Pages

Subscribe:

Ads 468x60px

Sunday, 16 February 2014

ஆபத்தான இமெயில்கள் இணைப்புகளை கண்டறிவது எப்படி ?

இமெயில்கள் தகவல்களை மட்டும் கொண்டு வருகின்றன. தங்களை அறியாமல் வைரஸ்களையும் தான் கொண்டு வருகின்றன. பல நேரங்களில் இமெயில்களின் பின்னே ஆபத்து விளைவிக்கும் மால்வேர்கள் ஒளிந்திருக்கலாம். மால்வேர்கள் உங்கள் கம்ப்யூட்டருக்குள் அழையா விருந்தாளியாக அமர்ந்து கொண்டு பாஸ்வேர்டு உள்ளிட்ட முக்கிய தகவல்களை களவாடலாம்.


பெரும்பாலும் இந்த மால்வேர்கள் இமெயில் மூலமான இணைப்புகள் வழியே வந்து சேர்கின்றன. இணைப்புகளை கிளி செய்யும் போது இவை கம்ப்யூட்டருக்குள் தாவிடுகின்றன. அது மட்டும் அல்ல இணைப்புகளில் உள்ள தகவல்கள் இணைய மோசடிக்கான வலையாகவும் இருக்கலாம். எனவே இமெயில் இணைப்புகள் விஷயத்தில் எப்போதும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். சரி, ஆனால் ஆப்த்தான இமெயில் இணைப்புகளை கண்டறிவது எப்படி ?


கோப்பு நீட்டிப்புகளை கவனிக்கவும்.


இணைப்புகள் ஆபத்தானவையா என்று அறிய எளிய வழி அவற்றின் கோப்பு நீட்டிப்பு ரகத்தை தெரிந்து கொள்வது தான். கோப்பு நீட்டிப்புகள் குறிப்பிட்ட கோப்பு எந்த வகையானவை என்பதை உணர்த்துகின்றன. பல கோப்பு ரகங்கள் கிளிக் செய்யப்பட்டவுடன் கம்ப்யூட்டரில் விஷமத்தனமான நிரல்களை (புரோகிராம்கள் ) இயக்க கூடியதாக இருக்கும். இந்த நிரல்கள் பலவித கேடுகளை விளைவிக்கலாம். பொதுவாக .எக்ஸி (.exe ) என முடியும் கோப்புகள் விண்டோசில் நிரல்களை இயக்ககூடியவையாக இருக்கின்றன.


எனவே இந்த ரக கோப்புகள் இணைப்பாக வந்தால் உஷாராகி அவற்றை நீக்கி விட வேண்டும். அதே போல msi, .bat, .com, .cmd, .hta, .scr, .pif, .reg, .js, .vbs, .wsf, .cpl, .jar  ஆகிய கோப்பு ரகங்களிலும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இவை தவிர மேலும் பல ஆபத்தான கோப்பு ரகங்கள் இருக்கலாம். இவற்றில் சிக்கி கொள்ளாமல் இருக்க எளிய வழி, பொதுவாக நன்றாக அறிந்த கோப்பு ரகம் தவிர பிறவற்றை திறக்காமல் வந்த வழியே திருப்பி அனுப்புவது தான். உதாரணத்திற்கு .ஜெபெக் மறும் .பிஎன்.ஜி ஆகிய புகைப்பட கோப்பு ரகம் என்றால் பிரச்சனை இல்லை. அதே போல பி.டி.எப் மற்றும் .டாக்ஸ் போன்ற கோப்பு ரகங்களும் பிரச்சனையில்லாதவையாக இருக்கலாம். ஆனால் இந்த கோப்புகளை கூட முதலில் வைரஸ் எதிர்ப்பு சாப்ட்வேரை இயக்கி சோதித்து திறந்து பார்ப்பதே நல்லது.


மறைந்திருக்கும் ஆபத்து.


இமெயில் தடுப்புகளில் சிக்காமல் இருப்பதற்காக விஷமத்தனமான கோப்புகளை மற்றொரு கோப்புக்குள் போட்டு அனுப்பி வைக்கலாம். இந்த கோப்புகளை அணுக முதலில் அவற்றை தரவிறக்கம் செய்து பின்னர் பாஸ்வேர்டை பயன்படுத்தி உள்ளே நுழைய வேண்டும். பாஸ்வேர்டு பாதுகாப்பு இருப்பதால பெரும்பாலும் வைரஸ் தடுப்பு சாப்ட்வேரின் கண்ணில் இவை மண்ணை தூவிவிடலாம். உள்ளே இருக்கும் கோப்புகள் கேடு விளைவிக்கும் நிரல்கலை கட்டவிழ்த்து விடலாம். எனவே இது போன்ற் கோப்புகள் என்றாலே எச்சரிக்கையாகி விட வேண்டும். ஆனால் மிகவும் முக்கியமான தகவல்களை பாஸ்வேர்டு பாதுகாப்பு கொண்ட கோப்பு வழியே அனுப்ப படுகின்றன. இது போன்ற நேரஙக்ளில் உங்கள் அனுபவமும் அறிவும் தான கைகொடுக்க வேண்டும்.


