வாலி கஷ்டப்பட்ட காலத்தில் கண்ணதாசனின் உதவியாளராக வேலை பார்க்கக்கூடிய வாய்ப்பு வந்தது. அதை ஏற்க வாலி மறுத்துவிட்டார்.
"நல்லவன் வாழ்வான்'' படத்துக்குப் பிறகு, அண்ணா கதை, வசனம் எழுதி, ப.நீலகண்டன் இயக்கிய "எதையும் தாங்கும் இதயம்'' படத்துக்கு பாடல் எழுதும் வாய்ப்பு வாலிக்குக் கிடைத்தது.
"உன் அன்னை முகம் என்றெண்ணி - நீ என்னை முகம் பார்க்கின்றாய்! என் பிள்ளை முகம் என்றெண்ணி - நான் உன்னை முகம் பார்க்கின்றேன்'' என்பதுதான் அந்தப்பாடல்.
கே.ஆர்.ராமசாமி, எஸ்.எஸ்.ராஜேந்திரன் ஆகியோர் நடித்த படம் இது.
இந்தப் படத்துக்குப் பிறகும் வாலிக்குப் பெரிய வாய்ப்பு எதுவும் வரவில்லை.
வாலி சிரமப்படும் போதெல்லாம் அவருக்கு உதவி செய்த சிலருள் இசை அமைப்பாளர் ஜி.கே.வெங்கடேஷ் ஒருவர்.
ஒரு நாள் அவர் திடீரென்று வாலியைத் தேடி வந்தார்.
"வாலி! இனிமே நீ இரண்டு வேளை வயிறாரச் சாப்பிடலாம். உனக்கு மாதம் 300 ரூபாய் கிடைக்கிற மாதிரி ஒரு ஏற்பாடு பண்ணிட்டேன்... ஏறு, என் வண்டீல...'' என்று கையைப்பிடித்து இழுத்தார்.
"அண்ணே, எனக்கு ஆபீஸ் வேலை வேணாம்ணே.... பாட்டு எழுதற வேலைதான் வேணும்!'' என்று வாலி சொன்னார்.
"பாட்டு எழுதுற வேலைதாண்டா... கண்ணதாசன் பாட்டு எழுதச் சொல்லுவாரு... அதை நீ உடனே ஒழுங்காய்ப் பேப்பரில் எழுதணும். கவிஞர், உன்னை அசிஸ்டெண்டா வெச்சுக்க ஒத்துக்கிட்டாரு... உனக்கு அவர் மாதம் 300 ரூபாய் சம்பளம் தந்திடுவாரு...'' என்று வெங்கடேஷ் கூறினார்.
உடனே வாலி, "அண்ணே! கண்ணதாசன் கடைக்கு, எதிர்க்கடை விரிக்க நான் வந்திருக்கிறேன். அவர்கிட்டேயே உதவியாளனாகச் சேர்ந்தா, என் தனித்தன்மை காணாமல் போய்விடும்... டெய்லர் கிட்ட வேலைக்குச் சேர்ந்தா காலமெல்லாம் காஜாதான் எடுக்கணுமே தவிர, மெஷின்ல ஏத்தமாட்டாங்க...'' என்றேன்.
ஜி.கே.வி.யின் முகம் சிவந்து போயிற்று.
"நீ உருப்படமாட்டேடா'' என்று கோபமாகச் சொல்லிவிட்டுப் போய்விட்டார்.
இதுகுறித்து வாலி எழுதியிருப்பதாவது:-
"கண்ணதாசனின் கீழ் பணியாற்றுவது கேவலம் என்று நான் எண்ணவில்லை. அது எள் முனையளவு கூட, என் முன்னேற்றத்திற்கு உதவாது என்பதால்தான் அந்த வாய்ப்பை நான் விலக்கினேன்.
ஒரு கவிஞன் தனக்கென்று -ஒரு முகவரியோடு இருத்தல் மிகமிக அவசியமானது. நம்மிடம் இருக்கும் தமிழ், நயாபைசா அளவுதான் என்றிருந்தாலும்கூட... அதை ரூபாயாக்கி முன்னேற வேண்டும் எனும் முனைப்பு இல்லாது போயின் நமக்கென்று ஒரு ஸ்தானத்தை சமூகம் வழங்காது.
விஸ்வநாதன் -ராமமூர்த்தி, கே.வி.மகாதேவன் இவர்களது முக தரிசனமே கிட்டாத நிலையில், கோடம்பாக்கம் ஒரு தொலைதூரக் கனவாகவே ஆகிவிட்டது எனக்கு. தந்தை மறைந்து போனார்; தாயோ பம்பாயில் நோய்ப்படுக்கையில் இருக்கிறாள். எனக்காக நானே அழுது கொள்ள வேண்டுமே தவிர, ஈரம் துடைப்பார் எவருமில்லை.
