Pages

Subscribe:

Ads 468x60px

Tuesday, 18 March 2014

என்னோட பசு! - குட்டிக்கதை

ஒரு கிராமத்தில் ஒருவன் இருபது பசுக்கள் கொண்ட மந்தையை வைத்திருந்தான். மற்றொருவன் பத்து பசுக்களை கொண்ட மந்தையை வைத்திருந்தான்.

அவர்கள் இருவரையும் பெரிய மந்தைக்காரன், சின்ன மந்தைக்காரன் என்று ஊரார் சொல்வது வழக்கம்.
பெரிய மந்தைக்காரன் ஒரு சமயம் குடும்பத்தோடு வெளியூர் போக நேரிட்டது. அப்போது தன்னுடைய மந்தையைக் கவனித்துக் கொள்ளும்படி, சின்ன மந்தைக்காரனிடம் சொல்லிவிட்டுச் சென்றான்.

போனவன் திரும்பி வருவதற்குள் தன்னிடமிருந்த மட்டமான மூன்று கன்றுகளையும் அவனுடைய மந்தைக்குள் புகவிட்டு, அதற்குப் பதிலாக மூன்று கடாரிக் கன்றுகளைத் திருட்டுத்தனமாகக் கொண்டு வந்து தன்னுடைய மந்தையில் சேர்த்துக் கொண்டான்.

வெளியூர் சென்றிருந்த பெரிய மந்தைக்காரன் திரும்பி வந்தான். கன்றுகள் மாறியிருப்பதை அவன் கவனிக்கவில்லை. சில நாட்களில் நோய் வந்து அவனுடைய மந்தையில் இருந்த பசுக்களும், கன்றுகளும் மாண்டு போயின. தன் குடும்பத் தேவைக்கே பால், நெய், மோர் இல்லாமல் கஷ்டப்பட்டான் பெரிய மந்தைக்காரன்.

சின்ன மந்தைக்காரன் திருட்டுத்தனமாக மாற்றிக் கொண்ட மூன்று கன்றுகளும் பெரியதாகி வளர்ந்து, கன்று போட்டுப் பால் கொடுக்க ஆரம்பித்தன.

ஒருநாள் பெரிய மந்தைக்காரன், சின்ன மந்தைக்காரனிடம் பால் வாங்கிக் காய்ச்சிக் குடிக்க நேர்ந்தது.
அந்தப் பாலின் ருசியைக் கண்டதும், இந்தப் பாலைக் கறந்த பசு தன்னுடையது என்பதை உணர்ந்து கொண்டான்.

தான் வெளியூர் சென்றிருந்தபோது சின்ன மந்தைக்காரன் தன்னுடைய கன்றுகளைத் திருடி வளர்த்திருக்கிறான். ஆகையால் அது என்னைச் சேர்ந்தது என்று நீதிமன்றத்தில் முறையிட்டான் பெரிய மந்தைக்காரன்.
சின்ன மந்தைக்காரனைக் கூட்டி வரச் சொல்லி விசாரித்தார் மரியாதை ராமன்.

""தகுந்த சாட்சியத்தோடு அதை நிரூபித்தால், நான் நீதிமன்றம் விதிக்கும் தண்டனைக்கு உட்படுகிறேன். இல்லையானால், என் மீது திருட்டுக் குற்றம் சுமத்தியுள்ள அவன் தண்டனைக்கு உள்ளாகட்டும்,'' என்று எதிர்வாதம் செய்தான் சின்ன மந்தைக்காரன்.

மரியாதை ராமன், அவர்கள் இருவரையும், பதினைந்து நாட்கள் சென்ற பிறகு மறுபடியும் வருமாறு உத்தரவிட்டார். அதன்பின், ஆட்டு எரு, மாட்டு எரு, குப்பை எரு ஆகிய மூன்றையும் தனித்தனியாகக் கீரைப் பாத்தியில் போட்டு விதைத்துப் பயிராக்கி, அம்மூன்று வகைக் கீரைகளையும் பறித்து ஒன்றாகக் கலந்து சமையல் செய்யுமாறு சொல்லி, அவற்றோடு பசுவின் தயிர், எருமைத் தயிர், ஆட்டுத் தயிர் மூன்றையும் ஒன்றாகக் கலந்து, பெரிய மந்தைக் காரனுக்கும், சின்ன மந்தைக்காரனுக்கும் விருந்து அளிக்கிற பாவனையில் இருவரையும் சாப்பிடும்படியாக ஏற்பாடு செய்தார் மரியாதை ராமன்.

இருவரும் சுவைத்து நன்றாகச் சாப்பிட்டனர்.

""விருந்தின் ருசி எப்படி இருந்தது?'' என்று கேட்டார் நீதிபதி.

சின்ன மந்தைக்காரன் எதுவும் கூறவில்லை.

""மூவெருவின் கீரையோடு முப்பாலின் நற்றயிரும் நாவார நான் ருசி கண்டேன்,'' என்றான் பெரிய மந்தைக்காரன்.
அதிலிருந்து உண்மையை உணர்ந்து கொண்ட நீதிபதி, அவன் யோக்கியன் என்பதை புரிந்து கொண்டார்.

பிரதிவாதியான சின்ன மந்தைக்காரனைப் பயமுறுத்தி அவன் வாய் மூலமாகவே, அவனுடைய திருட்டுச் செயலை வெளிப்படுத்தி, பசுவைப் பெரிய மந்தைக்காரனிடம் ஒப்படைக்கச் செய்யும்படி உத்தரவிட்டு, திருட்டுக் குற்றத்துக்குத் தண்டனையும் விதித்தார் மரியாதை ராமன்.

0 comments:

Post a Comment