கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் என்பது நம்முடைய இந்திய அரசாங்கத்திற்கு பொருத்தமானதொன்று. ஒரு மருத்துவக் கல்லூரி மாணவி டில்லியில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டதன் எதிரொலியாக நாட்டில் அரசாங்கத்திற்கு எதிராக பலத்த எதிர்ப்பு கிளம்பியது.
மக்கள் போராட்டத்தில் இறங்கினர். இதனைத் தொடர்ந்து அரசாங்கம் பெண்களுக்கெதிரான மற்றும் பாலியல் தொடர்பான குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கவேண்டும், அதற்கு தேவையான சட்ட திருத்தங்களை கொண்டுவரவேண்டும் என்ற நோக்குடன் ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஜே.எஸ்.வர்மாவின் தலைமையில் ஒரு நீதிக் குழுவை அமைத்தது. இந்தக் குழு தன்னுடைய பரிந்துரையை 30 நாட்களுக்குள் அளிக்கவேண்டும் என்ற காலக்கெடுவையும் நிர்ணயித்தது.
பொது மக்கள், மகளிர் அமைப்புகள், தொண்டு நிறுவனங்கள், சட்ட வல்லுனர்கள், நீதித்துறையை சார்ந்தவர்கள் என பல தரபட்டவர்களையும் விசாரித்து, கலந்தாலோசித்து தனக்கு கொடுக்கப்பட்ட கெடுவுக்கள் வர்மா குழு தன்னுடைய பரிந்துரையை அரசாங்கத்திற்கு வழங்கியது.
நீதிபதி வர்மா குழு வழங்கிய பரிந்துரைகளை மத்திய அரசாங்கம் ஏற்றுக்கொண்டு ஒரு அவசர சட்டத்தைக் கொண்டுவந்தது. பின்னர் அரசாங்கம் பாலியல் குற்றங்களுக்கு எதிரான ஒரு புதிய சட்ட மசோதாவை பாராளுமன்றத்தில் தாக்கல் செய்து, அந்த சட்ட மசோதா பாராளுமன்றத்தின் இரு சபைகளிலும் நிறைவேற்றப்பட்டு ஜனாதிபதியின் ஒப்புதலுக்குப் பிறகு ஏப்ரல் 3 ஆம் தேதி, 2013 வருடம் The Criminal Law (Amendment) Act, 2013 என்ற சட்ட வடிவத்தை பெற்றது.
மேற்சொன்ன சட்டத்தின் வாயிலாக ஏற்கனவே இருக்கும் இந்திய தண்டனை சட்டம், இந்திய குற்றவியல் சட்டம் மற்றும் இந்திய சாட்சிய சட்டம் ஆகிய சட்டங்களில் உள்ள சில சட்ட பிரிவுகளில் திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளது, மேலும் சில சட்ட பிரிவுகள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளன.
இந்த சட்ட திருத்தத்தால் இதுகாரும் குற்றமாக பார்க்கப்படாத சில விவகாரங்கள் குற்றமாக்கப்பட்டுள்ளன. அதேபோல் திருத்தம் செய்யப்பட்ட சில குற்றங்களுக்கு தண்டனையும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
சட்டத்தில் புதிதாக புகுத்தப்பட்ட சில குற்றங்கள்
திராவகம் வீசுதல்
மற்றவர்கள் மீது திராவகம் வீசினால் இ.த.ச 326 ஏ பிரிவின் படி 10 ஆண்டுகள் சிறையில் தொடங்கி ஆயுள் தண்டனை வரை விதிக்கப்படும். கூடவே 10 லட்சம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும்.
மற்றவர்கள் மீது திராவகம் வீச முயற்சித்தால் இ.த.ச 326 பி பிரிவின் படி 5 ஆண்டுகள் முதல் 7 ஆண்டுகள் வரை சிறை தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்படும்
பாலியல் தொந்தரவு செய்தல் (ntc forumual Harassment)- இ.த.ச 354 ஏ
தவறான நோக்கத்தாடு ஒருவரை தீண்டுதல் மற்றும் வெளிப்படையாக வன்புணர்ச்சிக்கு அழைத்தல்
வன்புணர்ச்சி வைத்துக்கொள்ள மற்றவரை அழைத்தல் அல்லது வேண்டுதல்
மேற்சொன்ன குற்றங்களில் எவரேனும் ஈடுபட்டால் அவர்களுக்கு ஐந்தாண்டுகள் வரை கடுங்காவல் தண்டனை உறுதி
பாலியில் ரீதியாக மற்றவர்கள் மீது ஆபாசமான வார்த்தைகளை பயன்படுத்துதல் அல்லது குறிப்பிடுதல்
வலுக்கட்டாயமாக ஒருவரை ஆபாச படங்களை பார்க்கச் செய்தல்
மற்றவர்கள் மீது பாலியில் ரீதியாக தேவையற்ற செய்கைகளில், வார்த்தைகளில் ஈடுபடுதல்
3 முதல் 5 வரை குறிப்பிடப்பட்ட குற்றங்களில் யாரேனும் ஈடுபட்டால் அவர்களுக்கு ஒரு ஆண்டு சிறை தண்டனையும் அல்லது அபராதமும், அல்லது இரண்டும் சேர்த்தும் தண்டனையாக வழங்கப்படும்.
பொது இடங்களில் பெண்களை மானபங்க படுத்தல் (ஆடைகளை களைய செய்தல் – Public Disrobing of Women)- இ.த.ச 354 பி
மேற்சொன்ன குற்றத்தில் ஈடுபடுபவர்களுக்கு 3 ஆண்டுகள் முதல் 7 ஆண்டுகள் வரை சிறை தண்டனை மற்றும் அபராதமும் விதிக்கப்படும்.
பெண்களின் அந்தரங்கத்துக்கு குந்தகம்/ பாதிப்பு / ஊறு விளைவிப்பது/ பங்கம் ஏற்படுத்துவது (Voyeurism) இ.த.ச 354 சி
ஒரு பெண் தனிமையில் இருக்கும் (பொது இடங்களில் இல்லாத போது) போது அவளுடைய அந்தரங்கங்களை பார்ப்பது அல்லது படம்பிடிப்பது குற்றமாகும்.
இதற்கு தண்டனை – முதல் முறை இந்த குற்றத்தை நிகழ்த்தினால் ஓர் ஆண்டுக்கு குறையாமல் மூன்றாண்டுகள் வரை சிறை தண்டனை, கூடவே அபராதமும் விதிக்கப்படும். இரண்டாம் முறையாக மேற்சொன்ன குற்றத்தை ஒருவர் செய்தார் என்றால் அவருக்கு மூன்றாண்டுகள் முதல் ஏழாண்டுகள் வரை சிறை தண்டனையும் அபராதமும் விதிக்கப்படும்.
0 comments:
Post a Comment