Pages

Subscribe:

Ads 468x60px

Friday, 21 February 2014

‘பிரம்மன்’ நட்பின் இலக்கணம் - அருமையான விமர்சனம்!

சிறு வயதிலிருந்தே சினிமாவில் பெரிய இயக்குனராக வேண்டும் என்ற கனவோடு வாழ்ந்து வருகின்றனர் சசிகுமாரும், அவருடைய நெருங்கிய நண்பரான நவீன் சந்திராவும். இதில் நவீன் சந்திரா மட்டும் சென்னையில் சென்று பெரிய இயக்குனராகிவிடுகிறார்.

சசிகுமார் கோயம்புத்தூரிலேயே ஒரு பழைய தியேட்டரை லீசுக்கு எடுத்து நடத்தி வருகிறார். இதே தியேட்டரில் இவருடைய நண்பன் சந்தானமும் ஆபரேட்டராக பணிபுரிகிறார். நஷ்டத்துடன் இயங்கும் அந்த தியேட்டரை கஷ்டப்பட்டு நடத்தி வரும் சசிகுமார், ஒருநாள் நாயகி லாவண்யா பார்த்ததும் காதல் வயப்பட்டு விடுகிறார். இந்நிலையில், நாயகியின் அண்ணனையே தனது தங்கைக்கு திருமணம் செய்துவைக்க ஏற்பாடுகள் நடக்கிறது. இதனால், இருவரும் நெருங்கி பழக வாய்ப்பு அதிகமாகிறது.

இருவரும் காதலித்து வரும் நிலையில், ஒருநாள் தியேட்டருக்கு வரிகட்ட வேண்டிய சூழ்நிலை வருகிறது. அதை கட்ட சசிகுமாரிடம் பணம் இல்லை. அதனால், சென்னையில் பெரிய இயக்குனராக இருக்கும் தனது நண்பனிடம் சென்று உதவி கேட்கலாம் என்று சென்னை கிளம்பி வருகிறார்.

சென்னைக்கு வரும் சசிகுமாருக்கு எதிர்பாராத விதமாக ஒரு படத்தை இயக்கும் வாய்ப்பு கிடைத்து விடுகிறது. முற்றிலும் அனுபவமே இல்லாத சசிகுமாருக்கு சூரி உதவி செய்கிறார்.

இந்நிலையில், தன்னுடைய நண்பனான நவீன் சந்திரா தன்னுடைய கதையை படமாக எடுக்க விரும்புகிறான் என்று தெரிந்ததும் தனது நண்பனுக்காக அந்த கதையை விட்டுக் கொடுக்கிறார் சசி.

நண்பனுக்காக விட்டுக்கொடுத்த மகிழ்ச்சியில் சொந்த ஊர் திரும்பும் சசிகுமாருக்கு அங்கு மேலும் ஒரு அதிர்ச்சி காத்திருக்கிறது. தனது காதலியான லாவண்யாவுக்கும், நண்பன் நவீன் சந்திராவுக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடந்து விடுகிறது. நட்புக்காக தனது காதலையும் துறக்கிறார் சசி.

நட்புக்காக இயக்குனர் கனவு, காதல், தியேட்டர் என எல்லாவற்றையும் இழந்த சசிகுமாரின் வாழ்க்கை என்னவாயிற்று? என்பதே மீதிக்கதை.

இதுவரையிலான படங்களில் கிராமத்துப் பாணியில் நடித்து வந்த சசிகுமார் இந்த படத்தில் நகரத்துவாசியாக வருகிறார். படம் முழுக்க துறுதுறுவென நடித்திருக்கிறார். காதல், நகைச்சுவை, அடாவடி என அனைத்து அம்சங்களையும் சிறப்பாக செய்திருக்கிறார். தனது முந்தைய படங்களைப்போல இப்படத்திலும் நட்புக்கே முக்கியத்துவம் கொடுத்து நடித்திருக்கிறார். ஆனால், நட்புக்காக கிடைக்கிற பணத்தையெல்லாம் விட்டுக்கொடுப்பது கொஞ்சம் ஓவர்தான்.

நாயகி லாவண்யா அழகாக இருக்கிறார். சிரிக்கும்போது கன்னத்தில் விழும் குழியில் இன்றைய இளைஞர்கள் விழுவார்கள் என்பது மட்டும் நிச்சயம். நடிப்பிலும் ஓகேதான். தமிழில் ஒரு ரவுண்டு வரலாம்.

முதல்பாதியை கலகலப்பாக நகர்த்தத சந்தானம் மிகவும் உதவியிருக்கிறார். இவரது ஒன்லைன் காமெடி சூப்பர். இரண்டாம் பாதியில் சென்னை வரும் சசியுடன் சூரி சேர்ந்துவிடுகிறார். சினிமாவில் வாய்ப்பு தேடுபவராக வரும் சூரியும், சசியும் சேர்ந்து செய்யும் அலப்பறை இரண்டாம் பாதியை கலகலக்க வைக்கிறது.

ஒரே படத்தில் ஆசை, காதல், நட்பு, தியாகம் என எல்லாவற்றையும் சொல்ல முயற்சித்திருக்கிறார் இயக்குனர் சாக்ரடீஸ். ஆனால், அதை திரைக்கதையில் சரியாக சொல்ல தடுமாறியிருக்கிறார். இன்றைய தியேட்டர்களின் நிலைமையை அழகாக எடுத்துக் கூறியதற்காக பாராட்டலாம். அதேபோல், சசிக்கும், தியேட்டருக்கும் உண்டான பிணைப்பை அழகாக காட்டியிருக்கிறார்.

தேவிஸ்ரீ பிரசாத் இசையில் பாடல்கள் ஆட்டம் போட வைக்கின்றன. பின்னணி இசையும் ஓகே ரகம்தான். ஜோமோன் டி ஜான் ஒளிப்பதிவில் வெளிநாட்டில் படமாக்கப்பட்ட பாடல் காட்சிகள் அற்புதமாக இருக்கின்றன.

0 comments:

Post a Comment