Pages

Subscribe:

Ads 468x60px

Sunday, 16 February 2014

கூட்டாஞ்சோறு சினிமாக்கள்!

தயாரிப்பாளரிடம் அப்பாயின்மென்ட் வாங்கிக் கண்ணைக் கசக்கிக் கதை சொல்லி, அவரைக் கண்ணைக் கசக்கவிடாமல் படம் எடுத்து ரிசல்ட் காட்டுவதற்குள்ளே ஒரு புதுமுக இயக்குநரின் தாவு தீர்ந்துவிடும். ஆனால், இது ஆப்பிள் யுகம். கதை இல்லாமல் ஸ்கிரிப்ட் இல்லாமலே சினிமாக்கள் எடுக்கப்படுகின்றன.

ஆச்சர்யமாக இருக்கிறதா? 'லூசியா’ படத்துக்குப் பிறகு 'கிரௌட் ஃபண்டிங் சினிமா’ என்ற வார்த்தை அதிகம் புழக்கத்தில் வந்துவிட்டது. சமூக வலைத்தளங்கள், ப்ளாக் மற்றும் சில சினிமா இணையதளங்கள் வாயிலாகப் படத்துக்கான நிதித் தேவையை டீஸராக வெளியிட்டு உலகின் கவனத்தை ஈர்த்து படத்துக்கான நிதியை கலெக்ட் செய்து படமெடுக்க ஆரம்பித்திருக்கிறார்கள். 'லூசியா’ அந்த வகையில்  வெளிவந்து ஹிட்டடித்த வெகுஜன சினிமா.

இப்போது இந்த டிரெண்ட் பாலிவுட்டிலும் தொற்றிக்கொண்டுள்ளது. 'எஃப்.ஏ.எஃப்’- அதாவது ஃபண்ட் எ ஃபிலிம். இப்படி ஒரு கோரிக்கையோடு புஷ்பேந்தர் சிங் என்ற வடக்கத்திய இயக்குநர் ஒரு டீஸரை அண்மையில் யூ-ட்யூபில் வெளியிட்டு இருக்கிறார். ப்ளாக்கில் எழுதியவர், தன் படத்தின் கதையைப் பற்றியும் தேவையான பட்ஜெட் பற்றியும் தெளிவாகக் குறிப்பிட்டு இருக்கிறார். அந்த இணையதள முகவரி:  www.catapooolt.com  (இதுபோன்ற பல தளங்கள் சினிமா ஆர்வலர்களைத் தேடிக் கண்டுபிடித்து பலன் கொடுத்து, பலன் அடைந்துவருகின்றன)

'லஜ்வந்தி’ என்பது படத்தின் டைட்டில். அண்மையில் மறைந்த பத்மபூஷண், சாகித்ய அகாடமி, சாகித்ய சூடாமணி விருதுகளைப் பெற்ற ராஜஸ்தானின் சொத்து என வர்ணிக்கப்படும் விஜய்தன் தேத்தா என்ற எழுத்தாளரின் நாட்டுப்புறக் கதைதான் அது. 3.50 நிமிடங்கள் ஓடும் இந்த டீஸரில் படம் எத்தகையது என்பதைப் பற்றிய குறிப்பு இருக்கிறது. அதாவது பெண்களின் கனவுகள், எதிர்பார்ப்புகள், ஏக்கங்கள் பற்றிக் கதை பேசுகிறது என்பது டீஸரைப் பார்த்தால் புரிகிறது. படத்தின் இயக்குநர் புனே திரைப்படக் கல்லூரியில் டைரக்ஷன் பயின்றவர் என்பதால், தன்னைப் பற்றியும் அரசியல் பற்றியும் தெளிவாகப் பேசி இருக்கிறார். அதன் பிறகு படத்துக்குத் தேவையான பட்ஜெட் பற்றி, ஏன் இந்தப் படத்துக்கு நீங்கள் பணம் கொடுக்க வேண்டும் எனத் தன் சுயக் குறிப்பையும் ஃபண்டுக்கான தேவையையும் கோரிக்கையாக வைத்திருக்கிறார்.

