Pages

Subscribe:

Ads 468x60px

Monday, 27 January 2014

வாழ்க்கை ஒரு கண்ணோட்டம்...!

ஒரு மனிதன் எதையெல்லாம் கொண்டாடலாம்? பிறந்த நாள், திருமண நாள், பண்டிகைகள்… இப்படித் தொடரும் நிகழ்வுகள். சிலர் கொண்டாடுவதற்கென்றே நாட்களை கண்டுபிடிக்கிறார்கள். வாழ்க்கையின் சுமையை துளித்துளியாய் ரசிக்கத் தெரிந்தவர்கள் அவர்கள்.

இப்போதெல்லாம் செல்போன் வாங்குவதைக் கூட நண்பர்களுடன் திருநாளாகத் தான் கொண்டாடுகிறார்கள். “வேர் இஸ் பார்ட்டி?” என்ற குரல் கேட்காத குறைதான்!

செலவில்லாமல் வாழ்க்கையை ஒரு கொண்டாட்டமாக மாற்ற முடியுமா……?

முதல்முறை போல் கவனி

ஞானி ஒருவரைத் தேடி பாடம் கற்க வந்தான் சீடன். பாடம் அதிகாலையில் நடைப் பயணமாக துவங்கியது. நாட்கள் கடந்து கொண்டிருந்தன. காலையில் சில மைல் தூரம் நடப்பது. வாகனம் சென்ற பாதையிலேயே செல்வது, பிறகு திரும்பி விடுவது. வேறு பாடங்கள் எதுவும் இல்லை.

சலித்துப்போன சீடன், “சாமி… பாடம் எப்போது துவங்குகிறது….? என்றான்.

“நீ வந்ததிலிருந்து அதுதானே நடக்கிறது. நீ எதையும் படிக்கவில்லையா….?” .

“தினமும் சென்ற பாதையிலேயே ஒரு முறை நடைப் பயணம்… இது சலிப்பாக இருக்கிறது….”

“அப்படியெனில் நீ இன்னும் பாடத்தை துவங்கவே இல்லை….” என்றார் ஞானி!

எதையும் முதல்முறை போல் கவனிப்பவனுக்கே வாழ்க்கை இனிக்கிறது.

ஞானியும் அதையேதான் கற்றுக் கொடுத்தார்.

வாழ்க்கையும் இப்படித்தான்!

தினமும் செய்கிற வேலை. அதே வேலை. அதே இடம்….! அதே மனிதர்கள்….! பேசிய அதே செய்திகள். குறிப்பாக, அலுவலகத்தில் வேலை செய்கிறவர்களுக்கு அதே ருசியான சாப்பாடு. இப்படியொரு தொடர் ஓட்டத்தில் வாழ்க்கை சலித்து விடுகிறது.

இதை மாற்றுவதற்கு பொழுதுபோக்காக எப்போதாவது திரைப்படம், சுற்றுலா என்று மாற்றிக் கொள்கிறவர்களும் உண்டு.

எதையும் முதல்முறை போல் கவனிக்கிறவர்களுக்கு வாழ்க்கை எப்போதும் சலிப்பதில்லை. தினமும் அலுவலகம் செல்கிற பாதைதான்… எத்தனையோ மரங்கள், கடந்து போகின்றன. ஒரு நாளும் மரத்தை ரசித்திருக்க மாட்டார்கள்.

தினமும் போகிற பாதையில்தான் ஒரு திருமண மண்டபம் இருக்கும். நமக்கென்று அங்கு போகிற வேலை வாய்க்கிறபோதுதான் அப்படியொரு இடம் இருப்பதே நமக்குத் தெரிகிறது.

சின்னச் சின்ன பயணங்களிலிருந்து பெரும் பயணங்கள் வரை நமக்கென பெரும் மகிழ்ச்சிûயும் உற்சாகத்தையும் இயற்கை வைத்திருக்கிறது. நாம்தான் அதைக் கவனிப்பதில்லை.

நம் வீட்டில் இருக்கிற பூச்செடிகளைக் கூட நாம் பொதுப் பார்வையால் பார்த்து விட்டுத்தான் நகர்கிறோம். பூவின் நுனியில் ஒரு வண்ணத்துப் பூச்சி சிறகடிப்பது நம் கண்ணுக்குத் தெரிவதில்லை.

செய்கிற வேலையை அன்றுதான் கற்றுக் கொள்வது போல் நினைத்து செய்கிறபோது தவறுகள் நிகழ வாய்ப்பில்லை. நாம் செய்யாத வேலையா…? என்று அசிரத்தை தலை தூக்குகிறபோது தவறுகள் மிகச் சுலபமாக நிகழ்கின்றன.

இன்றுதான் முதல் முறையாய் அந்த இடத்தைக் கடப்பது போல் தினமும் கடந்து போகிற பாதையை உற்று நோக்குங்கள். அங்கு நீங்கள் எதிர்பாராத ஒரு மகிழ்ச்சி உங்களை வரவேற்கும்.

துன்பத்தைக்கூட முதல் முறையாய் கவனிப்பது போல் கவனியுங்கள்! தீர்வு நமக்குள் புலப்படும்!

வாழ்க்கையை சுவாரசியமாகவும், மகிழ்ச்சியாகவும், பேருவகையோடும் கொண்டாட நினைக்கிற எல்லோர்க்கும் டி.எஸ். எலியட் அவர்கள் கூறியதுதான், “முதல்முறை போல் கவனி”.

நேற்றுக்கும் இன்றுக்கும் புதுமையைக் காணாதவர்கள் பயணத்தையே துவங்காதவர்கள்!

நீங்கள் பயணத்தை துவங்கி விட்டீர்கள். இனி வாழ்க்கை கொண்டாட்டம்தான். கொண்டாடுங்கள்!