இந்த லட்சணத்தில் சினிமாவை விடாமல் பிடித்துக்கொண்டு தொங்குவது, புத்திசாலித்தனமல்ல என்று புரிந்து கொண்டேன்.
மதுரையில் டி.வி.எஸ். அலுவலகத்தில் மிகப்பெரிய பதவியில் என் நண்பர் ஒருவர் இருந்தார். அவருக்கு வேலை கேட்டு ஒரு லெட்டர் எழுதினேன்.
அடுத்த வாரமே வந்து வேலையில் சேரச் சொல்லி அவர் பதில் எழுதியிருந்தார்.
சென்னைக்கு ஒரு பெரிய வணக்கத்தைப் போட்டுவிட்டு, மதுரைக்குப் போய்விடலாம் என்று முடிவு கட்டினேன்.
கைவசம் இருந்த நீலப் பெட்டியையும், சிகப்பு ஜமுக்காளத்தையும் தூக்கி கொண்டு மறுநாள் மதுரைக்கு புறப்பட இருந்தேன்.
அப்போதுதான் பாடகர் பி.பி.ஸ்ரீநிவாஸ் என் அறைக்கதவை தட்டினார்.
ஊரைவிட்டே நான் போவதாக இருக்கும் விஷயத்தை அவரிடம் சொல்லாமல், "சமீபத்தில் நீங்கள் பாடின நல்ல பாட்டு ஏதாவது இருந்தால் பாடிக்காட்டுங்க...'' என்று சொன்னேன்.
அவர் சிறிது சிந்தித்துவிட்டு வெளியாக இருக்கும், `சுமை தாங்கி' என்னும் படத்தில், கண்ணதாசன் எழுதி, விஸ்வநாதன் - ராமமூர்த்தி இசையமைத்திருந்த ஒரு பாடலை முழுவதும் எனக்குப் பாடிக் காண்பித்தார்.
பாட்டு வரிகள் என் செவியில் பாயப்பாய, மதுரைக்குப் பயணமாவதை ரத்து செய்து, சென்னையிலேயே தங்கிவிடுவது என்று முடிவு கட்டினேன்.
ஆம்! ஒரு சினிமாப்பாட்டு என் திசையை மாற்றியது; என் எதிர்காலத்தை நிர்ணயித்தது. நான் தொடர்ந்து போராடுவதற்கான தெம்பையும், தெளிவையும் என்னுள் தோற்றுவித்தது. சோர்ந்து போன என் சுவாசப் பையில் பிராண வாயுவை நிரப்பி, எனக்கு உயிர்ப்பிச்சை கொடுத்து என்னைப் புதுமனிதனாக்கியது.
`சுமை தாங்கி' படத்தில் இடம் பெற்று பின்னாளில் மிகமிகப் பிரபலமான அந்தப்பாடல், கண்ணதாசன் எனக்குச் செய்த கீதோபதேசமாகவே அமைந்தது.
எந்தத் துறையிலும் முட்டி மோதி முயற்சித்து முன்னுக்கு வரமாட்டாது, மனதொடிந்த எவரும் இந்தப் பாட்டை மந்திரம் போல் மனனம் செய்யலாம். அவ்வளவு அருமையான, ஆழமான, அர்த்தமான - அதே நேரத்தில் மிகமிக எளிமையான பாடல்.
பாடல் இதுதான்:
`மயக்கமா? கலக்கமா?
மனதிலே குழப்பமா?
வாழ்க்கையில் நடுக்கமா?
`வாழ்க்கையென்றால் ஆயிரமிருக்கும்;
வாசல் தோறும் வேதனையிருக்கும்;
வந்த துன்பம் எதுவென்றாலும்
வாடி நின்றால் ஓடுவதில்லை;
எதையும் தாங்கும் இதயமிருந்தால் -
இறுதிவரைக்கும் அமைதியிருக்கும்!'
`ஏழை மனதை மாளிகை யாக்கு;
இரவும் பகலும் காவியம் பாடு;
நாளைப் பொழுதை இறைவனுக் களித்து,
நடக்கும் வாழ்வில் அமைதியைத் தேடு;
உனக்கும் கீழே உள்ளவர் கோடி -
நினைத்துப் பார்த்து நிம்மதி நாடு!'
கண்ணதாசன் எழுதிய இந்த பாடலை, வரி வரியாக மனதிற்குள் சொல்லிப் பாருங்கள். வாழ்க்கையின் உண்மை விளங்கும்.
இவ்வாறு வாலி கூறியுள்ளார்.
வாலி சென்னைக்கு வந்து ஐந்தாண்டுகள் ஆகியிருந்தும், அதுவரை கண்ணதாசனை சந்திக்கவில்லை. அவரை உடனே சந்திக்க வேண்டும் என்று ஆவல் எழுந்தது.
அதன்படி, அடுத்த நாளே சென்று கண்ணதாசனை சந்தித்தார்.
0 comments:
Post a Comment