கூறி, பயமுறுத்தினார்கள்.

என்னால் நம்ப முடியவில்லை. சந்தித்தவர்கள் ஒரே மாதிரி இப்படிக் கூறியதால் நம்பாமலும் இருக்க முடியவில்லை.

`இது என்ன அநியாயமாக இருக்கிறதே. நம் சம்மதம் இல்லாமல் இத்தகைய காட்சியை எப்படி எடுக்க முடியும்?' என்று நான் நினைத்தாலும், பயம் அகலவில்லை.

சினிமா சம்பந்தப்பட்ட என் வரவு -செலவுகளைக் கவனித்துக் கொண்டிருந்த சித்தப்பாவுடன் தொலைபேசியில் பேசினேன். அப்போது செல்போன் கிடையாது. ஸ்டூடியோவில் உள்ள தொலைபேசியில் இருந்துதான் பேசினேன். 'சித்தப்பா... நம்மைக் கேட்காமலேயே தப்பு தப்பா காட்சி எடுப்பார்களாம்' என்று என் பயத்தை வெளிப்படுத்தினேன்.

'அப்படியெல்லாம் எடுக்கமாட்டார்கள். அப்படி எதுவும் பிரச்சினை ஏற்பட்டால், எனக்கு போன் செய்' என்றார், சித்தப்பா.

நான் பயந்து கொண்டிருக்கிறேன் என்பதை அறியாத கமல் சார், என் அருகில் வந்து பேசினார். 'முந்தானை முடிச்சு' படம் பற்றிப் பாராட்டினார். நான் மிரட்சியுடன் விழிப்பதைப் பார்த்து, 'நான் ஒன்றும் பூச்சாண்டி இல்லை. பயப்படாதே!' என்று தைரியம் சொன்னார். என்னை சகஜ நிலைக்குக் கொண்டுவர எவ்வளவோ முயன்றார். ஆனால் எனக்கு பயம் தெளியவில்லை. அதனால் நான் அவருடன் பேசவேயில்லை.

படப்பிடிப்பு தொடங்கியது. அவசரமாக மேஜரிடம் ஓடினேன். 'இப்போது என்ன காட்சி எடுக்கப்போகிறீர்கள்?' என்று கேட்டேன்.

'நீ நின்று கொண்டு இருப்பாய். பக்கத்தில் கமல் வருவார்' என்றார்.

'பக்கத்தில் வந்து?' என்று நான் பதற்றத்துடன் கேட்டேன். 'முகத்துக்கு நேரே முகம் கொண்டுவருவார்' என்றதும் என் பதற்றம் அதிகமானது.

'அப்போ, ஏதாவது தப்பு தண்டா காட்சி எடுக்கப் போகிறீர்களா?' என்று கேட்டேன். அழுகையே வரும் போலிருந்தது.

மேஜர் சிரித்தார். 'அப்படி எல்லாம் ஒன்றும் இல்லை! பயப்படாதே!' என்றார்.

இருந்தாலும் எனக்கு பயமாகத்தான் இருந்தது.

கேமரா ஓடத்தொடங்கியது. நானும், கமல் சாரும் நடிக்கத் தயாராக நின்றோம்.

அளவுக்கு அதிகமாக நெருங்கி வந்தால், அவரைப் பிடித்துத் தள்ளிவிட வேண்டும் என்று முடிவு செய்தேன்.

கதைப்படி கமலும், நானும் கணவன் -மனைவி. அவர் நீண்ட நாள் வெளியூரில் போய் தங்க வேண்டும். என்னிடம் பிரியாவிடை பெறும் காட்சிதான் படமாக்கப்பட இருந்தது.

'நான் ஊருக்குப் போய்விட்டு வருகிறேன்' என்று கமல் என் பக்கத்தில் வருவார். 'என்னை விட்டுவிட்டு போகிறீர்களா?' என்று நான் விரகதாபத்துடன் அவரைப் பார்க்க வேண்டும். இப்படித்தான் எனக்கு சொல்லப்பட்டது. அதுபோலவே காட்சி எடுக்கப்பட்டது.

அடுத்த காட்சி, 'குளோஸ் அப்' என்றார்கள். அதாவது, நெருக்கமாக அருகருகே முகம் தெரியும்படி எடுப்பது. அதற்காக கமல் சார் என் முகத்தருகே தன் முகத்தைக் கொண்டுவர... `அட ஆரம்பித்து விட்டார்களய்யா அவர்களது வேலையை!' என்று நான் நினைத்தேன். பதற்றம் எனக்குள் பரவியது. அவர் என் முகத்தருகே நெருங்கியபோது, நான் பதறிப்போய் சட்டென்று விலக, 'பதறாதே அம்மா! இது சாதாரண `குளோஸ் அப்' காட்சிதான்' என்று இயக்குனர் கூறினார்.

