அந்நாளைய மதராசபட்டினத்தின் 1915–16 வாக்கில் வடபகுதியில், பொன்னேரி தாலுகாவைச் சேர்ந்த ‘வீரங்கவேடு’ என்னும் பேரூரில் நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலங்களுக்குச் சொந்தக்காரராய் இருந்தவர் வி. முருகேச முதலியார். ஜமீன்தாரும், ஆங்கிலேய அரசு வழங்கிய ‘சுரோத்தியம்தாரர்’ என்னும் சிறப்புப் பட்டத்தைப் பெற்றவர் (சுரோத்தியம் என்னும் சமஸ்கிருதச் சொல்லுக்கு தமிழில் மானிய நிலம் என்று பொருள்)
இவர் சென்னை ‘ஸெவன்வெல்ஸ்’ என்கின்ற ஏழுகிணறு பகுதியில் உள்ள செயின்ட் பிரான்சிஸ் தெருவில், தனக்குச் சொந்தமான சுமார் 25,200 சதுர அடி பரப்பளவு கொண்ட 10½ கிரவுண்டு மனையில் பெரியதோர் ‘மார்க்கெட்’ கட்டி அதில் பல் வகை வணிகம் செய்து கொண்டிருந்தார்.
அவருக்கு எப்படியோ – ஏனோ சினிமாவின் மீது மோகம் உண்டாகி, மொத்த மார்க்கெட் கட்டிடங்களையும் இடித்துத் தரைமட்டம் ஆக்கிவிட்டு, அதில் மேல் மாடியுடன் கூடிய ஓர் அழகிய சினிமா தியேட்டர் கட்டினார். அதற்குத் தேவையான ‘புரொஜக்டர்’, ‘சவுண்ட்பாக்ஸ்’, ‘ஸ்கிரீன்’ (படம் காட்டும் கருவி, ஒலிபெருக்கிப் பெட்டி – வெண்திரை) போன்ற உபகரணங்களை மும்பைக்குச் சென்று வாங்கி வந்து பொருத்தி, அந்த தியேட்டருக்கு ‘கினிமா சென்ட்ரல்’ என்று பெயரிட்டார். 1916–ல் திறப்பு விழா நடத்தி, அக்காலத்தில் ‘‘ஊமைப்படங்கள்’’ என்னும் பெயர் பெற்ற மவுனப்படங்களைக்காட்டி மக்களை மகிழ்வித்தார்.
இந்தியாவில் 1931–ல் முதன் முதலாகத் தயாரிக்கப்பட்ட இந்தி மொழிப் பேசும் படமான ‘ஆலம்ஆரா’வும் அதனைத்தொடர்ந்து அதே 1931–ம் ஆண்டு தயாரிக்கப்பட்ட முதல் தமிழ் பேசும் படமான ‘காளிதாஸ்’ 31.10.1931–ல் இதே கினிமா சென்ட்ரல் தியேட்டரில்தான் ரிலீசானது என்பது சிறப்பிற்குரிய ஒரு செய்தி ஆகும். 1937–ல் எம்.கே.தியாகராஜ பாகவதர் நடித்த ‘சிந்தாமணி’ இங்கு தொடர்ந்து 3 வருடங்கள் ஓடி சாதனை படைத்தது.
மேற்கண்ட தமிழக முதல் திரை அரங்குப் பிதாமகரான வி.முருகேச முதலியாரின் மறைவிற்குப்பிறகு அவருடைய ஏகமகனான வி.எம்.பரமசிவ முதலியார் கினிமா சென்ட்ரல் என்பதை மாற்றி, தன் தந்தையை நினைவுபடுத்தும் வகையில் ‘ஸ்ரீமுருகன் டாக்கீஸ்’ என்று பெயர் வைத்தார். எம்.ஜி.ஆர்., சிவாஜிகணேசன், ஜெமினிகணேசன் போன்ற பெரிய நடிகர்கள் நடித்த பல வெற்றிப்படங்களை வெளியிட்டுப் புகழ் பெற்றார்.
சென்னை சென்ட்ரல் ஸ்டேஷனை ஒட்டிக் கீழ்ப்புறம் உள்ள ‘வால்டாக்ஸ்’ சாலையின் வடகோடியில் இருந்த ‘ஒற்றைவாடை’ என்னும் நாடக அரங்கம் ஒன்றுதான், அக்காலத்தில் புகழ் பெற்று விளங்கியது.