2014 மார்ச் 15-ம் தேதிக்குள் படத்துக்குத் தேவையான ஐந்து லட்சத்தை டார்கெட் ஃபிக்ஸ் செய்து  குறிப்பிட்டிருப்பதோடு கதை விவாதம் நடைபெறும் மும்பை அலுவலக முகவரி, தொலைபேசி எண் மற்றும் பணம் அனுப்பி உதவியவர்களின் பெயர்ப் பட்டியல் எல்லாவற்றையும் பக்காவாக அப்லோட் செய்யப்பட்டு இருக்கிறது. 99 ரூபாயிலிருந்து உதவி செய்யலாம் என குறிப்பிடப்பட்டிருக்கிறது. இந்தக் கட்டுரையை டைப் செய்துகொண்டிருக்கும்போது ரூபாய் 2,40,718 (48%) வசூல் ஆகி இருக்கிறது. மொத்தத் தொகை ஐந்து லட்சத்தை எட்டியதும் விபரங்கள் தளத்தில் இருக்காது. ராஜஸ்தானி நாட்டுப்புறக் கதைக்கு எத்தகைய வரவேற்பு கிடைக்கும் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

'இதி மொதலு’ என்ற தெலுங்குப் படமும் இந்த கிரௌட் ஃபண்டிங் டெக்னிக் மூலம் 50 லட்சம் டார்கெட் குறிக்கப்பட்டு இதுவரை 41,000 வசூலாகி இன்னும் 61 நாட்கள் கையிருப்பில் வசூல் வேண்டி இந்தத் தளத்தில் காத்திருக்கிறது. 'காந்தர்போ’ என்ற இந்திப் படம் 10 லட்சம் பட்ஜெட் டார்க்கெட்டோடு இதுவரை 11,099 ரூபாய் மட்டுமே வசூல் ஆகி மூச்சைப் பிடித்துக்கொண்டு கிடக்கிறது. இன்னும் இரண்டு மாதங்களுக்குள் அவ்வளவு பெரிய தொகை வசூலாகுமா எனத் தெரியவில்லை. ஆனால் நம்பிக்கையாகத் தன் முகப்புத்தகத்தில்  'இது இரண்டு ஆண் ஒரு பெண் பற்றிய நட்புக் கதை. நம் சமூக அமைப்பைக் கேள்வி கேட்டு சாட்டையடி கொடுக்கும் கதை’ என்றெல்லாம் வர்ணித்திருக்கிறார் படத்தின் இளம் இயக்குநர் கிங்ஸுக் பானர்ஜி. ஷாலினி ராகவையா என்ற பெண் இயக்குநரின் 'சிக்கன் கரி’, அபர்ணா ஆப்தே என்ற பெண் இயக்குநரின் 'தி இண்டியன் ஸ்போர்ட்டிங் ஸ்ட்ரகிள்’ மற்றும் ரோஹித் பதக் என்ற இளைஞரின் 'பிச்சார்’ என்ற படமும் 'கிரௌட் ஃபண்டிங்’ பட்ஜெட்டுக்காக கோரிக்கை வைக்கப்பட்டுக் காத்திருக்கும் படங்களுள் முக்கியமானவை.

எல்லாம் சரி... இந்தக் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் பணம் வசூலாகவில்லை என்றால்... சிம்பிள். பணத்தை அனுப்பியவர்களிடம் திருப்பிச் சேர்க்கப்பட்டு படத்தின் திட்டம் கைவிடப்படும். இதற்காகவே இந்த இளம் இயக்குநர்கள் அதிகப் பணத்துக்கு ஆசைப்படாமல் 'சின்னக் கல்லு பெத்த லாபம்’ என புத்திசாலித்தனமாய் செயல்பட்டால், படத்தை முடித்து விடலாம். இந்த ஒரு தளம் மட்டும் அல்ல... 'கிக் ஸ்டார்ட்டர்’ என்ற புகழ்பெற்ற தளம் வாயிலாகவும் கோரிக்கை வைக்கலாம். 'பாக்கெட் ஃபிலிம்ஸ்’ என்ற யூ-ட்யூப் சேனல் இந்திய அளவில் குறும்படங்களைத் தொகுத்து முக்கியமான சினிமா தளங்களுக்குப் பரிந்துரை செய்கிறது.

இந்தக் கட்டுரை சின்ன அவுட்லைன் மட்டுமே. உங்களிடம் குறைந்தபட்ச சினிமா குறித்த தொழில்நுட்ப அறிவும் நல்ல சினிமா பற்றிய தெளிவும் இருந்தால் போதும். இதுபோன்ற வாய்ப்புகளைப் பயன்படுத்திப் படமெடுக்கலாம். படம் ரிலீஸானால் பட்ஜெட் கொடுத்தவர்கள் யாரும் கேள்விகள் கேட்கப்போவது இல்லை. சொதப்பினால் வழக்குகள் பாயும் பேராபத்தும் இருக்கிறது. எனவே சினிமா மீது பேரன்பும் பெருங்காதலும் கொண்டவர்கள் மட்டும் இந்த ஜோதியில் ஐக்கியமாகுங்கள்!

0 comments:

Post a Comment