Pages

Subscribe:

Ads 468x60px

Monday, 17 February 2014

போங்க பாஸ் ! எவ்வளவோ பார்த்துட்டோம்!

காலங்காலமா தமிழ் சினிமாவில் காதலை வெரைட்டியாக் காட்டின பசங்கதானே நாம? இதோ அந்த கிளிஷேக்கள் உங்களுக்கே உங்களுக்காக...

ரோடு நேராகத்தான் இருக்கும். குண்டும் குழியுமா இருக்காது. ஆனா, அப்போ பார்த்து எங்கேயோ இருந்து வர்ற ஹீரோவும் ஹீரோயினும் இடிச்சுக்குவாங்க. பார்வையால ஒருத்தருக்கொருத்தர் சின்ன ஜெர்க் தருவாங்க. ஹீரோயினோட பேப்பர்ஸ் (அதுல என்ன எழவோ எழுதி இருக்கட்டும்) காத்துல பறந்து போகும். அப்பாடக்கர் தம்பி மாதிரி கருத்தா பேப்பரைப் பொறுக்கிட்டுப் போய் ஹீரோயின்கிட்ட நீட்டுவாரு நம்ம ஹீரோ. அப்புறம் என்ன... லவ் ஸ்டார்ட்ஸ்.

லைப்ரரியில் அத்தனை பேரும் உட்கார்ந்து படிச்சுக்கிட்டு இருந்தாலும் ரெண்டு பேரும் ஒரே ரேக்ல இருக்கிற ஒரே புக்கை எதிர் எதிரா நின்னு எடுக்க மல்லுக்கட்டிட்டு வெட்கப்பட்டு சிரிச்சுட்டுப் போவாங்க... காதலும் பின்னாடியே போகும்.

கோவிலில் எரியும் தீபம் காத்துல அணையப் பார்க்கும். அம்மாம் பெரிய கோவிலில் இந்த ரெண்டு வேலையற்ற ஜீவனுங்க மட்டும் அதைக் கண்டுபிடிச்சு,  நாலு கையாலேயும் மறைச்சு தீபத்தை அணையாமக் காப்பாங்க. அப்புறம் என்ன காதல் தீ பத்திக்கும்.

ஹீரோவும் ஹீரோயினும் லிஃப்ட்ல போனா, நிச்சயம் பவர் கட் ஆகும். இல்லைனா லிஃப்ட் அவுட் ஆஃப் ஆர்டர் ஆகும். அப்புறம் காதல் ஃபார்ம் ஆகும்.

ஹாஸ்பிட்டலில் அடிபட்டுக் கெடப்பாங்க ஹீரோயின். ரத்தம் கொடுப்பாரு ஹீரோ... அப்புறம் மொத்தமும் கொடுப்பாங்க ஹீரோயின்.

பாம்பு கடிச்சா, பல்லை வெச்சுக் கடிச்சு விஷத்தை அழகா உறிஞ்சி எடுத்துத் துப்புவாரு ஹீரோ. அதாச்சும் பரவாயில்லை பாஸ். கொல்லக்காட்டுல நடந்து போய் ஹீரோயினுக்கு முள்ளு குத்தினாலும் பல்லால கடிச்சு முள்ளை எடுப்பாரு ஹீரோ. செம சீன்ல.

வயசுக்கு வந்து குச்சுக்கட்டி குத்தவெச்சிருக்கும் அம்மணி. பொங்கலுக்கு அரிசி வாங்க வருவாரு விடலை ஹீரோ. அவ்ளோ குட்டியூண்டு ஓட்டை வழியா ஹீரோவை மட்டும் கரெக்ட்டாப் பார்த்துடும் பொண்ணு. அப்புறம்... காஞ்சிபுரம், விழுப்புரம்... லவ்ஸ்தான் பாஸ்.

'நீங்க வேற நாங்க வேற’ம்பார் ஹீரோயினோட அப்பா. ஹீரோவுக்கு ரோஷம் பொத்துக்கும். கத்தியை எடுத்துத் தன்னோட கையும் ஹீரோயினோட கையும் கீறி ரத்தம் வரவெச்சு ஒன்ணாக்கிடுவார். 'பார்த்தீங்களா ரெண்டு பேரோட ரத்தமும் ஒண்ணாகிடுச்சு’னு பன்ச் அடிப்பார். அப்டியே ஷாக்காயிடுவார் ஹீரோயின் அப்பா.

ஏழை ஹீரோவைப் புரட்டியெடுத்து சரக்கு ரயிலில் அனுப்பிவிடுவார் ஹீரோயினின் 'வில்ல’ அண்ணன். ஹீரோயினுக்கு ஒண்ணு பைத்தியம் பிடிக்கும். இல்லைனா, ரூமை அடைச்சுக்கிட்டு கொலவெறியா பாட்டுப் பாடும். இதுக்கு அந்தப் பயலோடயே அனுப்பி இருக்கலாமோனு வில்லனையேக் கதற வெச்சுடும் பொண்ணு.

நான்கைந்து அண்ணன்களோட இளவரசி மாதிரி ஓப்பனிங்ல ஹீரோயினைக் காட்டினா, நிச்சயம் அந்தப் பொண்ணு ஒரு லூஸையோ அல்லது ஊர்சுத்திப் பயலையோ லவ் பண்ணி க்ளைமாக்ஸ் வரைக்கும் சீரழியும்.

