உணர்ச்சி… உணர்வு.. என்னங்க வித்தியாசம்..?
வெளியிலே கிளம்பறபோது ஒரு ஸ்ப்ரே எடுத்து விஷ்க்ன்னு அங்கே இங்கே அடிச்சுக் கறோமே! அது உணர்ச்சி. பூஜையறைக்குள்ள, பூக்களோட வாசனைக்கு போட்டியா, காற்றில் கை கோர்த்து கமகமன்னு வருது பாருங்க, ஊதுவத்தி வாசனை… அது உணர்வு.
அலை போல வீசுகிறது உணர்ச்சி. ஆற அமர அனுபவிக்கிறது உணர்வு. ஜெயிக்கணும்னு நினைக்கறவங்களுக்கு இது ரெண்டுலே எது வேணும்னு கேட்கிறீங்களா? இரண்டுமே வேணும்ங்க!
அலை வீச்சுலே அழகும் இருக்கு. அதே நேரம் அது ஒரு வேகத்தில் வந்து போயிடும். அந்த உணர்ச்சியின் விளைவு உங்களுக்குள்ளே தீர்க்கமான முடிவுகளை எடுக்க வைச்சா ரொம்ப நல்லதுங்க. அடிமை தேசத்திலே நம்ம தலைவர் களுக்கு ஏற்பட்டது அவமான உணர்ச்சி. அதை அவங்க சுதந்திர உணர்வா மனமாற்றம் செய்தாங்க பாருங்க…. அங்கே ஆரம்பமானதுதான் வளர்ச்சி, மலர்ச்சி, புரட்சி, எல்லாமே!!
இது தேசத்துக்கு மட்டுமில்லை! நமக்கும் பொருந்தும் வாழ்வில் ஒரு விநாடியில் வந்து போகிற உணர்ச்சி வேகம். ஒரு மௌனமான சபதத்துக்கு வழிவிட்டா நாம முன்னேறுவதா அர்த்தம். ஆத்திரத்திலே அறிவை மறைச்சா பின்னடைவுன்னு அர்த்தம்.
உணர்ச்சியை உள்வாங்கி உணர்வா மாத்திக்கத் தெரியணும். ஒரு பொருளை திருட்டிலே பறிகொடுத்ததும் வருவது ஆத்திர உணர்ச்சி. அதன் பிறகு எச்சரிக்கையா இருந்தா, அதுக்குப் பேர் விழிப்புணர்வு.
ஒரு தவறு செய்து தலைகுனிய நேர்கையில் ஏற்படுவது அவமான உணர்ச்சி. அதை சரியா உள்வாங்கி நெறியா நடக்கத் தொடங்கினா, அதுக்குப்பேர் பொறுப்புணர்வு. உணர்ச்சிமயமான சூழலிலே ஒரே விஷயத்தில் கவனம் செலுத்தனாலே போதும். இந்த உணர்ச்சி உங்களை உணர்த்தப் போகுதா? வீழ்த்தப் போகுதா? உயர்த்தப் போகுதுன்னா அது அந்த உணர்ச்சியின் தாக்கம். வீழ்த்தப் போகுதுன்னா, அது அந்த உணர்ச்சியோட பாதிப்பு.
அட! உணர்ச்சி ‘ உணர்வு இரண்டும் எப்படி வேறயோ அதே போல பாதிப்பு ‘ தாக்கம் இரண்டும்கூட வேறதான். வார்த்தைகளை வெறும் வார்த்தைகளாப் பார்க்காம வாழ்க்கையா பார்க்கிற போதுதான், இன்னும் ஆழமா வாழ்வதா அர்த்தம். இன்னும் வேகமாக வளரப் போவதாகவும் அர்த்தம்.
0 comments:
Post a Comment