கருவால் உருவான கதையே வெண்மேகத்தின் கரு.
சென்னையில் பள்ளி ஒன்றில் தலைமையாசிரியாராக இருக்கும் ரோகிணி, தனது கணவரை பிரிந்து தனது மகளான ஜெயஸ்ரீ சிவதாசுடன் தனிமையில் வசித்து வருகிறார். இவருக்கு ஒரே ஆதரவு ஜெயஸ்ரீ மட்டும்தான். தனது கணவர் மாதிரியான ஆண்களிடம் ஏமாந்து போய்விடக்கூடாது என்பதற்காக அவளை மிகவும் கண்டிப்புடன் வளர்த்து வருகிறார்.
தன்னுடைய விருப்பத்துடன் வாழ தடையாக இருக்கும் அம்மா மீது ஜெயஸ்ரீ வெறுப்புடனே இருக்கிறாள். இந்நிலையில், இவரது வீட்டுக்கு அருகிலேயே இருக்கும் விதார்த் மற்றும் ஜெகன் ஆகியோர் ஜெயஸ்ரீக்கு ஆறுதலாக இருக்கின்றனர். இதனால், அவர்களிடம் நெருங்கி பழகி வருகிறார் ஜெயஸ்ரீ.
ஒருநாள் விதார்த் கடைக்கு ஸ்டிக்கர் ஒட்ட வரும் இஷாராவை பார்த்ததும் காதல் வயப்பட்டு விடுகிறார் விதார்த். நாளடைவில் இருவரும் காதலிக்க ஆரம்பித்து விடுகின்றனர். இவர்களுடைய காதல் சுமூகமாக போய்க் கொண்டிருக்கும் வேளையில், விதார்த்துடன் ஜெயஸ்ரீ நெருங்கி பழகுவது நாயகிக்கு பிடிக்கவில்லை. இதை ஒருநாள் ஜெயஸ்ரீயை அழைத்து கண்டித்தும் விடுகிறாள். பதிலுக்கு ஜெயஸ்ரீ தான் பத்து வருடமாக விதார்த்துடன் நெருங்கி பழகி வருவதாகவும், அவர்மீது அளவு கடந்த ஆசை வைத்திருப்பதாகவும் கூறுகிறாள். இதனால் கோபமடைந்த இஷாரா இந்த விஷயத்தை ஜெயஸ்ரீயின் அம்மாவிடம் சென்று முறையிடுகிறாள்.
கோபமடைந்த ரோகிணி, ஜெயஸ்ரீயை அழைத்து கண்டிக்கிறாள். கோபத்தில் வீட்டில் இருந்து வெளியேறுகிறாள் ஜெயஸ்ரீ. வெளியே செல்லும் நாயகி, விதார்த்துக்கு போன் செய்கிறாள். ஆனால், அந்த போனை விதார்த்தின் நண்பன் ஜெகன் எடுக்கிறார். வேலை விஷயமாக இருவரும் விசாகப்பட்டினம் சென்றிருப்பதாகவும், இங்கேயே செட்டிலாகிவிடப் போகிறோம் என்று கிண்டலுக்கு ஒரு வார்த்தையும் விட்டுவிட்டு போனை துண்டித்து விடுகிறான்.
இதை உண்மை என நம்பி, ஜெயஸ்ரீ விசாகப்பட்டினத்துக்கு பயணமாகிறாள். அங்கு விதார்த்தை தேடி அலைகிறாள். எங்கு தேடியும் கண்டுபிடிக்கமுடியாமல் தனிமையில் தவிக்கிறார். அப்போது, அங்கே லோக்கல் லேடி தாதாவான கல்யாணியின் கண்ணில் படுகிறார். அவர் விசாகப்பட்டினத்தில் குழந்தை இல்லாத பணக்காரர்களுக்கு ஏழை பெண்களை வாடகை தாயாக அனுப்பும் வேலையை நிழல் உலகில் செய்து வருகிறார்.
