Pages

Subscribe:

Ads 468x60px

Thursday, 20 March 2014

தவிர்க்கவே கூடாத விஷயம் இது...



உணவு சாப்பிடுவதற்கு தினமும் காலை, மதியம், இரவு என மூன்று வேளையை வகுத்துள்ளோம். இதற்கிடையில், மாலை நேரத்தில் சிறிய அளவிலான உணவுவகைகளை (நொறுக்குத் தீனி) சாப்பிடுகிறோம். மற்ற மூன்று நேரங்களில்... குறிப்பாக, உடலுக்கு புத்துணர்வைத் தரும் காலை உணவை சரியான அளவோடும், ஊட்டச்சத்து நிறைந்ததுமாய் சாப்பிடுகிறோமா என்பதுதான் கேள்வி.


காலையில், பெரும்பாலான வீடுகளில் இட்லி, தோசை, பொங்கல் என்பது எழுதப்படாத "மெனு'வாகிவிட்டது. இதில் என்ன ஊட்டச்சத்து உள்ளது? இதுபோன்ற உணவு வகைகள் எளிதில் ஜீரணம் ஆகிவிடும். ஆனால், அன்றைய தினம் உடலுக்குத் தேவையான புத்துணர்வு என்பது கிடைக்காது. இதற்கு மாற்றாக கேழ்வரகு இட்லி, சம்பா தோசை, கோதுமை ரவா உப்புமா, போன்ற தானியங்களை கொண்டு, பல்வேறு வகையான உணவுகளை சமைத்து சாப்பிடலாம்.


அரிசியில்தான் சர்க்கரையின் அளவு அதிகமாக உள்ளதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். அரிசியும் தானிய வகைதான், ஆனால், வாரத்துக்கு ஓரிரு நாள் தவிர, மற்ற நாள்களில் அரிசி தவிர்த்த தானியங்களை கொண்டு சமைத்த உணவைச் சாப்பிடலாமே. முடிந்தால், பழங்களில் ஏதாவது ஒன்றை உணவுடன் சேர்த்துக் கொள்ளலாம். இந்த வகை உணவுகளைச் சாப்பிடுவதால் சரியான உடலமைப்பும், உடலுக்குத் தேவையான நார்ச்சத்து, கால்சியம், வைட்டமின்கள் ஏ, சி, இ போன்ற ஊட்டசத்துடன், அன்றைய தினத்துக்குத் தேவையான புத்துணர்வும் கிடைக்கும்.


இது ஒருபுறம் இருந்தாலும், காலை உணவையே தவிர்க்கும் பழக்கம் உள்ளவர்கள் பலர் உண்டு. எப்படி தெரியுமா, வீட்டுவேலைப் பளு, சுவாமிக்கு பூஜை செய்யாமல் சாப்பிடுவதில்லை, காலை நேர பரபரப்பு போன்ற காரணங்களால் பெண்களில் பலரும், அலுவலகம், வியாபார விஷயமாக அவசரமாகச் செல்லும்போது ஆண்களும், அவசர அவசரமாக எழுந்து பள்ளிக்குப் புறப்படும் குழந்தைகளில் பலரும், நோய் காரணமாக முதியோர்களில் சிலரும் காலை உணவைத் தவிர்க்கின்றனர்.


இதுமட்டுமின்றி, உடல் எடையைக் குறைப்பதற்காக சிலரும் காலை உணவு சாப்பிடுவதையே தவிர்க்கின்றனர். இதனால், வயிற்றில் சுரக்கும் "ஹைட்ரோ குளோரிக்' அமிலம் வயிறு, குடல் பகுதிகளில் உள்ள திசுக்களை பாதிக்கத் தொடங்கி, வயிறு சம்பந்தப்பட்ட நோய்கள்தான் வருமே தவிர, உடல் எடை குறையாது.