அவர் இவ்வாறு கூறியும், எனக்கு பயம் அகலவில்லை. `முகத்துக்கு அருகே இவ்வளவு நெருக்கமாக முகத்தைக் கொண்டு வருகிறவர் சும்மா இருப்பாரா! முத்தக் காட்சிதான் எடுக்கப்போகிறார்கள்! அப்படி முத்தமிட முயற்சித்தால், பிடித்து தள்ளிவிடவேண்டும்' என்று உறுதி செய்து கொண்டேன்.

ஆனால், நான் நினைத்தபடி எதுவும் நடக்கவில்லை. என் முகத்தை உற்றுப்பார்த்த கமல், 'உன் மூக்கு ரொம்ப நல்லா இருக்கு!' என்று கூறிவிட்டு நகர்ந்து சென்றார்.

`அப்பாடா' என்று நிம்மதிப் பெருமூச்சு விட்டேன்.

இதன் பிறகு, கமல் சார் என்னுடன் சகஜமாகி விட்டார். நானும் சகஜமாகிவிட்டேன். யாரோ என்னிடம் தவறாக கொடுத்த தகவல்தான் இப்படி நினைக்க வைத்துவிட்டது. இதுமாதிரி சினிமாவில் புரளி கிளப்பி விடுகிறவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள்.

கமல் பெரிய நடிகர்; கர்வம் இல்லாதவர்; மற்றவர்களுக்கு மரியாதை தருவார்; மற்றவர் திறமைகளை பாராட்டுகிறவர்.

1992-ல் வெளிவந்த 'மைக்கேல் மதன காமராஜன்' படம், மறக்க முடியாத நல்ல படம். பஞ்சு அருணாசலம் சார்தான் தயாரிப்பாளர். அவரை நான் `பஞ்சுப்பா' என்றுதான் அழைப்பேன்.

அந்தப்படத்தில் கமல் நான்கு வேடங்களில் நடித்தார். அப்பப்பா! ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு மாதிரி வித்தியாசம் காட்டி அசத்தியிருப்பார். படம், அவரது அபாரத் திறமைக்கு எடுத்துக்காட்டாக அமைந்தது.

ஆனால், அவர் ஒரு விழா மேடையில் 'இந்த மைக்கேல் மதன காமராஜன் பட வெற்றியில், எல்லாராலும் ரசிக்கப்பட்டது. நானும் ஊர்வசியும் இடம் பெற்ற மலையாளம் பேசி நடிக்கும் பகுதிதான். எனவே, படத்தின் வெற்றியில் ஊர்வசிக்கு பெரும் பங்கு உண்டு' என்று என்னைப் பாராட்டியதை நான் என்றும் மறக்க முடியாது.

என்னுடன் நடித்த டெல்லி கணேஷ், எஸ்.என்.லட்சுமி ஆகியோரையும் அவர் பாராட்டத் தவறவில்லை.

அதன் பிறகு 1993-ல் அவர் தயாரித்த 'மகளிர் மட்டும்' படத்தில் நடித்தேன்.

பிறகு ரமேஷ் அரவிந்த் இயக்கிய `ராமா பாமா ஷ்யாமா'வில் நடித்தேன். இது, தமிழில் வெளிவந்த 'சதிலீலாவதி' படத்தின் கன்னட வடிவம். இங்கே கல்பனா ஏற்றிருந்த வேடத்தை, நான் கன்னடத்தில் நடித்தேன். படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது.

'மைக்கேல் மதன காமராஜன்' பட வெற்றியால் நான் நிறைய தமிழ்ப்படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.' 

‘நிமிர்ந்து நில்’ துணிந்து செல்லும் - துணிச்சலான திரைவிமர்சனம்!

நாசர் நடத்தும் ஆசிரமம் ஒன்றில் தங்கி படித்து வரும் ஜெயம் ரவி, படிப்பு முடிந்து தனியார் கம்பெனி ஒன்றில் வேலை செய்து வருகிறார். சட்டம், ஒழுங்கை மக்கள் மதிப்பதில்லை என்று மனசுக்குள் பொங்கி எழும் ஜெயம் ரவி ஒருநாள், சிக்னலில் டிராபிக் போலீஸிடம் மாட்டிக் கொள்கிறார். எல்லா பேப்பர்களும் சரியாக இருந்தும் பைன் கட்டச் சொல்கிறார் டிராபிக் போலீஸ். இல்லையென்றால் 100 ரூபாய் லஞ்சமாக கேட்கிறார்.