திமிர் பிடிச்ச பொண்ணு ஹீரோயினா இருந்தா, ஏழை ஹீரோ வலுக்கட்டாயமா தாலியைக் கட்டி டீல்ல விட்ருவாரு. அவ்வளவு நேரம் திமிரா இருந்த பொண்ணு தாலி கழுத்துல ஏறினதும் சீக்கு விழுந்த கோழி மாதிரி ஹீரோவுக்குத் தன் அன்பை உணர்த்த மெனக்கெடும். கொட்டும் மழையில் நிக்கும். மண்சோறு சாப்பிடும். தீ மிதிக்கும். அவ்வளவு ஏன் கொலை பண்ணிட்டு ஜெயிலுக்குக்கூட போகும்.

காதலுக்காக நரைகூடிக் கிழப்பருவமெய்தி எல்லாம் காத்திருப்பாய்ங்கே ரெண்டு பேரும். யாரையாவது போட்டுத் தள்ளிட்டு டபுள் ஆயுள் தண்டனை முடிச்சுட்டு வர்ற வரைக்கும் தடியை ஊன்றி நிப்பாய்ங்கே. இல்லைனா, சவுக்கெடுத்து கோவில்ல தன்னைத்தானே அடிச்சுக்கிட்டு பார்க்கிறவய்ங்க உசுரையும் சேர்த்து வாங்குவாய்ங்கே.

பண்ணையார் பொண்ணை வேலைக்கார ஹீரோ காதலிக்கிறார்னா, ஒண்ணு அவரோட பாட்டு காரணமா இருக்கும். இல்லைனா, அவரோட வீரம் காரணமா இருக்கும். ரெண்டும் இல்லையா... க்ளைமாக்ஸ்ல அந்த ஜமீனுக்கே சொந்தக்காரர் ஹீரோவோட அப்பாவா இருக்கும்னு ட்விஸ்ட் கொடுப்பாய்ங்க... எப்பூடி.

ஹீரோவைப் பழிவாங்க ஹீரோயினைக் கடத்தி சித்ரவதை பண்ணுவாரு வில்லன். இங்கே அடிச்சா அங்கே வலிக்குமாம். ஹீரோ நிராயுதபாணியா நின்னு, 'என்னை என்ன வேணும்னாலும் பண்ணிக்க. என் செல்லத்தை விட்ருடா’னு கதறுவாரு.

படம் முழுவதும் ஒன்சைடாகவே ஹீரோவை லவ் பொண்ணும் செகண்ட் ஹீரோயின் முறைப்பொண்ணு. எதுக்காம்? க்ளைமாக்ஸ்ல கரெக்ட்டா ஊடால பாய்ஞ்சு, ஹீரோவைக் காப்பாத்தி கடப்பாரை, கத்தி, அருவா வெட்டு, புல்லட் குண்டை உடம்புல வாங்கிச் செத்துப்போகும். ஆனா சீக்கிரத்துல சாகாது. 'ஆஸ்பத்திரிக்குப் போலாம்’ என ஹீரோ கதறினாலும், 'வேணாம் மாமா. என் உசிரு உன் மடியிலேயே போகட்டும்’னு டயலாக் பேசி பொறுப்பா ஏற்கெனவே லவ் பண்ணிட்டு இருக்கிற ஹீரோ, ஹீரோயினை ரத்தக்கையோட சேர்த்துவெச்சுட்டு கண்ணைத் திறந்த வாக்கிலே செத்துப்போயிடும். ஹீரோதான் ஒரு ஃபீலிங்ஸோட கண்ணை மூடிவைப்பாரு.

ஹீரோவோ, ஹீரோயினோ அநியாயத்துக்கு சமூக சேவை செய்வாய்ங்க. பாட்டிக்கோ ஸ்கூல் பிள்ளைகளுக்கோ ரோடு க்ராஸ் பண்ணி விடுறதைப் பார்த்ததும் லவ் ஃபார்ம் ஆகும். அம்புட்டு ஏன் பஸ்ல கர்ப்பிணிக்கு சீட் கொடுத்தாக்கூட லவ் வருமே பாஸ்.

அடிபட்ட ஹீரோவுக்கு தாவணி கிழிச்சிக் கட்டுப்போடும் ஹீரோயின். புதை குழியில் விழுந்த ஹீரோவையும் தாவணியைக் கொடுத்துக் காப்பாத்தி சாதா தாவணியை மல்ட்டி யூஸபிள் தாவணியாய் மாற்றி காதல் லாவணி பாடுவார்கள்.

என்ன கொலவெறியோ, ஏற்கெனவே அடிபட்டு, மிதிபட்டு குத்துயிரும் கொல உயிருமா கெடப்பாரு ஹீரோ. ஹீரோயின் 'நீ ஒரு ஆம்பளைனா என் ஆளுகிட்ட ஒத்தைக்கு ஒத்தையா நில்லுடா’னு வில்லனை வெறியேத்தி அடுத்த ரவுண்டுக்கு ஹீரோவைக் கோர்த்துவிடும். இந்த மங்குனி ஹீரோவும் வில்லன் போட்டுவிட்ட வெத்தலைப்பாக்கு வாயோட ஃபைட்டிங் பண்ணி ஃபினிஷிங் கொடுப்பார்.

இவ்வளவு ஏன் பாஸ். சமீபத்துல பார்த்த தல படத்துலகூட தூரத்து இடிமுழக்கத்துக்குத் தாவி ஓடிவந்து ஹீரோயின் கட்டிப்பிடிச்சுக்கும். மின்னலைக் கூட காதலுக்குத் தூதா மாத்துனது யாரு... நம்ம பயகதேன்!

0 comments:

Post a Comment