அங்கு நாடகம் நடத்தாத நாடகக் கம்பெனிகளும், அதே அரங்க மேடையில் நடிக்காத நடிகர் –நடிகைகளும் அந்நாட்களில் இல்லை என்று கூறும் அளவிற்கு அது அவ்வளவு புகழ் பெற்றிருந்தது. அதனால், அந்த ஒற்றைவாடை தியேட்டரைச் சார்ந்து, அருகில் உள்ள ‘எலிபண்ட் கேட்’ என்னும் ‘யானைக் கவுனி’ மற்றும் பல பகுதிகளில் பெரும்பாலான நாடக – சினிமா நடிகர் – நடிகை கள், ஏனைய கலைஞர்களும் வசித்து வந்தனர். அவர்களில் சிறப்பாகக் குறிப்பிடத்தக்கவர்கள் எம்.ஜி.ஆர்., எம்.ஜி.சி. சகோதரர்கள் ஆவார்கள்.
யானைக்கவுனிப் பகுதியில் எம்.ஜி.ஆர். வசித்து வந்த அந்தக்காலத்தில், அருகில் இருந்த ஸ்ரீமுருகன் டாக்கீஸ் சினிமா தியேட்டருக்கு கால்நடையாகவே சென்று படம் பார்க்கும் வழக்கத்தைக் கொண்டிருந்தார். அப்பொழுது அவர் நாடக நடிகர் என்ற முறையிலும், பரமசிவ முதலியார் தியேட்டர் உரிமையாளர் என்னும் முறையிலும் ஒருவருக்கொருவர் அறிமுகமாகி, நாளடைவில் அது நட்பாகக் கனிந்தது.
எம்.ஜி.ஆர். திரைப்படங்களில் நடித்துப் புகழ் பெற்று வசதியான நிலைக்கு வந்த பிறகும் கூட அவருக்கும் முதலியாருக்கும் இடை யிலிருந்த அந்தப்பழைய நட்பும் பாசமும் கொஞ்சம் கூட குறையாமல் வளர்ந்து பெருகிக்கொண்டே வந்தது. வயது வளர வளர – வசதிகள் பெருகப் பெருக இருவருடைய நட்பும், தாம்புக் கயிறுபோல இறுகி முறுக்கேறியது. ஏனென்றால், அது தூய – உண்மையான நட்பு!
எம்.ஜி.ஆரும், முதலியாரும் அவ்வப்போது சந்தித்து உரையாடி மகிழ்ந்து, ஒன்றாக உட்கார்ந்து ஜானகி அம்மா கரங்களி னால் உணவு பரிமாறப்பட்டு உண்டு மகிழ்ந்து தங்கள் நட்பை நாளொருமேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்த்துக் கொண்டு அதில் இன்பம் கண்டனர்.
ஒவ்வொரு தமிழ் – ஆங்கிலப் புத்தாண்டு நாளிலும் எம்.ஜி.ஆர். அதிகாலையிலிருந்தே ஒரே ஒருவருடைய வருகையை மட்டும் ஆவலுடன் எதிர்பார்த்து காலைச்சிற்றுண்டி உண்ணாமல் காத்துக்கொண்டிருப்பார். குறிப்பிட்ட நேரத்தில் கார் ஹாரன் ஒலி கேட்கும். எம்.ஜி.ஆர். வெளியில் வந்து எட்டிப்பார்ப்பார். அவர் எதிர்பார்த்தபடியே பற்கள் முப்பத்திரண்டும் தெரிய பரமசிவ முதலியார் அன்றாடம் அவர் அணியும் பட்டுச்சட்டை, ஜரிகை வேட்டித்துண்டு அணிந்து காரிலிருந்து இறங்குவார். அன்பு நண்பர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் ஆரத்தழுவி ஆனந்தம் கொள்வர்.
அந்தக்காலத்து வழக்கத்தை இந்தக்காலத்துக்குத் தகுந்தபடி சிறிதும் மாற்றிக்கொள்ள விரும்பாத முதலியார், தன் சில்க் சட்டைப்பையிலிருந்து மணிபர்சை எடுத்துத்திறந்து அதிலிருந்து ஒரே ஒரு ரூபாய் நாணயத்தை எடுத்து புத்தாண்டு அன்பளிப்பாக எம்.ஜி.ஆருக்கு வழங்குவார்.
எம்.ஜி.ஆர். அதை வாங்கிக் கண்களில் ஒற்றிக்கொண்டு பதிலுக்கு தன் பட்டுச்சட்டைப் பையிலிருந்து ஒரு நூறு ரூபாய் நோட்டை எடுத்து முதலியாருக்குக் கொடுப்பார். அவர் அதை வாங்கித் தன் கண்களில் ஒற்றிக்கொண்டு பத்திரமாக மணிபர்சில் வைத்துக்கொள்வார்.