ஆனால், லஞ்சம் கொடுக்க ஜெயம் ரவி மறுக்கிறார். அதனால், நீதிமன்றம் வரை செல்ல வேண்டியதாகிறது. அங்கு கோர்ட்டில் தன்னிடம் லஞ்சம் கேட்ட எல்லோரையும் மாட்டிவிடுகிறார். இதனால், அந்த அதிகாரிகள் மீது சஸ்பெண்ட் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இதனால், பாதிக்கப்பட்ட அதிகாரிகள் ஜெயம் ரவியை அடித்து துவம்சம் செய்கிறார்கள்.

ஆனால், அசராத ஜெயம் ரவி ஊழல் அதிகாரிகளை மாட்டிவிட புது திட்டம் தீட்டுகிறார். அதாவது, இல்லாத ஒரு ஆளுக்காக அரசு அடையாள அட்டைகளையும், சான்றிதழ்களையும் நல்ல அதிகாரிகளின் துணையோடு பெறுகிறார். இதற்காக லஞ்சம் கொடுத்ததை வீடியோவும் எடுத்துவிடுகிறார்.

இந்த வீடியோ ஆதாரத்தை கோபிநாத் உதவியுடன் டிவி சேனலில் ஒளிபரப்புகிறார். இதில், டாக்டர், நீதிபதி, போலீஸ், எம்.பி. என 147 பேர் சிக்குகிறார்கள். அனைவரையும் மக்கள் முன்னாலும், சட்டத்தின் முன்னாலும் நிறுத்துகிறார் ஜெயம்ரவி. இதனால், கொதிப்படைந்த அதிகாரிகள் ஜெயம் ரவியை பழிவாங்க முடிவெடுக்கின்றனர்.

இறுதியில் ஜெயம் ரவியை அவர்கள் பழிவாங்கினார்களா? இல்லையா? என்பதே மீதிக்கதை.

லஞ்சத்துக்கு எதிராக தமிழில் வெளிவந்த ‘இந்தியன்’, ‘சாமுராய்’, ‘சிட்டிசன்’, ‘அந்நியன்’ ஆகிய படங்களில் வரிசையில் நிமிர்ந்து நில் படமும் நிற்கிறது. ஜெயம் ரவி ரொம்பவும் சிரத்தை எடுத்து நடித்திருக்கிறார். ஆக்சன் காட்சிகளில் சிறப்பாக நடித்திருக்கிறார். இப்படத்தில் இரண்டு வேடங்களில் வரும் இவர், இரண்டிலும் நல்ல வித்தியாசத்தை காட்டியிருக்கிறார். நரசிம்ம ரெட்டியின் பாடி லாங்குவேஜில் அசத்தியிருக்கிறார்.

அமலாபாலுக்கு இந்த படத்தில் நடிப்பதற்குண்டான வாய்ப்பு குறைவே. ஹீரோவை காதலிக்கவும், டூயட் பாடல்களுக்கு மட்டுமே பயன்பட்டிருக்கிறார். இவர் இல்லாவிட்டாலும் படத்திற்கு எந்த பாதிப்பும் இல்லாதது போன்றே இருக்கிறது. ‘கருப்புத்தங்கம்’ என்ற பட்டப்பெயரோடு அறிமுகமாகும் சூரி காமெடியில் கொஞ்சம் சிரிக்க வைத்திருக்கிறார்.

சரத்குமார், கோபிநாத் ஆகியோர் படத்தில் சிறிது நேரமே வந்தாலும் நிறைவாக செய்திருக்கிறார்கள். முதல் பாதியில் விறுவிறுப்பாக செல்லும் திரைக்கதை, பிற்பாதியில் ஏனோ ஆமை வேகத்தில் நகர்கிறது. தனி மனிதன் திருந்தினால் தான் நாடு திருந்தும் என்ற கருத்தை சொல்ல வந்திருக்கிறார் இயக்குனர் சமுத்திரகனி. இதில், கொலை, ரத்தம் எதுவும் காட்டாமல் இருந்தது கொஞ்சம் நிம்மதியை தருகிறது. சமுத்திரக்கனியின் முந்தைய படமான ‘நாடோடி’ படத்தை ஒப்பிடும்போது, இது கொஞ்சம் சறுக்கல்தான்.

ஜீ.வி.பிரகாஷ் இசையில் பாடல்கள் சுமார் ரகம்தான். பின்னணி இசையில் கொஞ்சம் கவனம் செலுத்தியிருக்கிறார். சுகுமார்-ஜீவன் ஆகியோரின் ஒளிப்பதிவு கலக்கல்.

மொத்தத்தில் ‘நிமிர்ந்து நில்’ துணிந்து செல்லும்.