அனுப்புவது யார்?


பொதுவாக , இமெயில் அனுப்பியது ஆபத்தானதா என்பதை அதை அனுப்பியது யார் என்பதை கொண்டே அறிந்து கொள்ளலாம் என்று சொல்லப்படுகிறது. அதாவது உங்களுக்கு நன்கு அறிமுகமானவர்களிடம் இருந்து வரும் மெயில்கள் என்றால் அவற்றை நம்பகமானவையாக கருதலாம். அதிலும் உங்கள் இமெயில் முகவரி பட்டியலில் இருப்பவர் என்றால் சிக்கல் இல்லை. எப்படியும் உங்கள் நண்பர்கள் ஆபத்தான தகவல்களை அனுப்ப மாட்டார்கள் இல்லையா? ஆனால் இதிலும் ஒரு பிரச்ச்னை இருக்கிறது.


சில நேரங்களில் உங்கள் நண்பர்களிடம் இருந்து வரும் மெயிலின் பின்னே கூட விபரீதம் ஒளிந்திருக்கலாம். அதற்காக நண்பர்களை சந்தேகப்பட வேண்டாம். பிரச்ச்னை என்னவென்றால் உங்கள் நண்பர்கள் தங்களை அறியாமல் இமெயில் தாக்குதலுக்கு இலக்காகி இருந்தால் , அவர்களை அறியாமல் இப்படி ஒரு மெயில் அனுப்ப பட்டிருக்கலாம். சரி , இந்த மெயில்களை எப்படி கண்டுபிடிப்பது ? தெரிந்தவர்களிடம் இருந்து வந்துள்ள மெயிலில் வழக்கத்துக்கு விரோதமான உள்ளடக்கம் அல்லது சந்தேகத்து தூண்டும் இணைப்பு இருந்தால் எச்சரிக்கை கொள்ள வேண்டும். அது போன்ற நேரங்களில் நண்பர்களை தொடர்பு கொண்டு , அவர்கள் மெயில் அனுபினார்களா என்று கேட்டுக்கொள்ளலாம்.


மெயிலின் உள்ளடக்கம்.


சில நேரங்களில் இணைப்புகளை விட உள்ளடக்கமோ கூட ஆபத்தானதாக இருக்கலாம். இந்த மெயில்கள் கடத்தப்பட்ட மெயில் முகவரிகளில் இருந்தும் அனுப்ப பட்டிருக்கலாம். அதாவது உங்கள் நண்பர்களின் மெயில் முகவரி மால்வேர் தாக்குதலுக்கு இலக்காகி இருக்கலாம். அவசரமாக பண பரிமாற்றம் செய்வதற்கான கோரிக்கைகள் அல்லது லட்சக்கணக்காஅன டாலர் பரிசு விழுதிருப்பதாக தெரிவித்தாலோ அந்த மெயில் மோசடி மெயிலாக இருக்கலாம். மேலும் பிரபலமான நிறுவனங்களின் பெயரில் கோப்புகளோடு மெயில் வந்தாலும் கவனம் தேவை . எந்த பெரிய நிறுவனமும் மெயில் வாயிலாக எதையும் தரவிறக்கம் செய்து பயன்படுத்த கேட்பதில்லை.


எதிலும் சந்தேகம் தேவை.


இணையத்தில் அடிக்கடி நடக்கும் பாஸ்வேர்டு திருட்டு பற்றி நீங்கள் படித்திருக்கலாம். பெரிய நிறுவங்களின் லட்சக்கணக்கான பாஸ்வேர்டுகள் தாக்காளர்களால் திருடப்படுவதாக வெளியாகும் செய்திகள் உண்மையில் எச்சரிக்கை மணி அடிக்கின்றன. பாஸ்வேர்டு திருட்டுகள் பலவிதங்களில் நடக்கின்றன. இமெயில் மூலம் மால்வேரை அனுப்பி பாஸ்வேர்டை சமர்பிக்க கோருவது இதில் ஒரு வகை. மேலும் பல வழிகள் இருக்கின்றன.


 இவற்றில் சிக்காமல் இருக்க இமெயிலில் வரும் இணைப்புகளில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். வழக்கமான மெயில் அல்லாத எந்த இமெயிலை திறக்கும் முன்னும் ஒரு முறைக்கு இரு முறை யோசிப்பது நல்லது. எப்படியும் ஒரு மெயிலை திறக்காமல் இருப்பதால் பெரும்பாலும் நீங்கள் எதையும் இழக்கப்போவதில்லை. உண்மையிலேயே அது முக்கியமான மெயிலாக இருந்தால் மீண்டும் நினைவூட்டல் வரலாம். போன் அல்லது குறுஞ்செய்தியில் தகவல் சொல்லப்படலாம் . ஆனால் தேவையில்லாத இமெயிலை கிளிக் செய்வதால் பலவிதமான இழப்புகள் ஏற்படும் அபாயம் இருப்பதை அறிந்திருத்தல் நல்லது.

0 comments:

Post a Comment