Pages

Subscribe:

Ads 468x60px

Sunday, 16 February 2014

பிரசவத்துக்குப் பிறகு வயிறு குறைய… எளிய தகவல்கள்!

முன்பு வரை இடுப்பும், வயிறும் மெலிந்திருக்கிற பெண்களுக்கு, பிரசவத்துக்குப் பிறகு இரண்டும் பெருத்து விடுகிறது. அதன் விளைவாக வயது கூடின தோற்றமும் வருகிறது. வயிற்றைக் கட்டுவது, பிரசவமான பெண்ணின் வயிற்றில் தண்ணீரைப் பீய்ச்சியடிப்பது போன்ற அந்தக் காலத்து சிகிச்சைகளை இன்று யாரும் பின்பற்றுவதில்லை. அதெல்லாம் சரியா, தவறா என்கிற குழப்பம் இந்தக் காலத்துப் பெண்களுக்கு அதிகம்.

பிரசவத்துக்குப் பிறகு பெருத்துப் போன வயிற்றைக் குறைக்க என்னதான் வழி? ஆலோசனைகள் சொல்கிறார் மகப்பேறு மற்றும் ரத்த நோய்களுக்கான சிறப்பு மருத்துவர் மகேஸ்வரி. ‘‘சுகப்பிரசவமோ, சிசேரியனோ… எதுவானாலும், பிரசவத்துக்குப் பிறகு பெண்களுக்கு 6 வார கால ஓய்வு அவசியம். சிசேரியன் செய்தவர்கள், மாதக் கணக்கில் ஓய்வெடுக்க வேண்டும், எந்த வேலை களையும் செய்யக் கூடாது என்பதெல்லாம் இன்று மாறி விட்டது.

இவர்களும் 6 வாரங்களுக்குப் பிறகு வழக்கமான வேலைகளைச் செய்யலாம். படி ஏறலாம். எடை தூக்கலாம். எல்லாம் செய்யலாம். பிரசவித்த பெண்களின் கர்ப்பப் பை சுருங்கத்தான் அந்த 6 மாத கால ஓய்வு. எனவே சிசேரியன் செய்தவர்களுக்குத்தான் வயிறு பெரிதாகும் என்கிற எண்ணமும் யாருக்கும் வேண்டாம். குழந்தை வளர, வளர வயிற்றுத் தசைகள் விரிகின்றன. இடுப்பளவும் மாறுகிறது. பிரசவத்துக்குப் பிறகு பெருத்துப் போன அந்த வயிற்றையும், இடுப்பையும் மீண்டும் பழைய நிலைக்குக் கொண்டு வரலாம்.

ஆனால், பெரும்பாலான பெண்கள் அதற்கான முயற்சிகளை எடுப்பதில்லை. உணவுக்கட்டுப்பாடு, உடற்பயிற்சி என இரண்டும் இதற்கு முக்கியம். பிரசவத்துக்குப் பிறகான 6 வார கால ஓய்வைத் தொடர்ந்து, வயிற்றுத் தசைகளை இறுகச் செய்கிற பயிற்சிகளை மருத்துவரிடம் கேட்டுச் செய்யலாம். உட்கார்ந்து எழுந்திருக்கும் பயிற்சி, நடைப் பயிற்சி போன்றவை பெரிதும் உதவும். வயிற்றைக் குறைக்க பெல்ட் அணியலாமா என்கிற சந்தேகம் பலருக்கும் உண்டு.

பெல்ட் என்பது கர்ப்பத்தின் போது பெருத்து, பிரசவத்துக்குப் பிறகு தளர்ந்து, தொய்வடைந்த வயிற்றுக்கு ஒருவித சப்போர்ட் தருமே தவிர, தொப்பையைக் குறைக்காது. அந்தக் காலத்து வழக்கப்படி வயிற்றில் துணியை இறுகக் கட்டுவதைத் தவிர்க்கவும். அதன் விளைவால் முதுகுவலி வரலாம். பிரசவத்துக்குப் பிறகு விரிந்த தசைகளில் எலாஸ்டிக் தன்மை போய் விடும். அதைத் திரும்ப டைட்டாக்க பயிற்சிகளும், கொழுப்பில்லாத உணவுகளுமே உதவும். குழந்தையின் பெயரைச் சொல்லி, காலத்துக்கும் அதிகம் சாப்பிடுவதும், பிரசவமான உடம்பு என மாதக் கணக்கில்
ஓய்வெடுப்பதும் தவிர்க்கப்பட வேண்டும்.

சிலர் தொய்வடைந்த வயிற்றுக்கு மசாஜ் செய்து கொள்வதுண்டு. அழுத்தப் புள்ளிகள் தெரியாமல் தவறாக மசாஜ் செய்தால், தேவையற்ற சிக்கல்கள் வரலாம். வயிற்றுவலி, குடல் இறக்கம், கர்ப்பப் பை இறக்கம் என பெரிய பிரச்னைகள்கூட வரலாம். எனவே அதைத் தவிர்க்கவும்.பிரசவமான உடனேயே உங்கள் மகப்பேறு மருத்துவரிடம் பயிற்சிகளையும் உணவுக்கட்டுப்பாட்டுக்கான ஆலோசனைகளையும் கேட்டுப் பின்பற்றுவதே பலன் தரும். தேவைப்பட்டால் யோகாவும் செய்யலாம்…’’ என்கிறார் மகப்பேறு மற்றும் ரத்த நோய்களுக்கான சிறப்பு மருத்துவர் மகேஸ்வரி.

0 comments:

Post a Comment