Pages

Subscribe:

Ads 468x60px

Thursday, 20 March 2014

இதுதான் சிவகார்த்திகேயனின் சுயரூபம்!!!

அது ஒரு புதுமுக ஹீரோ நடித்த படத்தின் ஆடியோ பங்ஷன்.

அந்த பங்ஷனுக்கு சிறப்பு விருந்தினராக ஒரு பிரபலமான இளம் ஹீரோவை அழைத்திருக்கிறார்கள். அவரும் வருவதாக ஓ.கே சொல்லி விட்டார். சொன்னவர் கொஞ்சம் தாமதமாகத்தான் வந்தார்.

வந்தவுடன் மைக்கைப் பிடித்த அவர் ”நான் நடிச்ச படம் இந்த வாரம் ரிலீசாயிருக்கு. அதோட புரமோஷனுக்காக பிக் எப்.எம் வரைக்கும் போயிட்டு வந்தேன். அதான் லேட்டாயிடுச்சு. அதனால் தாமதமா வந்ததுக்கு உங்க எல்லார்கிட்டேயும் முதல்ல மன்னிப்பு கேட்டுக்கிறேன்” என்றவர் அடுத்து படத்தின் ஹீரோ முதல் டெக்னீஷியன்கள் வரை எல்லோரையும் மனதார பாராட்டி விட்டு இருக்கையில் அமர்ந்தார்.

விழாவில் பேச வேண்டிய கடைசி சிறப்பு விருந்தினர் அவர் மட்டும் தான் என்பதால் அவர் பேசி முடித்த கையோடு விழா நிறைவடைந்தது. விழா முடியவும் அங்கே இருந்த நூற்றுக்கணக்கான ரசிகர்கள் அவரை சூழ்ந்து கொண்டார்கள். அவருடன் கை குலுக்குவது, செல்போனில் போட்டோ எடுப்பது, அவருடன் பேச முற்படுவது என்று அவரை நெருங்கிக் கொண்டார்கள். அந்த கட்டுக்கடங்காத ரசிகர்கள் கூட்டத்தில் மாட்டிக் கொண்டார் அந்த ஹீரோ. ஆனால் எந்த ரசிகரிடம் அவர் முகத்தை சுளிக்கவில்லை. மாறாக ரசிகர்களோடு ரசிகராகவே மாறிப்போனார்.

எத்தனை பேர் வந்தாலும் சளிக்காமல் சிரித்த முகத்தோடு கை குலுக்கினார். போட்டோவுக்கு போஸ் கொடுத்தார். என்னோட மொபைல்ல உங்களை போட்டோ எடுத்துக்கிறேன் என்று கேட்ட ரசிகரைக் கூட ஓ.கே ஜி எடுத்துக்கங்க ஜி என்று புன்னைகையோடு போட்டோவுக்கு போஸ் கொடுக்கிறார்.

விழா முடிந்து சுமார் கால்மணி நேரமாகியும் கூட அவரை மொய்த்த ரசிகர் கூட்டம் அவரை விடவில்லை. அவர் மெல்ல மெல்ல எல்லா ரசிகர்களையும் சந்தித்துக் கொண்டே தனது கார் இருக்கும் இடத்தை நோக்கி வந்தார். அங்கேயும் வெளியில் நின்று கொண்டிருந்த ரசிகர்கள் அவரை மொய்த்தார்கள். அப்போதும் கூட முகத்தில் வழிந்த வியர்வையை கைக்குட்டையால் துடைத்து விட்டு சிரித்தவாறே ரசிகர்களுடன் மனம் விட்டுப் பேசினார்.

