Pages

Subscribe:

Ads 468x60px

Sunday, 16 February 2014

சித்ராவை சிரிக்க வைத்த சிறுவர்கள்..

பிரபல பின்னணி பாடகி சித்ராவை, குட்டி பாடகர்கள் சிலர் சந்தித்து கேள்விகள் கேட்டார்கள். சிரிக்கவைத்த அந்த கேள்விகளுக்கு ரசித்தபடியே சித்ரா பதிலளித்தார்.

சித்ரா ஆன்டி நீங்கள் போலீஸ் அதிகாரி ஆகியிருந்தால்..?

“நான் போலீஸ் அதிகாரியாகியிருந்தால் அதிரடியாக, நேர்மையுடன் இருந்திருப்பேன். திருடர்களையும், மது அருந்துபவர்களையும் பிடித்து கடுந்தண்டனை கொடுப்பேன். சும்மா சண்டைபோடும் சிறுவர்களுக்கும் சூடாக அடிகொடுக்கும் இந்த சித்ரா போலீஸ்..”

நீங்க சிறுமியாக இருந்தபோது உங்கள் அக்காள், தம்பியோடு சண்டை போட்டுருப்பீங்கதானே..?

“என் அக்காள் பெயர் பீனா. நாங்கள் மிகுந்த தோழமையுடன் இருந்தோம். எங்கள் தம்பிதான் பெரிய வால். என் அக்காளும் நன்றாக பாடுவார். நாங்கள் தினமும் கீர்த்தனைகள் பாடவேண்டும் என்று அம்மா ஆசைப்படுவார். நாங்களும் கண்களை மூடிக்கொண்டு கீர்த்தனைகள் பாடத் தொடங்கும்போது தம்பி மகேஷ் எங்கிருந்தாவது வருவான். அவனுக்கு ஓரளவு தபேலா வாசிக்க தெரியும். கண்களை மூடிக்கொண்டிருக்கும் எங்கள் நடுவில் தபேலாவுடன்  அமர்ந்து தப்புத் தப்பாக வாசித்து எங்கள் கீர்த்தனைக்கு இடையூறு செய்வான். எவ்வளவு கேட்டுக்கொண்டாலும் எழுந்திருக்கமாட்டான். இப்போது அப்படி அல்ல ரொம்ப நல்ல தம்பி”

உங்களுக்கு சமைக்கத் தெரியுமா?  பிடித்த உணவு எது?

“குழந்தைகளே எனக்கு சமைக்க நேரம் கிடைப்பதில்லை. அதனால் பெரிதாக சமைக்கத் தெரியாது. வேறு வழியே இல்லாவிட்டால் புத்தகத்தைப் பார்த்து சாம்பார் வைப்பேன். பிடித்த உணவு பயறு சேர்த்த கஞ்சியும், துவையலும்..”

அப்படின்னா உங்களுக்கு அப்பளம் பிடிக்காதா?

“பிடிக்கும். வறுத்த உணவுகள் சாப்பிட நான் ஆசைப்படுவேன். இனிப்பும் ரொம்ப பிடிக்கும். நான் குண்டாக இருப்பதன் ரகசியம் அதுதான். உணவு கட்டுப்பாடு பிடிக்கும். ஆனால் இந்த சாதத்துக்கு பதில் சப்பாத்தி சாப்பிடச் சொல்கிறார்கள். எனக்கு தினமும் கொஞ்சம் சோறு வேணும்..”

நீங்கள் ஸ்கூலில் படிக்கும்போது நிறைய மார்க் வாங்கினீர்களா?

“நான் படிப்பில் சராசரிதான். என் அப்பா, அம்மா இருவரும் ஆசிரியர்கள் என்பதால் வீட்டில் ரொம்ப கண்டிப்பு உண்டு. அம்மா அதிகாலை ஐந்து மணிக்கே கட்டாயப்படுத்தி எழுப்பிவிடுவார். உட்கார்ந்து படித்தால் தூங்கிவிடுவாய் என்றுகூறி, நடந்துகொண்டே படிக்கச் சொல்வார். புத்தகத்தோடு நான் இங்கும் அங்குமாக நடந்துகொண்டிருக்கும்போது பக்கத்து கோவிலில் பாட்டு போடுவார்கள். அப்போது என் கவனம் அந்த பாட்டை நோக்கித்திரும்பும். ஆங்கிலமும், இசையும் எனக்கு பிடிக்கும். கணக்கு என்றாலே என் தலை சுற்றும்..”

நீங்க சும்மா இருக்கும்போது என்ன பண்ணுவீங்க?

“சினிமா பார்ப்பேன். திகில் சினிமா நிறைய பார்ப்பேன். பயப்படவும் செய்வேன். மலையாள சினிமாக்களை பார்த்துவிட்டு, சோக காட்சிகளில் அழவும் செய்வேன்..”

நீங்கள் காதல் திருமணம்தானே செய்துகொண்டீர்கள்?

“அய்யோ.. இல்லை! பக்கா அரேஞ்ச்டு மேரேஜ். என் கணவரின் சகோதரி ராஜியும், நானும் ஸ்கூலில் ஒன்றாக படித்தோம். அவள் நன்றாக நடனம் ஆடுவாள். ஒரே வகுப்பு என்பதால் கலை போட்டிகளுக்கு நாங்கள் இருவரும் ஒன்றாக செல்வோம்.  அதனால் எங்கள் பெற்றோருக்கு, அவரது பெற்றோரை தெரியும். ஆனாலும் ராஜிக்கு ஒரு அண்ணன் இருப்பது எனக்கு தெரியாது. ரொம்ப காலத்திற்கு பிறகு, பெற்றோர்கள்தான் எங்கள் திருமண பேச்சுவார்த்தையை தொடங்கினார்கள். வழக்கம்போல் பெண் பார்க்கவந்தார்கள். திருமணமும் நடந்தது”

உங்கள் வயது எத்தனை? உண்மையை சொல்வீர்களா?

“உங்களுக்கு நான் ஒரு கணக்கு போடுகிறேன். அதைவைத்து என் வயதை கண்டுபிடியுங்கள். நான் முதன் முதலாக சினிமாவில் பாடும்போது என் வயது 16. அது 1979–ம் வருடம்..! என் வயது எத்தனை என்பதை இனி நீங்களே கண்டுபிடித்துக்கொள்ளுங்கள்..”

இப்படி கலகலப்பாக அந்த உரையாடல் நடந்தது.

0 comments:

Post a Comment