இந்த நிகழ்ச்சிக்குப்பின்னர்தான் எம்.ஜி.ஆர். தனது இனிய இல்லத்தரசி ஜானகி அம்மா முதல் மற்றவர்களுக்கெல்லாம் புத்தாண்டு அன்பளிப்புப் பணம் வழங்க ஆரம்பிப்பார்.
முதல் ‘போணி’ முதலியார்தான்.
எம்.ஜி.ஆர். முதல் அமைச்சர் ஆன பிறகு 1978 ஜனவரி மாதம் 17–ந்தேதி ‘தினத்தந்தி’ நாளிதழில் முதலியார் ஒரு விளம்பரம் கொடுத்தார். அதில் ‘‘இன்று 61–வது பிறந்த நாள் விழா காணும் எனது ஆரூயிர் குடும்ப நண்பர் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். அவர்கள் பல்லாண்டுகள் நலமுடன் வாழப் பிரார்த்தித்து வாழ்த்தும் வி.எம்.பரமசிவ முதலியார்’’ என்று குறிப்பிட்டு இருந்தார்.
அதைப்பார்த்த எம்.ஜி.ஆர். தன் நண்பரை தொலைபேசி வாயிலாக அழைத்து, ‘‘என் பிறந்த நாள் உங்களைத்தவிர யாருக்குமே தெரியாது. இதுவரைக்கும் யார்கிட்டேயும் நான் சொன்னதும் கிடையாது, சொல்றதும் இல்லை. அப்படி இருக்கும்போது இன்னிக்கு நீங்க ஏன் அதை போட்டிங்க?’’ என்று அன்புடன் கடிந்து கொண்டார்.
அதற்கு முதலியார், ‘‘இப்போ நீங்க முந்தி மாதிரி சினிமா நடிகர் இல்லே. இந்தத் தமிழ்நாட்டின் முதல்–அமைச்சர். இதுவரைக்கும் இல்லேன்னாலும், இப்போவாவது – இனிமேலாவது உங்க பிறந்த நாள் எதுன்னு எல்லா மக்களுக்கும் தெரியட்டுமேன்னுதான் தினத்தந்தியிலே போட்டேன்’’ என்றார்.
எம்.ஜி.ஆரால் பதில் ஏதும் பேசமுடியவில்லை. அதற்குப் பிறகுதான் எம்.ஜி.ஆரின் பிறந்த நாள் ஜனவரி 17 என்பது அவருடைய அத்தனை ரசிகப் பெருமக்களுக்கும் மற்றும் அரசியல், திரை உலக நண்பர்களுக்குமே தெரியவந்தது.
அதனைத்தொடர்ந்து, ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 17 எம்.ஜி.ஆர். பிறந்த நாளில் முதலியாரின் வாழ்த்துச்செய்தி தவறாமல் ‘தினத்தந்தி’ நாளிதழில் வந்து கொண்டிருந்ததை நானும் பார்த்திருக்கிறேன்.
எம்.ஜி.ஆர். தீவிர அரசியலில் ஈடுபட்டு வென்று முதல்–அமைச்சர் ஆன பிறகும்கூட அவர் இல்லாமல் முதலியாரின் குடும்பத்தில் எந்த ஒரு விசேஷங்களும் நடைபெற்றது இல்லை, நடக்கவும் நடக்காது.
முதலியாரது பிள்ளைகளின் திருமணச் சடங்குகளை சம்பிரதாயப் பிரகாரம் பிராமணப் புரோகிதர்கள் நடத்துவார்கள். ஆனால் தேங்காய் மீதிருக்கும் திருமாங்கல்யத்தை எடுத்து மணமகனின் கரங்களில் கொடுப்பது மட்டும் ஒரே ஒருவருடைய கரங்கள்தான். அது அள்ளி அள்ளி வழங்கிய மகாபாரதக் கர்ணனுடைய கரங்களுக்குச் சமமான எம்.ஜி.ஆரின் மஞ்சள் கரங்கள்தான்.
அந்த அளவிற்கு எம்.ஜி.ஆரும், பரமசிவ முதலியாரும் ஒருவர் மீது ஒருவர் அன்பையும், நட்பையும் மட்டும் அல்ல, ஆரூயிரையே வைத்திருந்தனர் என்றால் அது சற்றும் மிகை அல்ல என்பேன்.