‘எளிமை’யின் மறுபெயர் விஜய் சேதுபதி! : ஹலோ மிஸ்டர் சிவகார்த்திகேயன் ஒரு நிமிஷம் இதை படிச்சிட்டுப் போங்க…

விழாக்குழுவினருக்கோ அவரை எப்படியாவது காருக்குள் ஏற்றி பத்திரமாக வீட்டுக்கு அனுப்ப வேண்டுமே என்கிற டென்ஷன். அதனால் விழாக்குழுவினர் அவரைச் சூழ்ந்த ரசிகர்களை பின்னே இழுத்து விட்டுவிட்டு அவரை நெருங்கி, சார் வாங்க போகலாம் என்று கூப்பிட்டார்கள். ஆனால் அவரோ ”ஜி பரவாயில்ல ஜி இவங்களை தள்ளி விடாதீங்க, இந்த இடமே இவங்க கொடுத்தது தானே? நான் பார்த்துக்கிறேன். அவங்களை ஒண்ணும் பண்ண வேணாம் ப்ளீஸ்” என்றார்.

அதன்பிறகு தனது காரில் அவர் ஏறிப்போகும் வரை தன்னைச் சந்திக்க வந்த எல்லா ரசிகர்களிடத்திலும் பேசிவிட்டுத்தான் போனார்.

அந்த எளிமையான பழகுதலுக்கு சொந்தக்காரர் வேறு யாருமல்ல…

இளம் ஹீரோ விஜய் சேதுபதி தான்.!

இந்த நிகழ்வு ‘சூறையாடல்’ என்ற படத்தின் ஆடியோ பங்ஷனில் நடந்தது.

இப்படி விஜய் சேதுபதியின் எளிமைக்கு எத்தனையோ உதாரணங்களை நேரில் பார்த்தவன் என்கிற முறையில் சொல்லிக் கொண்டே போகலாம்.

ஆனால் மிஸ்டர் சிவகார்த்திகேயன்!

இரண்டு நாட்களுக்கு முன்பு நடந்த ”மான் கராத்தே” ஆடியோ பங்ஷனில் நீங்கள் என்ன செய்தீர்கள்?

உங்களை ஒரு பெரிய ஹீரோவாக காட்டிக் கொள்ள வேண்டும், தமிழ்சினிமாவில் உள்ள அத்தனை பேருடைய பார்வையும் உங்கள் மீதுதான் பட வேண்டும் என்று பேராசைப்பட்டீர்கள்.

அதற்காக உங்களை ரசிக்கும் நூற்றுக்கணக்கான ரசிகர்களை சத்யம் தியேட்டருக்கு காலங்காத்தாலேயே வர வைத்தீர்கள். ட்ரெய்லரில் உங்கள் முகம் வரும்போது விசிலடிக்கவும், கைதட்டவும் மட்டும் அவர்களை சுயநலமாக பயன்படுத்தினீர்கள். மாறாக எந்த ரசிகரையாவது அந்த விழாவில் உங்கள் அருகில் நெருங்க விட்டீர்களா..?

உங்களைச் சுற்றி பத்து பதினைந்து அட்யாட்களை வைத்துக் கொண்டு எந்த சராசரி ரசிகனையும் நெருங்க விடாமல் பார்த்துக் கொண்டீர்களே? இதுதான் உங்கள் எளிமையா?

மேடையில் ஆளாளுக்கு உங்களை சூப்பர் ஸ்டார் ரேஞ்சுக்கு புகழ்ந்து பேசியபோது அதை மறுத்துப் பேசாமல் மெளனமாக ஏற்றுக்கொண்டீர்களே? அதன் உள்ளர்த்தம் என்ன?

விழாவுக்கு வந்த பத்திரிகையாளர்களையும், திரையுலக பிரபலங்களையும் உங்கள் அடியாட்கள் உள்ளே வரவிடாமல் தடுத்து நிறுத்தினார்கள். ஆனால் நீங்களோ உள்ளே இந்த விழாவுக்கு வந்திருக்கும் சிறப்பு விருந்தினர்களுக்கும், பத்திரிகை, டிவி, வானொலி, இணையதள நண்பர்களுக்கும் நன்றி என்று சொல்லிக்கொண்டிருந்தீர்களே?

