Pages

Subscribe:

Ads 468x60px

Friday, 14 February 2014

எதையும் கொறிக்கும் எலிகள்!

அண்டார்ட்டிகா தவிர உலகின் எல்லா இடங்களிலும் எலிகள் வாழ்கின்றன. சில இனங்கள் தரையிலும், சில பூமிக்கடியில் வளைகளிலும் மற்றும் சில மரங்களிலும் வாழ்கின்றன. சில எலிகள் குளிர்காலம் முழுவதும் தூங்காமல் வாழ்கின்றன. பூமிக்குள் உணவைச் சேமித்து வைக்கும் எலிகளில் முதன்மையானது பெருச்சாளி. Jerboas வகை எலிகள் மணல் குன்றுகளின் மீது ஓடுவதற்கு ஏதுவான நீளமான கால்களைக் கொண்டுள்ளன.

எலிகள் சுண்டெலியைவிடப் பெரியவை. எலிகளின் கால்களில் ஐந்து விரல்கள் உண்டு. உடலில் முடி நிறைந்திருக்கும், மீசை உண்டு, கடினமான வால் உள்ளது. சுமாரான பார்வைத்திறன் உண்டு. மரம், பிளாஸ்டிக், அலுமினியம், காரீயம், தாமிரம் போன்றவற்றைக் கடிக்கும் அளவுக்குக் கூர்மையான பற்கள் உண்டு. தான் வாழும் சுற்றுச்சூழலுக்கு ஏற்றவாறு எலிகளின் நிறமும் எடையும் வேறுபடும். எலிகள் தினந்தோறும் அவற்றின் எடையில் ஐந்து முதல் இருபது சதவீதம் வரை சாப்பிடுகின்றன. கருவுற்ற பெண் எலிகள் மனஅழுத்தம் அல்லது உணவுத் தட்டுப்பாட்டின் காரணமாகத் தனது கருவைத் திரும்ப உறிஞ்சும் (reabsorb) அசாதாரணத் தன்மையைப் பெற்றிருக்கின்றன.

எலிகளுக்கு வலிமையான தாடைத் தசை உள்ளது. ஒரு ஜோடி வெட்டும் பற்கள் உள்ளன. வருடத்திற்கு 12 சென்டிமீட்டர் வீதம் வாழ்நாள் முழுதும் அவற்றின் பற்கள் வளர்த்துக்கொண்டே இருக்கும். பற்களின் மேல் உள்ள பற்பூச்சு (Enamel) வலிமையானது. அதனால்தான் உலோகம் போன்ற கடினப் பொருள்களையும் எலியால் எளிதாகக் கடிக்க முடிகிறது.

உலகின் பல பகுதிகளில் எலிகளைச் சாப்பிடுகிறார்கள். பெருச்சாளியில் புரதச்சத்து இருப்பதால் விரும்பி உண்கிறார்கள். வயல் பக்கம் கிடைக்கும் வெள்ளை எலி அநேக மக்களால் உண்ணப்படுகிறது. இந்திய 'மிஸ்மி' கலாசாரத்தில் எலிகள் பாரம்பரிய உணவாக உள்ளன. வட இந்தியாவில் முசாகர் இனத்தவர் எலியை உணவுக்காக வியாபாரரீதியாக வளர்கின்றனர். கானா, பிலிப்பைன்ஸ், வியத்நாம், தாய்லாந்து, கம்போடியா போன்ற நாடுகளில் எலியை உண்கின்றனர். வளர்ப்பு பிராணிகளுக்கும் எலி உணவாகக் கொடுக்கப்படுகிறது.

0 comments:

Post a Comment