பரமசிவ முதலியார் சபரிமலைக்கு மாலை அணிந்து செல்வது வழக்கம். 1987 டிசம்பர் மாத இறுதியில் வழக்கம்போல சபரிமலை சென்று திரும்பிய முதலியார், அய்யப்ப சுவாமி பிரசாதங்களுடன் ராமாபுரம் எம்.ஜி.ஆர். தோட்டத்திற்குச் சென்றார். அந்தச் சமயத்தில் முதல்–அமைச்சர் எம்.ஜி.ஆர். உடல் நலம் குன்றிய நிலையில் தன் படுக்கை அறையில் கட்டிலில் படுத்திருந்தார். எம்.ஜி.ஆரிடம் ஜானகி அம்மாள் முதலியாரை அழைத்துச்சென்றார். முதலியாரைக் கண்ட மாத்திரத்தில் எம்.ஜி.ஆர். சட்டென்று படுக்கையிலிருந்து எழுந்து அவரைத் தன் பக்கத்தில் வந்து அமரும்படி சைகை செய்தார்.
அதன்படி முதலியார் எம்.ஜி.ஆரின் பக்கத்தில் அமர்ந்தார். அவருடைய நெற்றியில் விபூதி குங்குமத்தை தன் கையினாலேயே இட்டார். சபரிமலையிலிருந்து எம்.ஜி.ஆருக்கென வாங்கி வந்த அய்யப்பனைப்பற்றிய தோத்திரப்பாடல்கள் மற்றும் பல விவரங்கள் அடங்கிய புத்தகங்களை முதலியார் கொடுக்க, எம்.ஜி.ஆர். அவற்றை வாங்கிக் கண்களில் ஒற்றிக்கொண்டு தலையணைக்கு அடியில் வைத்துக்கொண்டார்.
பிரசித்திப்பெற்ற பிரசாதமான அரவணைப் பாயசத்தை முதலியார் எம்.ஜி.ஆரிடம் நீட்டினார். அதை அவர் கையாலேயே தன் வாயில் ஊட்டிவிடும்படி எம்.ஜி.ஆர். சைகை செய்தார். அதன்படி அரவணைப்பாயசத்தை ஒரு ஸ்பூனில் எடுத்துக் கொஞ்சம் கொஞ்சமாக குழந்தைக்கு ஊட்டுவதைப்போல எம்.ஜி.ஆருக்கு ஊட்டிவிட்டார்.
அந்த இறுதி நாட்களில் தெளிவாக வாய் பேச முடியாமல் நாக்குழறிக்குழறி குழந்தை மழலை மொழி பேசுவதைப்போன்ற நிலையில், பேச்சு மாறி பாதிக்கப்பட்டிருந்த எம்.ஜி.ஆர். என்ன நினைத்தாரோ என்னவோ – அப்பொழுது அவர் இதயக் கடலில் என்னென்ன பழைய அலைகள் எல்லாம் புரண்டு எழுந்தனவோ – திடீரென்று தாவி முதலியாரை இறுகக் கட்டிக்கொண்டு குமுறிக்குமுறி அழ ஆரம்பிக்க அதைக்கண்ட முதலியாரும் தன்னை மறந்து எம்.ஜி.ஆரை மேலும் இறுகத் தழுவிக்கொண்டு தேம்பித் தேம்பி அழ – சொல்ல முடியாத இந்த சோகக் காட்சியைப் பார்த்து அருகில் நின்ற ஜானகி அம்மாவும் சேர்ந்து அழுதிருக்கிறார். அது ஒரு கண்ணீர்க் காட்சியாகிவிட்டது.
ஒருவருக்கொருவர் எந்த ஒரு துரும்பளவு பிரதிபலனையும் எதிர்பாராமல், தூய்மையும், வாய்மையுமாக – நெருக்கமும், நேசமுமாக இத்தனை ஆண்டுகளாக கடுகத்தனை கருத்து வேறுபாடும் இன்றி, கண்ணும், அதைக்காக்கும் இமையும்போல கலந்து நட்புக்கு நல்லதோர் எடுத்துக்காட்டாகவும், இலக்கணமாகவும் வாழ்ந்து காட்டிய அந்த இரு வள்ளல் பெருமக்களும் மனிதத்தையும் மிஞ்சிய புனிதமான ‘மித்ரவாஞ்சை’ என்னும் தங்கம் நிகர் நட்பு பாசத்துடன் அந்த அறைக்குள் சங்கமித்தனர்.