விழாவுக்கு வர வேண்டிய முக்கியமான சிறப்பு விருந்தினர்கள் வெளியே நின்று கொண்டிருந்த போது, பத்திரிகையாளர்கள் எல்லோரும் வெளியே நின்று கொண்டிருந்த போது உள்ளே யாருமே இல்லாத டீக்கடையில் யாருக்கு டீ ஆற்றிக் கொண்டிருந்தீர்கள்?

ஒரு நல்ல நடிகனுக்கு முதலில் தேவை எளிமை. அந்த எளிமை தான் தியேட்டரின் 10 ரூபாய் இருக்கையில் உட்கார்ந்திருக்கும் ரசிகனை கூட காலா காலத்துக்கும் ரசிக்க வைக்கும். ஆனால் நீங்களோ பால்கனியில் உட்கார்ந்து கொண்டு பலான படத்தை பார்ப்பதைப் போல இருட்டுக்குள் அமைதியாக இருப்பவர்களுடன் மட்டுமே நெருக்கம் காட்ட ஆசைப்படுகிறீர்கள். அப்படித்தான் உங்கள் நடவடிக்கை இருந்தது.

எங்கே போனது உங்கள் எளிமை? அல்லது யாரைத் திருப்திபடுத்துவதற்காக இப்படிப்பட்ட ஒரு பகட்டான பாராட்டுகளை ஏற்றுக் கொண்டீர்கள்?

ஒரு நல்ல நடிகன் என்பவன் திரையில் எத்தனை வகையான முக பாவங்களையும் காட்டிவிட்டுப் போகலாம். ஆனால் சில துளிகள் அன்பு காட்டினாலே உங்களை கேட்காமல் சொந்த செலவில் கெட்-அவுட்ட்டுக்கு பல லிட்டர் பாலில் பாலாபிஷேகம் செய்கிறானே? அப்படிப்பட்ட ரசிகனிடம் ஒரு நிமிடமாவது உங்களது நிஜமான அன்பை வெளிப்படுத்தலாமே? அதில் என்ன பஞ்சம் வந்து விடப்போகிறது?

நீங்களாவது நீங்கள் நடித்த படத்தின் பங்ஷன்களில் மட்டும் தான் கலந்து கொள்கிறீர்கள். ஆனால் விஜய் சேதுபதியோ தான் நடிக்காத படமாக இருந்தாலும் கூப்பிட்ட குரலுக்கு ஓடோடி வந்து அந்த படக்குழுவினரை மனதார பாராட்டி விட்டுச் செல்கிறார். வரும்போது தனியாகத்தான் வருகிறார். விழா முடிந்து போகும் போது கூட தன்னிடம் நெருங்கி வரும் ரசிகனை அடியாட்களை வைத்து அப்புறப்படுத்தாமல் அவர்களுடன் சேர்ந்து நின்று சந்தோஷப்படுகிறார்.

‘எளிமை’ என்ற வார்த்தையை வெறும் வார்த்தையாக மட்டுமே பயன்படுத்தாமல் அதன் உண்மையான அர்த்தத்தை நிஜ வாழ்க்கையில் காண்பிக்க வேண்டும். அப்படிப்பட்ட கலைஞர்கள் மட்டுமே தமிழ்சினிமாவில் நீண்ட நாட்கள் நிலைத்து நின்றிருக்கிறார்கள்.

மாறாக தனக்கென்று ஒரு குறுகிய வட்டத்தை உருவாக்கிக் கொண்டு, பணத்திமிருடன் போலியான முகத்தோடு வலம் வந்தவர்கள் எல்லாம் இப்போது இருக்கின்ற இடமே தெரியாமல் போய் விட்டார்கள்.

இதில் நீங்கள் எந்த ரகமாக இருக்கப் போகிறீர்கள்? முடிவு உங்கள் கையில்!

0 comments:

Post a Comment