வயிற்றில் உள்ள இரைப்பைக்குத் தேவையான உணவை குறிப்பிட்ட நேரங்களில் கொடுக்க வேண்டும். இல்லையெனில், இரைப்பை சுருங்கத் தொடங்கிவிடும்.


ஒருநேரம் பட்டினி கிடந்து, மற்றொரு நேரம் சேர்த்து சாப்பிடலாம் என நினைப்பதும் தவறு. இந்த தவறை வெளியூர்களில் தங்கி படிக்கும், பணிபுரியும் ஆண்களில் பலர் செய்கின்றனர். கால தாமதமாக தூங்கி எழுந்து நேரடியாக மதிய உணவுக்கு செல்லும் பழக்கத்தைக் கொண்டுள்ளனர்.


மருத்துவர்கள், மருந்து சாப்பிடும்போது மூன்று, நான்கு வேளை என குறிப்பிடுவதுபோன்று, நாமும் உணவு சாப்பிடுவதில் கடைபிடித்தால் அஜீரணக் கோளாறு நோய்களிலிருந்து தப்பலாம்.


இடையிடையே நொறுக்குத்தீனி என்ற பெயரில் கிடைப்பதெல்லாம் சாப்பிடுவதும், சுகாதாரமற்ற எண்ணெயில் தயாரிக்கப்பட்ட பலகாரங்களைச் சாப்பிடுவதால் உணவுக் குழாயில் எரிச்சல் ஏற்படுவதுடன், நோய் தாக்குதலுக்கான ஆரம்ப நிலையை உருவாக்குகிறது.


அண்மையில், "இந்தியர்களின் காலை உணவு பழக்கம்' என்ற தலைப்பில் கெலாக்ஸ் நிறுவனம் தில்லி, மும்பை, கொல்கத்தா, சென்னையில் 3,000-க்கும் மேற்பட்டவர்களிடம் நடத்திய ஆய்வில், இந்தியாவில் நான்கு பேரில் ஒருவர் காலை உணவைத் தவிர்ப்பதாகவும், நாடு முழுவதும் 72 சதவீதம் பேர் ஊட்டச்சத்து குறைவாக உள்ள காலை உணவைச் சாப்பிடுவதாகவும் தெரியவந்தது. மேலும், பெண்களிடம் ஊட்டச்சத்து குறைவான உணவுகளைச் சாப்பிடுவதோடு, காலை உணவைத் தவிர்க்கும் பழக்கம் அதிகம் காணப்படுவதாகத் தெரிவித்தனர்.


ஊட்டச்சத்து குறைவான காலை உணவை சாப்பிடுவதில் கொல்கத்தா முதலிடத்தில் உள்ளது. ஊட்டச்சத்து நிறைந்த காலை உணவு சாப்பிடுவதில் தில்லி முதலிடத்திலும், மும்பை இரண்டாவது இடத்திலும், சென்னை மூன்றாவது இடத்திலும் (38 சதவீதம் பேர்) உள்ளதாகத் தெரிவித்தனர்.


மேலும், ஊட்டச்சத்து நிறைந்த காலை உணவைச் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகளை பெரும்பாலானோர் அலட்சியப்படுத்துவதாகவும் அந்நிறுவனம் கூறியுள்ளது.


உடலுக்கு எப்படி ஓய்வு தேவையோ? அதேபோல் நமது இரைப்பைக்கும் ஓய்வு தேவை. அதற்காக பட்டினி கிடக்க வேண்டியதில்லை. இரவு நேரத்தில் குறைவாக சாப்பிட்டு, இரைப்பைக்கு ஓய்வு கொடுப்போம்.


நம்முடைய உடல் ஆரோக்கியம் நம் குடும்பத்துக்கு முக்கியம் என்பதை உணர்ந்து, காலை உணவைத் தவிர்க்காமல் அளவோடும், ஊட்டச் சத்தோடும் சாப்பிட்டு நலமோடு வாழ்வோம்.

0 comments:

Post a Comment