எம்.ஜி.ஆரின் விருப்பத்திற்கு இணங்கி, முதலியார் அன்று ஒருநாள் முழுவதும் அவருடனேயே அங்கு தங்கி இருந்து பழைய கதைகள் எல்லாம் பேசி மகிழ்ந்து பகிர்ந்து கொண்டு விட்டு வீடு திரும்பினார்.
இது நிகழ்ந்த ஒரே வார காலத்தில் 24.12.1987 நள்ளிரவு கடந்து எம்.ஜி.ஆர். என்னும் துருவ நட்சத்திரம் மறைந்தது.
ஆன முதலில் அள்ளி வழங்கி, தான தருமங்கள் புரிந்த அந்த பரங்கிமலை வள்ளல் பெருமகனார் ‘அமரர்’ ஆனார்.
வாழ்க்கையில் காய்ந்து வந்து கையேந்தியவர்களுக்கெல்லாம் எடுத்துக்கொடுத்த அவரது எதையும் தாங்கிய அந்த இதயம் ஓய்ந்து போய்விட்டது.
எம்.ஜி.ஆர். இறந்த அந்த நாள் பரமசிவ முதலியார் பிறந்த நாள். ஆம். 25.12.1924–ல் முதலியார் பிறந்தார். எம்.ஜி.ஆரைக்காட்டிலும் முதலியார் 7 வருடம் 11 மாதங்கள் 8 நாட்கள் மூத்தவர்.
இன்னொரு சிறப்பு என்னவெனில், எம்.ஜி.ஆர். பிறந்த அதே 17.1.1917–ம் நாள் அன்றைக்குத்தான், பரமசிவமுதலியாரின் தந்தை முருகேச முதலியார் தமிழ்நாட்டிலேயே முதன் முதலாகக் கட்டிய ‘கினிமா சென்ட்ரல்’ தியேட்டரில் முதன் முதலாக மதராசாபட்டின வாழ் மக்களுக்கு மவுன சினிமாப்படம் காட்டி மகிழ்வித்த நாளாகும்!
‘‘இந்த உலக வாழ்வை விட்டு ஒரேயடியாக நீங்கப்போகிறவர்களுக்கு சற்று முன்கூட்டியே ‘அது’ தெரிந்துவிடும்! – அவர்களுடைய மனதிற்கு நாம் மறையப்போகிறோம் என்ற உள்ளுணர்வு உண்டாகிவிடும்’’ என்று ஆன்றோர் ஆண்டாண்டு காலங்களாகக் கூறி வருகின்றனர்.
‘தனது நெஞ்சைவிட்டு நீங்காத நீண்ட கால உயிர் நண்பரைச் சந்தித்து, அவரது அன்புக்கரங்களால் அய்யப்ப சுவாமிக்கு நைவேத்தியம் செய்யப்பட்ட அரும்பிரசாதமான அரவணைப்பாயசம் தன் வாயில் ஊட்டப்பெறுவது இதுதான் இறுதித்தடவை! இனி இந்த பாக்கியம் தனக்குக் கிடைக்கப்போவது இல்லை’ என்ற உணர்வு எம்.ஜி.ஆரின் உள்ளத்தில் தோன்றிவிட்டது போலும். அதனால்தான் அவரை அறியாமல் துக்கம் பீறிட்டு அதைத் தாங்க முடியாமல் அப்படிக் குமுறிக் குமுறி அழுதிருக்கிறார்.
‘‘அவர் மறைந்த பிறகுதான் என் மனதிலும் இதுபட்டது’’ என்று முதலியார் ஒரு சமயம் என்னிடம் நேரிலேயே இந்த நிகழ்ச்சிகள் அனைத்தையும் கூறிக்கண் கலங்கினார்.
எம்.ஜி.ஆர். முதல்–அமைச்சரான பின்னர் அவருக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கூறி எந்த ‘‘தினத்தந்தி’’யில் எந்த முதலியார் விளம்பரம் செய்து வந்தாரோ – அதே ‘‘தினத்தந்தி’’யில் அதே முதலியார் எம்.ஜி.ஆர். இறந்த நாளான தனது பிறந்த நாளில் இப்படி விளம்பரம் செய்யலானார்:–
‘‘எனது ஆரூயிர் குடும்ப நண்பர் எம்.ஜி.ஆர். மறைந்த இந்த நாளில் (டிசம்பர் 24) அவருடைய ஆன்மா சாந்தி அடைய இறை வனைப் பிரார்த்திக்கிறேன்.