அவரிடம் தஞ்சம் புகும் ஜெயஸ்ரீயையும் இந்த வேலையில் ஈடுபடுத்தி விடுகிறார். இதற்கிடையில், விசாகப்பட்டினத்தில் வேலை தேடி சென்ற விதார்த் மீது ஜெயஸ்ரீயின் அம்மா ரோகிணி தனது பெண்ணை கடத்தி சென்றுவிட்டதாக போலீஸ் நிலையத்தில் புகார் செய்கிறார். சென்னை திரும்பும் விதார்த்தை போலீஸ் விசாரிக்கிறது. போலீஸ் விசாரணையில் விதார்த் குற்றமற்றவர் என்பது தெரிய வருகிறது.
ஜெகன் விதார்த்திடம் ஜெயஸ்ரீ தன்னிடம் பேசியதாகவும், விசாகப்பட்டினத்தில் செட்டிலாகிவிடுவோம் என்று பொய்யை சொல்லிவிட்டு போனை துண்டித்துவிட்டதாகவும் கூறுகிறான். அப்படியென்றால் தன்னைத் தேடி விசாகப்பட்டினம்தான் அவள் சென்றிருக்கவேண்டும் என்று எண்ணி, தேடும் முயற்சியில் விதார்த்தும், ஜெகனும் விசாகபட்டினம் பயணமாகிறார்கள். இறுதியில், ஜெயஸ்ரீயை கண்டுபிடித்து சென்னைக்கு திரும்ப அழைத்து வந்தார்களா? விதார்த், இஷாரா காதல் என்னவாயிற்று? என்பதே மீதிக்கதை.
விதார்த் இந்த படத்தில் எதார்த்தமான நடிப்பை அழுத்தமாக பதிவு செய்திருக்கிறார். குறிப்பாக, ஜெயஸ்ரீ கர்ப்பமாக இருப்பதை கண்டு கலங்கும் காட்சிகள் ரசிகர்களின் கண்களை கலங்க வைக்கிறது. நாயகி இஷாரா குறைவான காட்சிகள் வந்தாலும் நிறைவாக செய்திருக்கிறார். காதல் காட்சிகளில் சிறப்பாக நடித்திருக்கிறார். ஜெயஸ்ரீ, படத்தின் முழு கதையையும் இவரே தாங்கிச் செல்கிறார். முதல் பாதியில் மிகவும் துடிப்பான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களை கவர்கிறார்.
பிற்பாதியில் கனமான கதாபாத்திரத்தை தனது திறமையான நடிப்பால் அசத்தியிருக்கிறார். கண்டிப்பான அம்மாவாக வரும் ரோகிணி தனது அனுபவ நடிப்பை அற்புதமாக வெளிப்படுத்தியிருப்பது சிறப்பு. ராம்-லஷ்மண் என்ற இரட்டை சகோதரர்கள் இப்படத்தை இயக்கியிருக்கிறார்கள். இயக்கியதோடு மட்டுமல்லாமல் இவர்களே தயாரித்தும் உள்ளார்கள்.
தமிழ் சினிமாவுக்கு வித்தியாசமான கதையை கொடுத்திருக்கிறார்கள். கதைக்கு ஒத்த கதாபாத்திரங்களை தேர்வு செய்திருப்பது அற்புதம். ஒரு குழந்தை வளரும்பொழுது அக்குழந்தையின் எண்ணங்களை சரிவர புரிந்து, அன்பால் அரவணைத்து சென்றால் அந்த குழந்தையின் எதிர்காலம் சிறப்பாக இருக்கும் என்பதை பெற்றோருக்கு சொல்ல முயற்சித்திருக்கும் இயக்குனருக்கு பாராட்டுக்கள்.
ஜித்து தாமேதரின் ஒளிப்பதிவு படத்திற்கு மேலும் கூடுதல் பலம். பாடல் காட்சிகளில் இவரது ஒளிப்பதிவு குளுமையாக இருக்கிறது. ஜாபர்கனி இசையில் பாடல்கள் சுமார் ரகம்தான். பின்னணி இசை பரவாயில்லை.
மொத்தத்தில் ‘வெண்மேகம்’ பிரகாசம்.
0 comments:
Post a Comment