“அந்தக் கால வண்ணான் ‘வெளுத்ததும்’ இப்போது நாம் ‘வாஷ்’ பண்ணுவதும்” ஒரு சுவாரசியமான பார்வை !!
அந்தக் காலத்தில் சில நாட்களுக்கு ஒருமுறை வண்ணான் வீடு வீடாக வந்து ‘அழுக்கு’ எடுத்துக்கொண்டு போவான். துணிகளையெல்லாம் மூட்டைகளாகக் கட்டி, கழுதை மேல் சுமத்தி குளத்துக்கோ, கால்வாய்க்கோ வெளுக்க எடுத்துக்கொண்டு போவான். சவக்காரம் போட்டு, வெள்ளாவி வைத்து வெளுத்து, வெள்ளைத் துணிகளுக்கு நீலம் முக்கி, வெயிலில் காயப்போட்டு, எல்லா துணிகளையும் அள்ளிக் கட்டி கழுதைமேல் வைத்து வீட்டிற்கு எடுத்துக்கொண்டு போவான்.
அதன் பின் அந்தந்த வீட்டுத் துணிகளை அவற்றில் தான் சோரங்கொட்டை சாற்றால் தயாரித்த ‘வண்ணான் மை’யைக் கொண்டு போட்ட குறியைப் பார்த்து (ஒவ்வொரு வீட்டுத் துணிக்கும் ஒவ்வொரு விதமாக குறியீடு போடுவதற்கே ஒரு தனி கோர்ஸ் நடத்தலாம்) தனித் தனியாக பிரித்து, இஸ்திரி போட்டு, கட்டி, வீடுகளுக்குப் போய் கொடுப்பான். இதற்குக் கூலியாக சில வீடுகளில் காசு கொடுப்பார்கள், சிலர் தானியம் கொடுப்பார்கள், இன்னும் சிலர் வருடத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறை வரும் விளைச்சலில் இருந்து நெல், சோளம், பயறு வகைகளை கொடுப்பார்கள்.
அந்தக் காலத்தில் கொலைக் குற்றவாளிகள், கொலை செய்யப்பட்டவர்கள், விபத்தில் இறந்தவர்கள் போன்றவர்களை அடையாளம் காண, அவர்கள் அணிந்திருக்கும் துணிகளில் இருந்த ‘வண்ணான் குறி’ பயன்பட்டது.
இதில் இப்போது ஏற்பட்டுவிட்ட மாற்றங்கள்:
முதலாவது, சலவை தொழில் செய்பவரை சிறுவர் சிறுமியர் உட்பட அனைவரும் ‘அவன்’ ‘இவன்’ என்று ஒருமையில் பேசுவது மாறிவிட்டது.
கழுதைக்குப் பதிலாக டிவிஎஸ் போன்ற மொபெட்கள் உபயோகத்திற்கு வந்துள்ளன. இதனால் இப்போது தெருக்களில் கழுதை நடமாட்டமும் குறைவு.
வீட்டிற்கு வந்து ‘அழுக்கு’ எடுத்துக்கொண்டு போவது நின்றுவிட்டது.
வீடுகளில் ‘வண்ணான் கணக்கு’ எழுதுவதற்கென்றே வைத்திருக்கும் பழைய நோட்டு இப்போது யார் வீட்டிலும் இல்லை.
ஊருக்கு ஊர் லான்டிரிகள் (சலவை கடைகள்) வந்துவிட்டன. நாமே போய் நம் துணியை வெளுப்பதற்காக அங்கு கொடுத்துவிட்டு வருகிறோம். லான்டரிக் கடைக்காரர் கொடுக்கும் சீட்டை பத்திரமாக வைத்திருந்து, இரண்டு அல்லது மூன்று நாளைக்குப் பின் போய் அதைக் கொடுத்து வெளுத்த துணியை வாங்கிக்கொண்டு வருவதும் நாம்தான்.
உடைகளில் ‘வண்ணான் குறி’ எதுவும் இப்போது கிடையாது. அதற்குப் பதிலாக லான்டிரிகாரர் நமக்குத் தந்த சீட்டில் இருக்கும் நம்பரை ஒரு சிறிய அட்டையில் அல்லது துணித் துண்டில் எழுதி அதை நம் துணியில் டேக்-ஆக நூலால் கட்டி விடுகிறார்.
தெருவுக்குத் தெரு ‘அயரன்’ போட்டுத் தரும் கடைகள், தள்ளு வண்டிகள் வந்துவிட்டன. துணிகளை வீட்டில் துவைத்து, காய்ந்த பின் அங்கு கொடுத்து ‘தேய்த்து’ வாங்கிக் கொள்ளுவது பலருக்கு வழக்கமாகிவிட்டது.
வீட்டிலேயே துவைத்த துணியை தாமே அயர்ன் பண்ணிக்கொள்ளும் பழக்கமும் இப்போது மிக அதிகமாகிவிட்டது.
வெள்ளாவி வைத்து வெளுத்த துணிகளுக்கு ஒரு தனி வாசனை உண்டு. புது புத்தகங்களை உள் பக்கத்தில் முகர்ந்து பார்ப்பதில் கிடைக்கும் ரம்மியமான உணர்வு வெளுத்த துணியை உடுத்திருக்கும்போதும் கிடைக்கும். இப்போது இதை இழந்துவிட்டோம்.
‘வெளுப்பது’ என்ற வார்த்தையே இப்போது புழக்கத்திலிருந்து மறைந்துவிட்டது. தாமே துவைப்பவர்கள் ‘துவைப்பது’ என்ற சொல்லை பயன்படுத்துகிறார்கள். இதுவும் மறைந்து இப்போது ‘வாஷ்’ பண்ணினேன் என்று சொல்லுவது பரவலாக ஆகிவிட்டது.
0 comments:
Post a Comment