– இப்படிக்கு, வி.எம்.பரமசிவ முதலியார், மிராசுதார், சுரோத்தியம்தாரர், உரிமையாளர் ஸ்ரீமுருகன் டாக்கீஸ், சென்னை–1’’.
நேசமும் பாசமும் ஒன்று கலந்த இந்த நினைவாஞ்சலிச் செய்தியை 2005–ம் வருடம் வரையிலும் நான் தவறாமல் ‘தினத்தந்தி’யில் பார்த்து வந்தேன். அதற்கு அடுத்த ஆண்டு அது வரவில்லை. ஏனென்றால் முந்தின ஆண்டோடு அது முடிந்துபோய்விட்டது.
அதன் காரணம் 27.8.2005–ல் தனது 81–வது வயதில் வி.எம்.பரமசிவ முதலியார் தன் ஆரூயிர் நண்பரான எம்.ஜி.ஆர். அன்புடன் அழைத்ததன் பேரில் விண்ணுலகம் சென்று அவர் அருகில் அமர்ந்துவிட்டார்.
அன்றைக்கு எம்.ஜி.ஆர். இல்லாமல் முதலியார் வீட்டில் எந்த விசேஷமும் இல்லை. இன்றைக்கு முதலியாருடைய அன்பு மகன் ப.பாலசுப்பிரமணியன் இல்லாமல் எங்கள் வீட்டிலும், நான் இல்லாமல் அவருடைய வீட்டிலும் எந்த விசேஷமும் இல்லை. அந்த அளவிற்கு எம்.ஜி.ஆர். – முதலியார் இருவருடைய ஆத்மாக்களும் எங்களை இணைத்து வைத்திருக்கின்றன.
புத்தாண்டு பரிசு
1961–ல் எம்.ஜி.ஆருக்கு நான் முதன் முதலாக எழுதிய ‘‘தாய் சொல்லைத்தட்டாதே’’ பட நாட்களிலிருந்து, ஒவ்வொரு புத்தாண்டு முதல் நாளன்றும், அவர் படப்பிடிப்பிற்கு வரும்போது கையில் ‘பவுச்’ எனப்படும் புடைப்பான ஒரு கையடக்கமான தோல்பையுடன் ஒப்பனை அறைக்குள் நுழைவார். அதில் ஒரு பக்கத்தில் நிறைய நூறு ரூபாய் நோட்டுகளையும், இன்னொரு பக்கத்தில் பத்து ரூபாய் நோட்டுகளையும் திணித்து வைத்திருப்பார்.
முதலில் தேவரண்ணனும், இயக்குனர் திருமுகமும் நானும் எம்.ஜி.ஆரின் மேக்–அப் அறைக்குள் நுழைந்து அவருக்கு புத்தாண்டு வாழ்த்துக்கள் கூறி வணங்குவோம். உடனே பையின் ஜிப்பைத் திறந்து 100 ரூபாய் நோட்டுகளை எடுத்து அன்பளிப்பாக ஆளுக்கு ஒரு நோட்டு வழங்குவார். அதனைத் தொடர்ந்து தனக்குப் புத்தாண்டு வாழ்த்துக்கூற வருகிறவர்களுக்கெல்லாம் அவரவர் நிலைக்குத் தக்கவாறு 100 ரூபாய் நோட்டுகளையும், கம்பெனி மற்றும் ஸ்டூடியோ சிப்பந்திகள் அனைவருக்கும் 10 ரூபாய் நோட்டுகளையும் எடுத்து எடுத்துக் கொடுத்துக்கொண்டே இருப்பார்.
எம்.ஜி.ஆர். அறையிலிருந்து வெளியே வரும்போது, முன்பு ரூபாய் நோட்டுகளால் புடைத்துப்போயிருந்த அந்தப்பை இப்பொழுது நோட்டுகளை எடுத்தபின்பு சிறுத்துச் சுருங்கிப்போயிருக்கும். ‘‘ராமசாமி’’ என்று கூப்பிடுவார். அவருடைய கார் டிரைவர் ‘‘அண்ணே’’ என்று ஓடிவருவார். அவரை நோக்கி அந்தக் கைப்பையை அப்படியே வீசிவிட்டு அரங்கத்திற்குள் நுழைந்து விடுவார்.
முன்பு ஒருகாலத்தில் எந்தப்பணம் இல்லாமல் பசி பட்டினியோடு வாடகை வீட்டில் வாழ்ந்து, வறுமையின் காரணமாக முதல் மூத்த பாச மனைவி பார்கவி என்கிற தங்க மணியின் தங்க நகைகளை விற்று, அதனால் மாமனார் வீட்டாரின் வருத்தத்திற்கு ஆளாகியதும் அல்லாமல், அந்த ஆசை மனைவி சொற்ப காலத்திற்குள் அகால மரணம் அடைந்து இறுதியாக அவருடைய இன்முகத்தை ஒருமுறை பார்க்க வாய்ப்பில்லாமல் போய் வேதனையால் வெந்து துன்பத்தால் துடித்தாரோ – அந்தப்பணத்தை – அத்தனை கஷ்ட நஷ்டங்களுக்கெல்லாம் காரணமான அந்தக்காசை – பொருளை இப்பொழுது துச்சமாகக் கருதி தூக்கி வீசினாரே – அந்த அற்புத மனிதருக்குப் பெயர்தான் ‘பொன்மனச்செம்மல்’ எம்.ஜி.ஆர்.
எம்.ஜி.ஆரின் கொடை உள்ளம்
நாடகம் இல்லாதபோது, ஒவ்வொரு நாளும் தவறாமல் எம்.ஜி.ஆர். முதலியாரைச் சந்தித்து அவருடன் உரையாடுவதும், உணவருந்தி மகிழ்வதும் அவ்வப்போது தேவையான உதவிகள் அவரிடமிருந்து பெறுவதும் வழக்கமாகி, அப்படியே இருவருடைய நட்பும் இறுகியது. அதிகாலையில் அவர்கள் நடைப் பயிற்சி செய்வது வழக்கம்.
அப்படி ஒருநாள் காலை வேளையில் இருவரும் நடந்து வந்து கொண்டிருந்தபோது ‘பிளாட்பாரம்’ என்னும் நடைபாதையில் ஒரு பெண், பிட்டு (அரிசி மாவுப்புட்டு) அவித்து விற்றுக்கொண்டிருந்ததைப் பார்த்த எம்.ஜி.ஆருக்கு அதை வாங்கிச் சாப்பிடவேண்டும் என்று ஆசைப்பட்டு முதலியாரிடம் சொன்னார். அன்றைக்கு என்று பார்த்து அவர் தன் சட்டைப்பையில் மணிபர்சை எடுத்து வைக்க மறந்துவிட்டார். ஆனாலும், எம்.ஜி.ஆரின் ஆசையை நிறைவேற்றுவதற்காக புட்டு சுடும் அந்தப்பெண்ணின் அருகில் அமர்ந்து:–
முதலியார்:– அம்மா! என் நண்பர் புட்டு சாப்பிட ஆசைப்படுறாரு. இன்னிக்குன்னு நான் காசு எடுத்துக்கிட்டுவர மறந்திட்டேன். இப்போ எங்க ரெண்டு பேருக்கும் நீ புட்டு கொடுத்தின்னா நாளைக்கு காலையிலே வந்து காசு கொடுத்திடுறேன் என்று பவ்வியமாகச் சொன்னார்.
அதற்கு அந்தப்பெண், தம்பி! உங்க ரெண்டு பேரையுமே எனக்கு நல்லாத் தெரியும். நீ பக்கத்து முருகன் டாக்கீஸ் முதலாளி. நான் சினிமா பார்க்க அங்கே வரும்போதெல்லாம் நீ உள்ளே உட்கார்ந்து டிக்கெட் கொடுப்பே.
(எம்.ஜி.ஆரைக்காட்டி) இந்தப்பையனை ஒற்றைவாடைக் கொட்டகையில் நடக்கிற நாடகங்கள்ள பார்த்திருக்கிறேன்.
புட்டுப்பெண் தொடர்ந்தார்:– நீங்க ரெண்டு பேரும் ஒரு அந்தஸ்துல இருக்கிற பிள்ளைங்க. அதனால காசு கொடுக்கவேண்டாம். வேணுங்குற மட்டும் புட்டு தின்னுட்டுப்போங்க என்று கூறி ஒரு தட்டு நிறைய சுடச்சுட புட்டும், அதற்குத் தொட்டுக் கொள்வதற்கு சர்க்கரையும் கொடுத்தார்.
அதைக்கண்டு நெஞ்சம் நெகிழ்ந்துபோய் எம்.ஜி.ஆர். பரமசிவ முதலியாரிடம் இப்படிச் சொல்லியிருக்கிறார்...
எம்.ஜி.ஆர்:– முதலியார்! நான் மட்டும் ஒரு பெரிய சினிமா நடிகனாகி, நிறைய சம்பாதிக்கும் சந்தர்ப்பம் வந்தால் இந்த அம்மாவுக்கு இதே பகுதியில் ஒரு நல்ல இடம் பார்த்து சொந்தக்கடை வச்சுக்கொடுப்பேன்.
அந்த அளவிற்கு அந்தக் கஷ்டகாலத்திலேயே எம்.ஜி.ஆர். கொடை உள்ளம் கொண்டு வாழ்ந்திருக்கிறார்.
குளிரில் நடுங்கிய பெண்ணுக்கு உதவி
இதைப்போன்று இன்னொரு நிகழ்ச்சி:–
அது மார்கழி மாதம். அதன் அதிகாலைப் பனிபொழியும் பொழுதில் வழக்கம்போல முதலியாரும், எம்.ஜி.ஆரும் தங்கச்சாலை பகுதிச் சாலையோரம் நடந்து சென்றனர். முதலியார் முழுக்கைச் சட்டை அணிந்து அதன் மேலே ஒரு நீண்ட டவலைப் போர்த்தியிருந்தார்.
ஆனால் எம்.ஜி.ஆரோ மார்பில் முண்டா பனியனும், தலையில் ஒரு துண்டையும் முக்காடுபோல போட்டுக்கொண்டிருந்தார். அப்பொழுது சில அடிகள் தூரம் நடந்து சென்ற எம்.ஜி.ஆர். திடீரென்று நின்று திரும்பிப்பார்த்தார்.
நடைபாதையில் வாழ்க்கை நடத்தும் ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்த வயது முதிர்ந்த ஒரு மூதாட்டி பழைய புடவையில் கிழித்தெடுத்த ஒரு முண்டுத்துணியை மட்டும் இடுப்பில் கட்டிக்கொண்டு அதற்குமேலே உடம்பில் போர்த்திக்கொள்வதற்கு துணியேதும் இல்லாத நிலையில் தன் இரண்டு கைகளையும் குறுக்குவாட்டில் போட்டுத்தோளில் வைத்துக்கொண்டு கொட்டும் பனிக்குளிரில் வெடவெடவென்று நடுங்கிக் கொண்டிருப்பதைகண்டார்.
சட்டென்று அவர் அந்த மூதாட்டியின் அருகில் சென்று தன் தலையில் முக்காடு போட்டிருந்த அந்தத் துண்டை எடுத்து அம்மூதாட்டியின் உடம்பில் போர்த்திவிட்டுத் திரும்பி முதலியாரிடம் வந்து சர்வ சாதாரணமாக ‘‘உம். அப்புறம் சொல்லுங்க முதலியார் என்னாச்சு’’ என்று அவர்கள் பேசிக்கொண்டிருந்த உரையாடலைத் தொடர்ந்தார்.
அந்தக்கணத்தில் முதலியார் நினைத்தார்.–
‘‘நான் வசதியான குடும்பத்தைச் சேர்ந்தவன். மேலே முழுக்கை சட்டையும், அதன் மீது பெரிய டவலையும் அணிந்திருக்கிறேன். ஆனால், எம்.ஜி.ஆரோ கஷ்ட தசையில் இருப்பதால் உடம்பில் சட்டை அணியாமல் வெறும் பனியனோடும் ஒரு சிறு துண்டோடு மட்டுமே இருக்கிறார். அந்தத் துண்டையும் எடுத்து குளிரில் நடுங்கும் கிழவி மீது போர்த்திவிட்டார்.
இந்த எண்ணம் எனக்கு ஏன் ஏற்படவில்லை?
ஆக தரும சிந்தனை என்பது செல்வந்தனான என்னிடம் இல்லை. ஏழையான எம்.ஜி.ஆரிடம்தான் இருக்கிறது. அதனால், வருங்காலத்தில் இவர் ஒரு பெரிய ஆளாக வந்து புகழ் பெறுவார்.’’
சில வருடங்களுக்கு முன்பு பரமசிவ முதலியார் வாழ்ந்த அந்த நாட்களில் – அவர் என்னை நேரில் சந்தித்துப்பேச விரும்பி தொலைபேசி வாயிலாக என்னுடன் தொடர்பு கொண்டு அழைத்தார். அதன் பேரில் நான் ஸ்ரீமுருகன் டாக்கீசுக்குச்சென்று நீண்ட நேரம் அவருடன் உரையாடி மகிழ்ந்த பொழுது, எம்.ஜி.ஆரைப்பற்றிய தகவல்களை எனக்குத் தெரிவித்தார்.
அவற்றில் இரு நிகழ்ச்சிகளைத்தான் மேலே குறிப்பிட்டிருக்கிறேன்.